புலிப்பாணி ஜாலத்திரட்டு 166 - 170 of 211 பாடல்கள்

புலிப்பாணி ஜாலத்திரட்டு 166 - 170 of 211 பாடல்கள்

166. கினவிலே  பெண்போற்போய்  கடிந்து  சொல்லும்
    கனிவாக  யின்னாளை  யழைத்து  நீதான்
மனவியே  யின்னதெல்லாங்  கொடுத்து  நீயும்
    மீறாதே  யவன்சொல்லை  யெது  சொன்னாலும்
பனுவலாற்  றேவியுட  வருள்தான்  பெற்றேன்
    பண்புள்ளோன்  நல்லகுண  மென்று  கூறும்
           அனுவியே  சொற்பனந்தான்  வராசி  யாலே
அப்பனே  ஜெகமுழுதும்  வணங்கும்  பாரே.

விளக்கவுரை :
   
கனவிலே  பெண்  போலவே  வந்து  போகும்.  கனிவாக  அவளை  அழைத்து  கேட்பதையெல்லாம்  கொடுத்து  அவன்  எது  சொன்னாலும்  அப்படியே  அவள்  கனவில்  போய்ச்  சொல்லும்.  அவன்  தேவியின்  அருள்பெற்றவன்  நல்ல  குணமுள்ளவன்  என்றும்  சொல்லும்.  வராகியின்  அருளினால்  உலகம்  முழுதும்  உன்னை  வணங்கும்.

பிரேமை  பிடித்து  அலைதல்

167. பாரடா  பேய்  நரியாய்  திரிந்தபோது
    பாவமில்லை  யதின்சொறையொன்றில்  வாங்கி
சேரடா  வரிசியது  உலரப்  போடு
    சேர்த்தப்பா  சுடலையுட  கருவுங்  கூட்டிக்
கூறடா  நிழல்தனி  லுலர  வைத்துக்
    கொடிதான்  வரிசிகொஞ்ச  மறுசுவையி  லன்னம்
வீரடா  சத்துருவுக்  கிட்டபோது
    விதமான  பிரமைகொண்  டலைவான்  பாரே. 

விளக்கவுரை :

மேலும் , பேய் , நரி  போல்  திரிவதினால்  பாவம்  எதுவும்  இல்லை.  சொறை  ஒன்றை  எடுத்து  அதில்  அரசியைக்  கலந்து  உவர்த்தி  எடுத்து  அதனுடன்  சுடலையுடைய  கருவுங்  கூட்டி  மீண்டும்  உலரவைத்து  எடுத்து  அந்த  அரசியல்  கொஞ்சம்  எடுத்து  சமைத்து  அறுசுவையுடன்  அந்த  சாதத்தைச்  சேர்த்து  எதிரிக்கு  உண்ணக்  கொடுத்தால்  பிரமை  பிடித்து  அலைவான்.

168. பாரப்பா  மிளகு  தக்காளிச்  சாறு
    பண்பாக  மூன்றுநா  ளாறுவேளை
கூறப்பா  கொடுத்திடவே  தீரும்  பாரு
    குணமாக  நிவர்த்தியாப்  போகுங்  கண்டாய்
சீரப்பா  பத்தியந்தா  னுப்பாகாது
    சிறப்பாக  வேழாநா  ளெல்லாங்  கூட்டு
வீரப்பா  போகருட  கடாட்சத்தாலே
    விதமாகப்  புலிப்பாணி  பாடினேனே. 
 
விளக்கவுரை :

எதிரியானவன்  திருந்தி  உணர்ந்து  வணங்கி  வந்தால் - மிளகு , தக்காளி  சாறு  ஆகியவற்றில்  அதனை  கலந்து  மூன்று  நாள் , ஆறு  வேளை  கொடுத்தால்  அவன்  பிரமை  அகன்று  குணமடைவான்.  இதற்கு  உப்பு  நீக்கி  பத்தியத்துடன்  இருக்க  வேண்டும்.  ஏழாவது  நாள்  எல்லாவற்றையும்  சாப்பிடலாம்.  இதனை  போகருடைய  அருளினால்  புலிப்பாணியகிய  நான்  உரைத்துள்ளேன்.

மோடி  வித்தை

169. பாடினே  னின்னமொரு  மோடி  வித்தை
    பண்பான  நடன  சிதம்பரத்தைக்  கீறி
ஆடினே  னட்சரமும்  பீஜ  மெல்லாம்
    அடைவாகத்  தானடைத்  தருளை  யோதிக்
கூடியே  ஒம் ... ஸ்ரீரீங் ... கிலியும் ...
    குணமாக  அவ்வும் ... உவ்வும் ... மவ்வும் ... சிவ்வும் ...
நாடியே  நமசிவாய  சுவாஹா  வென்று
    நலமாக  லட்சமுரு  ஜெபந்தா  னோதே.

விளக்கவுரை :

மற்றொரு  மோடி  வித்தையைப்  பற்றிக்  கூறுகிறேன்  கேட்பாயாக.  நடன  சிதம்பர  சக்கரத்தைக்  கீறி  அட்சர  பீஜங்களை  அதில்  முறையாக  எழுதி  " ஒம் ... ஸ்ரீரீம் ... கிலியும் ... அவ்வும் ... உவ்வும் ...மவ்வும் ... சிவ்வும் ... நமசிவாயய ... சுவாஹா ..."  என்று  இலட்சம்  தடவைகள்  ஜெபிக்கவும்.

170. ஒதியே  சக்கரத்தை  வைத்துக்  கேளு 
    உத்தமனே  சோடசமாம்  பூஜைசெய்து
சோதியே  சக்கரத்தை  வைத்துக்  கொண்டு
    சுகமாக  மோடிவைக்கச்  சொல்லக்  கேளு
ஆதியே  கோயில்முன்பு  குளத்தின்  முன்பு
    அப்பனே  யம்பலங்கள்  தெருவி  லப்பா
தீதிலா  போகருட  கடாட்சத்  தாலே
    திடமாக  மோடிவைக்கும்  வித்தை  கேளே.

விளக்கவுரை :

அந்தச்  சக்கரத்தை  எடுத்து  அங்கு  சோடச  பூசையை  செய்து  எடுத்து  வைத்துக்  கொள்ளவும்.  இப்போது  மோடி  வைக்கச்  சொல்லுகிறேன்  கேட்பாயாக.  கோயில்  முன்பு  அல்லது  குளத்தின்  முன்பு , மைதானம் , பணக்காரர்கள்  இருக்கும்  தெரு  போன்ற  இடங்களில்  மோடி  வைக்கும்  வித்தையைப்  பற்றிக்  கூறுகிறேன்  கேட்பாயாக. 

புலிப்பாணி ஜாலத்திரட்டு, புலிப்பாணி, Pulipani, Pulipani Jaalathirattu, Pulipani Siththar