புலிப்பாணி ஜாலத்திரட்டு 196 - 200 of 211 பாடல்கள்
பிரத்தியங்கிரா தேவி மந்திரமும் - சக்ரமும்
196. தானேதா னின்னமொன்று சொல்லக் கேளு
தயவாகப் பிரத்தியங்கிரா தேவி மந்திரம்
வானேதான் சகல சத்ரு சம்மாரி
வளமாக சகல சம்பத்து மீவான்
தேனேதான் கிருபைவா ரிதியதானான்
தெளிவான கார்மேக வடிவ முள்ளாள்
கேனேதான் சிக்கமுகஞ் சிங்கப்பல்லி
கொடிய முக்கண்ணு மக்கினி சுவாலை யெண்ணே.
விளக்கவுரை :
நலமுடைய மற்றொரு பிரத்தியங்கரா தேவி மந்திரம் பற்றிக் கூறுகிறேன் கவனமாகக் கேட்கவும். இம்மந்திர சக்தியினால் எவ்வளவு எதிரிகள் இருந்தாலும் அவர்களை அகற்றி சகல சம்பத்துகளையும் கொடுப்பாள். பிரத்தியங்கிரா தேவி. கிருபைகளை அளிக்கவல்ல அவள் கார்மேக நிறமுடையாள். சிங்க முகமும் , சிங்கப்பல்லும் , கோபமுடைய முக்கண்ணும் உடைய அவள் அக்கினி சுவாலை போன்றவள்.
197. எண்ணவே யஷ்டதிக்கும் நிறைந்த தேவி
இலகு மாயிரத்தோ டாயிரங்கை யுள்ளாள்
பண்ணவே கிண்கிணி மாலை கொண்டாள்
பக்தர்கள் தன்சத்துரு நாசஞ் செய்வாள்
அண்ணவே யுதிரமது பானஞ் செய்வாள்
அடைவான சகல சாஸ்திரமும் வல்லாள்
நண்ணவே தியானித்துச் சரணம் பண்ணு
நாயகனே மூலமினி சொல்லக் கேளே.
விளக்கவுரை :
அதுமட்டுமின்றி - எட்டுத் திக்கிலும் நிறைந்தவள். ஆயிரம் கைகளையுடையவள். கிண்கிணி மாலையைச் சூடியவள். அவளுடைய பக்தர்களின் எதரிகளை அழித்தொழிப்பவள். இரத்தத்தைக் குடிப்பவள். எல்லா சாஸ்திரங்களையும் அறிந்தவள். இவ்வளவு பெருமைகளையுடைய பிரத்தியங்கிரா தேவியை தியானித்த சரணமடைபவர்களை காத்து ரட்சிப்பவள். ஆதலின் அவளை தியானிக்க மூலமந்திரத்தைச் சொல்லுகிறேன் கேட்பாயாக.
198. கேளப்பா ஒம் சுவாஹா ... சிம்மே பிரத்தியங்கிரே
கெணிதமுடன் உம் ... படு ... ஒம் ... ஆம் ... யென்று
நாளப்பா இரீங் ... ஸ்ரீயுங் ... கிலிவு மென்று
நலமான சிம்மமுகி ருத்திர காளி
சூளப்பா வட்ட முக்கோண மிட்டுச்
சுகமாக வதின்மேலே யென்கோணஞ் சதுரம்
ஆளப்பா வட்டமதில் இச்சமென்றிட்டு
அறிய முக்கோணமேல் முனையிற் கேளே.
விளக்கவுரை :
"ஒம் ... சுவாஹா ... சிம்மே பிரத்தியங்கிரே ... உம் ... படு ... ஒம் ... ஆம் ... இரீங் ... ஸ்ரீயும் ... கிலியும் ..." என்றும் , "சிம்மமுகி , ருத்திர காளி" என்று கூறி வட்டத்துடன் கூடிய முக்கோணம் போட்டு அதன்மேல எண்கோண சதுரம் போட்டு வட்டத் தில் இச்சம் என்று போட்டு முக்கோணத்தின் முனையில் போட வேண்டியதைக் கூறுகிறேன் கேள்.
199. கேளடா ரீங்கார மதிலே யிட்டு
கெணிதமுள்ள இடக்கோணம் உம்மை நாட்டி
ஆளடா வலக்கோணம் படுவே யென்று
அடைவான என்கோணம் ரீயைப் போட்டு
நாளடா நாற்கோணம் வலமேல் மூலை
நலமாக ஆம்யென்று பதித்துப் போடு
சூளடா இடக்கோணம் மேலே யப்பா
சுகமாகக் கிரோம்யென்று சூட்டிப் போடே.
விளக்கவுரை :
முக்கோண முனைகளில் "ரீங்" காரம் போட்டு , கோணத்தின் அடியில் இடது முனையில் "உம்" என்று போட்டு , வலது முனையில் "படு" என்று போட்டு , எண் கோணத்தின் முனைகளில் "ரீங்" என்று போடவும் , நாற்கோணத்தின் வலது பக்க மேல் மூலையில் "ஆம்" என்று போடவும். இடது முனையில் "கிரோம்" என்று போடவும் மேலும் -
200. போடேநீ யிடக்கோணங் கீழேயப்பா
புங்கமுடன் புரோம்யென்று பதித்து வைப்பாய்
ஆடேநீ வலக்கோணங் கீழே தானும்
அப்பனே ஸ்ரீமென்று அடைவாய்ப் போடு
சூடேநீ யட்சரங்கள் கிரந்தந் தன்னிற்
சூட்டினால் வலிமையடா தகடோ தங்கம்
நாடேநீ லட்சமுரு ஜெபித்துப் பாரு
நாயகனே தற்பணமு மோமஞ் செய்யே.
விளக்கவுரை :
அதன் கீழ்ப்புறம் இடது முனையில் "புரோம்" என்றும் வலது முனையில் "ஸ்ரீம்" என்றும் போட வேண்டும். இந்த அட்சரங்களை கிரந்த எழுத்தில் தங்கத்தகட்டில் கீறி எழுதவேண்டும். இந்த எழுதிய மந்திர தகட்டை வைத்து இலட்சம் தடவைகள் ஜெபிக்க வேண்டும். பின்னர் தர்ப்பணம் , ஹோமம் செய்யவேண்டும்.