புலிப்பாணி ஜாலத்திரட்டு 6 - 10 of 211 பாடல்கள்

புலிப்பாணி ஜாலத்திரட்டு 6 - 10 of 211 பாடல்கள் 


6. காணப்பா விந்நூலி யொன்றானாலுங்
    கனிவான சித்தி செய்வோனவனே நாதன்
ஊணப்பா பரதவித்து பார்த்து பார்த்தே
    யுத்தமனே சித்திசெய்ய விதியில்லாதார்
தாணப்பா சாஸ்திரத்தைப் பொய்யென் பார்கள்
    நலமான விதியிருந்தால் பலிக்கும் பாரு
ஆணப்பா ஜகஜ்ஜாலக் கூத்து
    ஆரரியப் போகிறாராப்பா கேளே.

விளக்கவுரை :

இந்நூலில் கூறியுள்ள வித்தைகளில் ஒன்றையாவது மிகச் சிறப்பாகச் செய்பவனே மேலோனாவான். படித்துப் பார்த்து அதனைச் சிறப்பாகச் செய்ய முடியாதவன் சாஸ்திரத்தையே பொய்யானது என்பார்கள். நுணுக்கத்துடன் ஜாலத்தைச் செய்தால் பலிக்கும். இது உண்மையாகும். இதனைக் கூறினால் யார் கவனத்துடன் கேட்கப் போகிறார்கள்.

7. கேளப்பா ஞானமொடு பலதிரட்டு வாடை
    கெணிதமென்ற சோதிடமும் வயித்தியமுங்கூட
வாளப்பா சிதம்பரத்தின் பூசையோடு
    வளமான தேவியுட பூசையப்பா
சூளப்பா ஷண்முகத்தின் பூசை மார்க்கஞ்
    சுகமான சிமிழ்வித்தை கொக்கோகந்தான்
வீளப்பா போகாது சாலம் சாலம்
    வெகுசுருக்கு இருநூறுந் தெளிந்து பாரே.

விளக்கவுரை :

கவனத்துடன் கேட்பாயாக. ஞானம், பலதிரட்டு, வாடை, கணித சோதிடம், வைத்தியம், சிதம்பர பூசை, அருள்பாலிக்கும் அம்மன் பூசை, ஷண்முகத்தின் பூசை, சிமிழ்வித்தை, கொக்கோகம், இவைகளுடன் மாயாசாலம் போன்ற மிக முக்கியமானவை களையெல்லாம் இந்த இருநூறு எனும் நூலில் கூறியுள்ளமையால் ஆராய்ந்து தெளிவுறுவாயாக.

8. பாரடா யெந்நூல்தான் கோர்வையாகப் 
    பார்த்தவர்க்குப் பலனுண்டு சித்தியாகும்
வீரடா பலதிரட்டு ஐங்கோலந்தான்
    விளம்பினோந் தயிலத்தை யெடுத்துக் கொண்டு
சோடா தொழில்முறைக் கெல்லாஞ் சேரு
    செயமாகும் வித்தையெல்லா மென்ன சொல்வேன்
கூறடா கண்கட்டு வித்தை யொன்று
    கூறுகிறே னன்றாகக் கேளு கேளே.

விளக்கவுரை :

நான் இயற்றிய இந்நூலைக் கோர்வையாகப் படித்து  உணர்பவர்களுக்கு நிச்சயம் பலனுண்டாகி சித்தியாகும். பல திரட்டு ஐங்கோலத்தால் சொன்ன தயிலத்தை எடுத்துக் கொண்டு எல்லா ஜால வித்தைகளிலும் சேர்த்தால் எல்லாம் பலிக்கும். ஜெயமாகும். பல வித்தைகள் இருக்கின்றன. இப்போது கண்கட்டு வித்தை ஒன்றைக் கூறுகிறேன் மிகக் கவனத்துடன் கேட்பாயாக.
   
கண்கட்டு வித்தை

9. கேளேநீ யூர்க் குருவி பிடித்து வந்து 
    கெணிதமா யபாணத்தைத் தைத்து பின்னே
சூளேநீ கால்கழஞ்சி சூதம் வாரு
    சுகமாகக் கால்கழஞ்சி வெள்ளை  போடு
வாளநீ வாயைத்தான் தைத்துப் போட்டு
    வளமான சிறு பானைக்குள்ளே போடு
பாளேநீ போகாமற் படிதான் கள்ளு
      பாங்காகத்தான் வார்த்திட் டெரித்திடாயே.

விளக்கவுரை :

ஊர்க்குருவியைப் பிடித்துவந்த் கச்சிதமாக அபான (மலம் கழிக்கும்) வாயைத் தைத்துவிட்டுப் பின்னர் கால் கழஞ்சு இரசம் அதன் வாயில் ஊற்றி, அத்துடன் கால் கழஞ்சு சங்கு பாடாணத்தை கலந்து ஊற்றி அதன் வாயைத் தைத்து கனமான சிறு பானைக்குள் போட்டு அப்பானையில் கள்ளு படி ஊற்றி மேலே மூடி பானையை அடுப்பிலேற்றி எரிக்கவும்.

10. எரிப்பாயே யொருமரத்து விறகு கொண்டு
    எட்டொன்றாய் குறுக்கியே பதத்தைப் பார்த்து
தெரிப்பாயே அஸ்திமுதல் ரோமந் தள்ளி
    தெளிவாகத் தானெடுத்து கல்வத்தி லிட்டுச்
செரிப்பாயே பேய்க்கருப்பஞ் சாற்றை விட்டு
    சேர்த்தரைப்பாய் மைபோலே யாகு மட்டும்
விதமாகக் காயவிட்டுத் திரியாய்ச் சுற்றே.

விளக்கவுரை :

எரிக்கும்போது ஒரே ஜாதி மரத்து விறகினால் எரிக்கவும். அதனை எட்டில் ஒரு பங்காகச் சுண்டக் காய்ச்சி பதம் பார்த்து எடுத்து, எலும்பு, உரோமம் இவைகளை நீக்கிவிட்டு தெளிவாக எடுத்துக் கல்வத்திலிட்டு அதில் பேய்க்கருப்பஞ் சாறு விட்டு மைபோல அரைத்தெடுத்து ஒரு சுத்தமான துணியின் மேல்பரப்பி நன்றாகக் காயவைத்தெடுத்து அந்தத் துணியை திரியாக்கிக் கொள்ளவும்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு, புலிப்பாணி, Pulipani, Pulipani Jaalathirattu, Pulipani Siththar