புலிப்பாணி ஜாலத்திரட்டு 191 - 195 of 211 பாடல்கள்
தண்டாயுதபாணியின் அருள்
191. தானான சிவகிரியில் தண்டாயுதபாணி
தாதாவை மென்மேலும் பணிந்து இந்திரன்
தேனான கெளசிகர் போகருட னிவர்கள்
தெளிவாக முன்யுகத்தில் மூவரப்பா
கோனான கலியுக மிருநூற்றைந்தில்
கொற்றவனே புலிப்பாணி பூசித்தேன் பார்
மானான அஷ்டசித்தி கோடா சித்தி
மைந்தனே சித்தருட நடனந் தானே.
விளக்கவுரை :
சிவபெருமானுக்குரிய கயிலை மலையில் சிறப்புற்றுத் திகழும் தண்டாயுதபாணியை மனமுருகி பணிந்து போற்றிட இந்திரன் , கௌசிகர் , போகர் இம்மூவரும் முன் யுகத்திலும் , கலியுகத்தில் இருநூற்று ஐந்தில் (ஜாலத்திரட்டு -200) புலிப்பாணியாகிய நான் போற்றி பூஜித்தேன். அஷ்ட சித்தியும் , கோடா சித்தியும் சித்தர்கள் பெற்று சிறப்புற்றவர்கள்.
192. தானானா ராஜரொடு குருக்கள் பெண்கள்
தயவாக வேதியர்கள் சிறுவ ரேழை
பானான விவர்களுக்கே யிடுக்க மான
பஞ்சமற் றொழில்முறைகள் செய்தாற் றோஷங்கள்
கோனாகச் செய்தவர்கள் நரகில் வீழ்வார்
குற்றம்வரும் நற்பதவி கிட்டா தப்பா
தேனான போகருட கடாட்சத் தாலே
தெளிவாகப் புலிப்பாணி பாடினேனே.
விளக்கவுரை :
ஆதலின் அரசர்கள் , குருமார்கள் , பெண்கள் , வேதியர்கள் , சிறுவர்கள் , ஏழைகள் ஆகிய இவர்கள் பாதகச் செயல்களைச் செய்வார்களேயானால் தோஷம் உண்டாகும். இதனால் நரகில் வீழ்வார்கள். கஷ்டத்தை அனுபவிப்பார்கள். தண்டாயுதபாணியின் அருள்கிடைக்காது. இதனை போகருடைய அருளினால் மிகத் தெளிவாக புலிப்பாணியாகிய நான் உரைத்துள்ளேன்.
சாஸ்திரத்தைப் பழித்தால்
193. பாடியே சாஸ்திரத்தைப் பழித்த பேர்கள்
பண்பில்லா கூன்குருடு ஊமையாகி
வாடியே சப்பாணி நொண்டி யாகி
வளமிலாச் செவிடாகி ரூபங் கெட்டுச்
சாடியே யவர்களெல்லாம் நாசமாகிச்
சாவார்கள் பெண்பிள்ளை யெல்லாஞ் சேர்த்து
கூடியே வியாதியிலே யமிழ்ந்து மாய்ந்து
கொடிதான் நரகத்தி லழுந்து வாரே.
விளக்கவுரை :
சாஸ்திரத்தைப் பழித்தோர்களுக்கு உண்டாகும் பாதகங்களைக் கூறுகிறேன் கேட்பாயாக. பண்பில்லாது சாஸ்திரத்தைப் பழிப்பவர்கள் கூன் , குருடு , ஊமை , சப்பாணி , நொண்டி , செவிடு , குஷ்டம் ஏற்பட்டு உடல் விகாரம் போன்ற பாதிப்புகளுடன் , பெண்டு பிள்ளைகளும் நோயினால் பாதிக்கப்பட்டு இறப்பார்கள் . இதுபோன்ற கொடியவர்கள் நரகத்தில் வீழ்வார்கள்.
சக்திபூஜையின் பலன்
194. வாரான ஐயும்... நமோ... பகவதே...ஓம்...
மகாரூபி மஹாமாயி மகத்வ சக்தி
தேராக சர்வதாரணி சுவாஹா வென்று
தெளிவாக லட்சமுரு ஜெபித்துத் தீரு
சார்வாகத் தர்ப்பணத் தோடு மன்னஞ்
செயமாகப் பூஜையது திறமாய்ச் செய்நீ
கூறான மஹாமாயை சித்தி யாச்சு
குணமாக வதின்பெருமை கூறக் கேளே.
விளக்கவுரை :
ஐயும்... நமோ... பகவதே... ஓம்... மகாரூபி , மஹாமாயி , மகத்துவ சக்தி , சர்வதாரணி , சுவாஹா என்று மனசுத்தியுடன் இலட்சத் தடவைகள் ஜெபிக்கவும். பின்னர் தர்ப்பணம் அன்னதானம் பூஜை இவைகளை முறையோடு செய்தால் மஹாமாலை சித்தியாகும் . இதன் பெருமையைக் கூறுகிறேன் கேட்பாயாக.
195. கேளடா சக்தியைத்தான் பூஜை செய்யக்
கேலிசெய்து சோதனைகள் பார்க்க வந்தால்
நாளடா மந்திரத்தைத் தியானஞ் செய்து
நலமான வஸ்துசுத்தி பால் பூவென்று
வாளடா தியானித்து நினைத்த போது
வளமான பால்பூவா விருக்கும் பாரு
ஆளடா போகருட கடாட்சத் தாலே
அப்பனே புலிப்பாணி பாடினேனே.
விளக்கவுரை :
சக்தியை மனதாரப் பூஜை செய்தால் உன்னைக் கேலி செய்து சோதனைகள் செய்து பார்த்தால் மந்திரத்தை தியானம் செய்து , வஸ்து , சுத்தி , பால் , பூவென்று தியானித்து சக்தியை நினைத்தால் எங்கும் பால் , பூவாக இருக்கும். இதனை போகருடைய அருளினால் புலிப்பாணியாகிய நான் உரைத்துள்ளேன்.