புலிப்பாணி ஜாலத்திரட்டு 206 - 211 of 211 பாடல்கள்
புலிப்பாணி ஜாலத்திரட்டு 206 - 211 of 211 பாடல்கள்
அயச்செம்பு
206.பாடியே அயச்செம்பு சொல்லக் கேளு
பண்பரங் கற்றாமரையின் கிழங்கை யாட்டி
கூடியே இரும்புகளின் மேலே பூசிக்
கூசாமற் புடம்போடச் செம்பதாகும்
ஆடியே அயச்செம்பு ஏழதாகம்
அப்பனே வெள்ளியிடை யொன்று கூட்டி
நாடியே யுருக்கிடவே ஏழுமாற்று
நாயகனே தப்பாது செய்துக் கேளே.
விளக்கவுரை :
தமிழில் உயிர் எழுத்துக்கள் பன்னிரெண்டாகும் அதில் முதல் எழுத்து ' அ ' விலிருந்து ' ஔ ' வரை ஒவ்வொரு உயிர் எழுத்துகளைப் போடவேண்டும். அதனை சக்கரத்தைச் சுற்றிப் போடவேண்டும். சக்கரத்தில் சுற்றிப் போட்டால் உயிர் எழுத்து பன்னிரெண்டாகும்.
207. கேளடா அயச்செம்பொன்று தங்க மொன்று
கெணிதமுடன் தானுருக்கித் தகடாய்த் தட்டி
தூளாகப் பொடிசெய்து நறுக்கி யப்பா
சுத்திசெய்த ரசமிரண்டுங் கூடவிட்டு
நாளான கெந்தியிடை நாலுங் கூட்டி
நாயகனே தாரமிடை அரையுஞ் சேர்த்து
வாளான பொற்றலையின் சாற்றா லாட்டி
வளமாக வுரலிலிடு குப்பிக் கேற்றே.
விளக்கவுரை :
அந்த அயச்செம்பில் ஒரு எடையும் , தங்கம் ஒரு எடையும் சேர்த்து நன்றாக உருக்கி தகடாகத் தட்டிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர் அதில் சுத்தி செய்த இரசம் இரண்டு எடை சேர்த்து அத்துடன் கந்தகம் நாலு எடையும் , தாளகம் அரை எடையும் சேர்த்து அதில் கரிசலாங்கண்ணிச் சாறுவிட்டு நன்றாக அரைத்தெடுத்து குப்பில் போட்டுக் கொள்ளவும்.
208. ஏற்றப்பா சட்டிக்குள் மணல் விரல்தா நாலு
இதமாக நீகொட்டி குப்பிக்கே தான்
வாற்றமா மண்சீலை ஏழுசெய்து
வாய்மூட மாக்கல்லை யுரைத்து மூடு
சாற்றவே குப்பிவைத்து மணலைக் கொட்டிச்
சார்வாகக் குப்பிவாய்க் கழுத்து மட்டும்
ஊற்றமாய் நாற்சாம மெரித்தே யாற்றி
உத்தமனே பிரிக்கச் செந்தூர மாமே.
விளக்கவுரை :
ஒரு சாட்டியை எடுத்து அதில் நான்கு விரற்கடை அளவுக்கு மணலைக் கொட்டி குப்பிக்கு எழு சீலை மண் செய்து அதன் வாயை மூடி மாக்கல்லை அரைத்து மூடி அந்தக் குப்பியை அந்த மணல் சட்டியில் வைத்து அதன் மேல் குப்பியின் கழுத்து வரை மணலைக் கொட்டி நான்கு சாமம்வரை எரித்து எடுத்துப் பார்த்தால் செந்தூரமாக இருக்கும்.
209. ஆமப்பா நவலோகம் பத்துக் கொன்று
அப்பனே தான்கொடுக்க மாற்றோ பத்து
தாமப்பா தேவிக்கும் நிருவாணிக்குந்
தயவாகப் பூசைசெய்து நிழலில் நின்று
வாமப்பா பெரியோரை வணங்கி வாழ்த்தி
வாழ்குவாய் யுபைமதிற் சீமானாக
நாமப்பா போகருட கடாட்சத் தாலே
நலமாகப் புலிப்பாணி பாடினேனே.
விளக்கவுரை :
இந்த செந்தூரத்தில் நவலோகம் பத்துக்கு ஒன்று கொடுத்தால் பத்து மாற்றாகும். தேவிக்கும் , திருவாணிக்கும் இதனை வைத்து பயபக்தியுடன் பூஜைசெய்து விட்டு , நிழலில் நின்று பெரியோர்களை வணங்கி துதித்தால் இவ்வுலகில் சிறப்பாக வசதியுடன் வாழ்வாய். இதனை போகருடைய கடாட்சத்தினால் புலிப்பாணியாகிய நான் உரைத்துள்ளேன்.
இரசமணி
210. பாடியே ரசமதை சுத்தி செய்து
பண்பான நாகத்தின் வாயில் வார்த்து
ஆடியே முப்பூவுங் கழஞ்சு போட்டு
அடைவாகக் கட்டிநீ மேலே துக்கு
கூடியே யதின்கீழே பானை வைநீ
கொற்றவனே பாம்பழுகி வீழும் பாரு
நாடியே ரசங்கட்டி மணியாய் போகும்
நாயகனே வேதைமுதல் வசிய மாமே.
விளக்கவுரை :
சுத்திசெய்த இரசத்தை எடுத்து நாகப் பாம்பின் வாயில் ஊற்றி அத்துடன் முப்பூ ஒரு கழஞ்சு சேர்த்துப் போட்டு நன்றாக வாயைத் தைத்து தலைகீழாக மேலே கட்டி அதனடியில் ஒரு பானையை வைத்துவிடு. சில நாட்களில் அந்த பாம்பானது அழுகி கீழேயுள்ள பானையில் விழுந்து இரசம் கட்டி மணியாய் இருக்கும். இதனால் எல்லா லோகத்தையும் வேதிக்கலாம். எக்காரியமும் வசியமாகும்.
211. ஆமேநீ கொதியிட்டுச் செந்தூரத்தால்
அப்பனே நவலோகந் தன்னில் வேதை
வாமேநீ யிருநூறும் இந்திர ஜாலம்
வளவான கண்ணாடி போலவே தோற்றுந்
தாமேநீ நவரத்னங் கோர்த்தாற் போலே
தரணிதனில் விளங்கும் புலிப்பாணி தானும்
நாமேநீ போகருட கடாட்சம் பெற்றே
நலமான ஜாலமிரு நூறும் முற்றே.
விளக்கவுரை :
இந்த இரட்சத்தைக் கொதிக்க வைத்து செந்தூரமாக்கி ஒன்பது விதமான உலோகங்களில் சேர்த்தால் வேதிக்கலாம். நான் கூறியுள்ள ஜாலத்திரட்டு இருநூறையும் கண்ணாடிபோல் தெளிவாய் தெரிந்து கொள்வாய். நவ ரத்தினங்களைக் கோர்த்தது போன்று புலிப்பாணியாகிய நான் எனது குரு போகருடைய அருளினால் இவ்வளவையும் கூறியுள்ளேன்.