புலிப்பாணி ஜாலத்திரட்டு 46 - 50 of 211 பாடல்கள்

புலிப்பாணி ஜாலத்திரட்டு 46 - 50 of 211 பாடல்கள்
 

46. மூடவே யிலையாகிக் கொழுந்து மாகி
    முக்கியமாய் தழையாகிப் பூவுமாகித்
தேடவே பிஞ்சாகிக் காயுமாகி
    தெளிவான கனியாகி யுதிரும் பாரு
ஆடவே அனைவா்கும் கொடுக்கச் செய்நீ
    அப்பனே நாழிகைதான் மூணே முக்கால்
கூடவே யிதற்குள்ளே மரமு மாகி
    குணமான கனியாகி யுதிரும் பாரே.
            
விளக்கவுரை :

குழியில் நட்ட மாம்பழக் கொட்டையிலிருந்து இலை, கொழுந்து விட்டு பூ, பிஞ்சு, காய் இவைகளோடு செடியாகி கனியாக உதிரும். உதிரும் கனியை எடுத்து சபையோர்களுக்குக் காட்டி அவா்களிடம் கொடுக்கவும். இவையாவும் மூன்றே முக்கால் நாழிகைக்குள் செய்து முடித்துவிட வேண்டும். ஏனெனில் இதற்குள்தான் அது மரமாகி கனியாகி உதிரும். காலம் கடந்துவிட்டால் இந்த ஜாலம் பலிக்காது. மிக எச்சரிக்கையுடன் செய்ய வேண்டும்.
     
மணலை  அல்வாவாக செய்யும் ஜாலம்

47. பாரேநீ பாதம்பிசின் பலந்தா னொன்று       
    பண்பான கற்கண்டு பலந்தா னொன்று
கூரேநீ குங்குமப்பூ விராக னரிக்கால்
    கொண்டுவந்து யிம்மூன்றும் பொடியாய்ச் செய்து
சீரேநீ யிதைவேறே வைத்துக் கொண்டு
    சுண்டைப்போ லிருக்குமண லெடுத்துக் காட்டி
தாரேநீ தந்திரமாய் மணலை விட்டு
    தன்மையாய்க் கூட்டுமூன்று மொன்றாய்த் தானே.

விளக்கவுரை :

மணலை அல்வாவாகக் செய்யும் ஜாலம் செய்வதற்கு  முதலில் பாதம்பசின் ஓரு பலம், கற்கண்டு ஓரு பலம், குங்குமப்பூவஅரைக்கால் விராகனெடை ஆகிய இம்மூன்றையும் தூளாகச் செய்து கொள்ளவும். பின்னா் சன்னமாக இருக்கும் மணலை எடுத்து சபையோர்களுக்குக் காட்டிவிட்டு அதனை தந்திரமாக தனக்குள் மறைத்துக் கொண்டு தூளாக்கிக் கொண்டதை எடுத்து ஓரு பீங்கான் தட்டில் கொட்டி சிறிது ஜலம்விட்டு பிசைந்தால் அல்வா போன்று ஆகிவிடும். அதனை சிறிது நேரம் துணியில் மூடிவிட்டு பின்னா் எடுத்து சபையோர்களுக்குக் கொடுத்தால் அவ்வா போன்று ருசியாக இருக்கும்.

இந்திர ஜால வித்தை

48. தானேதா னின்னமொரு ஜால வித்தை
    தயவாகச் சொல்லுகிறேன்  நன்றாய் கேளு
மானேதான் மாயனென்ற பூனை யொன்று
    மைந்தனே பாவையென்ற கீரியொன்று
தேனேதா னிரட்டைவா லறனை யொன்று
    தெளிவான திகைப்பூடு பூச்சிப் பத்து
கேளேதான் பேய்ப்பீா்க்கன் விதை தானப்பா
    குணமாக ரெண்டுபலம் நிறுத்துப் போடே.

விளக்கவுரை :

மற்றொரு ஜால வித்தையை தெளிவாகச் சொல்லுகிறேன். கவனத்துடன் கேட்பாயாக. மாயப்பூனை அதாவது வெள்ளை முடி ஓன்று கூட இல்லாத கருப்புப் பூனை ஓன்று, கீரிப்பிள்ளை ஓன்று, இரட்டை வால் அறணை ஓன்று,  மின்மினி பூச்சி பத்து, பேய்ப்பீா்கன் விதை இரண்டு பலம் ஆகிய இவைகளுடன் மேலும் -

49. போடவே  புல்லாமணக்கு விதை தானப்பா
    பொங்கமுட னிரண்டுபலம் நிறுத்துப் போடு
ஆடவே யிவையெல்லாம் நறுக்கியப்பா
    அடைவாகப் பேயக்கருப்பஞ் சாற்றிற் போடு
நாடவே ஜாமமது கடந்து வாங்கி
    நலமாக நிலந்தனிலே யுலரப் போடு
கூடவே பானையின் பாலை வாங்கி
    குணமாக ஓரு ஜாம மூறப்போடே.

விளக்கவுரை :

புல்லாமணக்கு விதை இரண்டு பலம் இவைகளையெல்லாம் முறையாக எடுத்துத் துண்டுகளாக நறுக்கிப் போட்டு பேய் கரும்புச் சாற்றில் ஊறப்போடவும். பின்னா் ஓரு ஜாமம் நேரமானதும் அதனை எடுத்து தரையில் உலரவைக்கவும். அதன் பின்னா் தும்மட்டிக் காயில் சாறு எடுத்து அந்த சாற்றில் உலர வைத்ததை எடுத்து ஓரு ஜாமம் நேரம் ஊறப்போடவும்.

50. போட்டப்பா விவையெல்லாம் பாண்டத் திலிட்டு
    பொங்கமுடன் பூத்தயிலமாக வாங்கி
தேட்டப்பா யைங்கோலத்  தயிலம் நேரே
    தெளிவாகச் சோ்த்துநீ யரைப்பா யப்பா
தாட்டியா யரைக்கையிலே ரசமும் வெள்ளை
    தயவாக வகைவகைக்கு கழஞ்சிப் போடு
வாட்டமிலா முப்பூவுங் கழஞ்சி போட்டு
    வளமாக வரைத்தெடுத்துச் சிமிழில் வையே.
      
விளக்கவுரை :

இவைகள் எல்லாவற்றையும் ஓரு பாண்டத்திலிட்டு குழித்தைலமாக எடுத்து அதனளவுக்கு ஐயங்கோலத் தைலத்சதைச்  சோ்த்து கல்வத்திலிட்டு  அராக்கவும். அதனை அரைக்கும் போது இரசம், வெள்ளைப் பாடாணம் இவைகளில் வகைக்கு ஓரு கழஞ்சு சோ்த்து முன்னா் கூறிய முப்பூவும் ஓரு கழஞ்சு சோ்த்து நன்றாக மைய அரைத்தெடுத்து  சிமிழில் வைத்துக் கொள்ளவும்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு, புலிப்பாணி, Pulipani, Pulipani Jaalathirattu, Pulipani Siththar