புலிப்பாணி ஜாலத்திரட்டு 201 - 205 of 211 பாடல்கள்
201. செய்யப்பா பிராமணருக் கன்னம் பாரு
செயலாக நினைத்தபடி யெல்லாஞ் செய்யுங்
கையப்பா பூஜையது சக்திபூஜை
கனிவாகச் செய்திடுவாய் வெள்ளி தோறும்
அய்யப்பா இதற்கெதிரி ஜெகத்தி லில்லை
யப்பனே வானுலகந் தன்னி லில்லை
உய்யவே போகருட கடாட்சத்தாலே
உத்தமனே புலிப்பாணி பாடினேனே.
விளக்கவுரை :
அதன்பின்னர் அந்தணர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். இதனால் நினைத்தக் காரியங்களை கைகூட வைப்பாள். இந்த சக்தி பூசையை வெள்ளிக்கிழமை தோறும் தவறாமல் செய்யவேண்டும். இதற்கு எதிரியாக இந்த உலகத்திலும் எதுவும் இல்லை. தேவலோகத்திலும் இல்லை. இதனை போகருடைய கடாட்சத்தினாலே புலிப்பாணி யாகிய நான் உரைத்துள்ளேன்.
பார்வதிதேவி - பிரத்தியங்கிரா ரூபமாதல்
202. பாடினேன் பூச்சக்ர வாளத்துள்ளே
பண்பான மகமேரு பர்வதங் ளெட்டும்
நாடினே நவகண்டஞ் சப்ததீவு
நலமான சப்தசா கரங்களேழும்
கூடியே யஷ்டதிக்கு ளைம்பத் தாறும்
குணமான தேசமெங்குஞ் சென்றாலுந்தான்
ஆடியே பிரத்தியங்கிரா கிருபையாலே
அப்பனே ஜெயங்கொண்டு மீளலாமே.
விளக்கவுரை :
பூச்சக்ர வாளத்திற்குள்ளே மேரு மலைகளோடு எட்டு மலைகளும் , ஒன்பது கண்டங்கள் , சப்ததீவு , சப்பத சமுத்திரங்கள் ஏழும் , அஷ்டத்திக்கு ஐம்பத்தாறும் , மற்றும் தேசமெங்கும் சென்றாலும் பிரத்தியங்கிரா தேவியின் கிருபையினால் எதனையும் எதிர்த்து வெற்றியோடுவரலாம்.
203. ஆமப்பா விஷ்ணு நரசிங்கமாகி
அடைவாக விரணியனைக் கொன்று தோஷம்
வாமப்பா பிரமை கொண்ட மயக்கந்தீர
வளமான ஈஸ்வரனுஞ் சரப ருபந்
தாமப்பா வடிவுகொண்டு நரசிங்கத்தை
தான்கிழித்தே யுதிரமதைக் கொண்டதாலே
போமப்பா மருள்கொண்டு மயக்க மிஞ்சிப்
பொலிவான ஈஸ்வரனும் யிருந்தார் பாரே.
விளக்கவுரை :
விஷ்னு பகவான் ஒருசமயம் நரசிம்ம அவதாரமெடுத்து இரணியனைக் கொன்ற தோஷம் நீங்க வேண்டுமென்பதற்காக ஈஸ்வரன் சர்பரூபமாய் (பாம்பாக) தோன்றி நரசிங்க ரூபத்தைக் கிழித்து அதன் இரத்தத்தைக் குடித்ததினால் ஈஸ்வரன் சுயநினைவற்று மயக்கமடைந்து விட்டார்.
204. பாரப்பா ஈஸ்வரனார் மயக்கம் நீங்க
பரிவான விஷ்ணு கெண்ட பேரண்டமாகிச்
சேரப்பா சர்பத்தைப் பிளந்து பானஞ்
செய்தாரே ஈஸ்வரற்கு பிரமை போச்சு
தீரப்பா கெண்ட பேரண்ட மப்பா
திறமழிந்து மருள்கொண்டு மயக்க மாகிக்
கூறப்பா தேவர்களை யடித்த தாலே
குணமான ஈஸ்வரனும் வோட லாச்சே.
விளக்கவுரை :
மயக்கமடைந்த ஈஸ்வரனிம் மயக்கம் நீங்க விஷ்னு கெண்ட பேரண்ட பட்சியாய் (மிகப் பெரிய பறவையாக) மாறி சர்பத்தைப் (பாம்பைப்) பிளந்து பானஞ் செய்தார். இதனால் ஈஸ்வரனுக்கு மயக்கம் தெளிந்தது. இதனால் கெண்ட பேரண்டப் பட்சி (பெரிய பறவை) நினைவிழந்து மயக்கமாகி தேவர்களை அடித்ததினால் ஈஸ்வரன் அங்கிருந்து ஓடவேண்டியதாயிற்று.
205. ஆச்சப்பா இதனைப் பார்வதியாள் பார்த்து
அடைவான பிரத்தியங்கிரா ரூபமாகி
மாச்சப்பா கெண்ட பேரண்ட பட்சி
மதம்நீங்கத் தான்பிடித்துச் சிரசைக் கொய்யப்
போச்சப்பா பிரமையது தீர்ந்து போச்சு
பொலிவான விஷ்ணுவுந்தான் உருவமானார்
வீச்சப்பா போகருட கடாட்சத் தாலே
விதமான புலிப்பாணி பாடினேனே.
விளக்கவுரை :
இதனைக் கண்ட பார்வதி தேவியானவள் பிரத்தியங்கிரா தேவி ரூபமாகி கண்ட பேரண்ட பட்சியின் மதம் நீங்க அதனைப் பிடித்து சிரசை கொய்து எறிந்தாள். அதனால் மயக்கம் நீங்கி விஷ்னு உருவம் பெற்றார். இதனை போகருடைய கடாட்சத்தினால் புலிப்பாணியாகிய நான்
நலமாக உரைத்துள்ளேன்.