காகபுசுண்டர் ஞானம் 31 - 35 of 79 பாடல்கள்

காகபுசுண்டர் ஞானம் 31 - 35 of 79 பாடல்கள்

     
31. உண்கலாம் பிரமத்தி லடங்கும் போதே
    உறுதியுள்ள அண்டத்தி லுருகிப் பாயுந்
திங்கலாந் தோணுமடா அமர்தச் சீனி
    தித்திப்புப் பாலுடனே திடமாய் மைந்தா!
தங்கலாந் தேகமது அறியா மற்றான்
    சட்டையுமே கழன்றுமிகத் தங்கம் போலே
பொங்கலாம் மெய்ஞ்ஞானத் தீபத் தாலே
    பூரித்துப் பார்த்திடவே புவன மொன்றே.

விளக்கவுரை :

32. ஒன்றான பிரமமே வெவ்வே றாக
    உலகத்தி லனந்தமடா கூத்து மாச்சு;
நன்றாச்சுத் தீதாச்சு நாலு மாச்சு
    ஞாயிறு திங்களென்ற பேருண் டாச்சு;
குன்றாச்சு ஊர்வனகள் அனந்த மாச்சு;
    குருக்களென்றுஞ் சீடனென்றுங் குறிக ளாச்சு
நன்றாச்சு நாதவிந்தும் அடங்கி நின்ற
    நாதனையு மொருமனமாய் நாட்டு வாயே.

விளக்கவுரை :
   
33. நாட்டுவார் சித்தரெல்லாம் பேத மாக
    நலம் போலே சாத்திரங்கள் கட்டி னார்கள்!
பூட்டியே மனிதரெல்லாம் நூலைப் பார்த்துப்
    பூரணமாய் அண்டமதைப் பாரா மற்றான்
காட்டிலே திரிந்தலைந்த மானைப் போலே
    கபடமாய் வாய்ஞானம் பேசு வார்கள்;
கூட்டிலே அடைந்திருக்கும் குயிலைப் பாரார்
    கூறாத மந்திரத்தின் குறியைப் பாரே.

விளக்கவுரை :
    
34. குறியென்ற உலகத்திற் குருக்கள் தானும்
    கொடியமறை வேதமெல்லாங் கூர்ந்து பார்த்தே
அறியாமற் பிரமத்தைப் பாரா மற்றான்
    அகந்தையாய்ப் பெரியோரை அழும்பு பேசி
விரிவான வேடமிட்டுக் காவி பூண்டு
    வெறும்பிலுக்காய் அலைந்திடுவான் நாயைப் போலே
பரியாச மாகவுந்தான் தண்டு மேந்திப்
    பார்தனிலே குறட்டிட்டு நடப்பான் பாரே.

விளக்கவுரை :
    
35. பாரப்பா சீடர்களை அழைப்பான் பாவி;
    பணம்பறிக்க வுபதேசம் பகர்வோ மென்பான்;
ஆரப்பா பிரமநிலை காட்டா மற்றான்
    ஆகாசப் பொய்களையு மவன்தான் சொல்வான்;
நேரப்பா சீடனுக்குப் பாவ மாச்சு;
    நிட்டை சொல்லுங் குருக்களுக்குத் தோட மாச்சு;
வீரப்பா அடங்குகின்ற இடத்தைப் பாரான்
    விதியாலே முடிந்ததென்று விளம்பு வானே.

விளக்கவுரை :

காகபுசுண்டர் சித்தர், காகபுசுண்டர் ஞானம், kakapusundar, kakapusundar gnanam, siththarkal