புலிப்பாணி ஜாலத்திரட்டு 1 - 5 of 211 பாடல்கள்

புலிப்பாணி ஜாலத்திரட்டு 1 - 5 of 211  பாடல்கள்


காப்பு

1. சத்தியே தயாபரியே ஞான நூலில்
    சாம்பவியே மனோன்மணியே கபாலி சூலி
முத்தியே வேதாந்த பரையே யம்பாள்
    முக்குணமே முச்சுடரே மாயா வீதி
வெற்றியே மூவருக்கு மருளாய் நின்ற
    வேணியே சாமளையே பொன்னே மின்னே
சித்தியே சாலமிகு நூறும் பாடச்
    சின்மயமாங் கணபதிதாள் காப்பாம் பாரே.

விளக்கவுரை :


உலகைக் காத்து இரட்சிக்கும் சத்தியே, தாயே தயாபரியே, ஞான நூல்களில் உச்சரிக்கப்பட்ட சாம்பவியே, மனோன்மணியே, கபாலியே - சூலியே, முக்திக்கு வித்திடும் வேதாந்த பரையே, அம்மையே, முக்குணங்களின் முச்சுடரே, மாயா வீதியே - வெற்றியே, மும்மூர்த்திகளுக்கும் அருள்பாலித்த திருவேணியே, சாமளையே, பொன்னே, மின்னே, சித்தியாகும் ஜாலம் இருநூறு பாடலை இயற்ற அருளிய கணபதியின் பாதமலருக்கு காப்பாம்.

நூலில் உள்ள சிறப்பு


2. பாரப்பா சாலமொடு சல்லி யொட்டியம்
    பாங்கான தொட்டியந் தெட்டான சித்து
சாரப்பா கொடியானு மொடியான் வித்தை
    சார்வான கிரிகருணை யெட்டாரந்தான்
காரப்பா சித்து லட்சங் கலகவித்தை
    கருவான கக்கிஷமும் பஞ்ச பட்சி
வாரப்பா சீனவித்தை மாந்தருக்கும்
    வளமான படுபட்சி கைவல்ய மாமே.

விளக்கவுரை :

இந்நூலில் ஜாலத்தோடு, சல்லியம், ஒட்டியம், தொட்டியம், தொட்டவுடன் நசிந்துப்போகும் சித்து, நொடியான் வித்தை, நாற்பத்தெட்டு மாயவித்தைகள், கக்கிஷம், பஞ்சபட்சி மற்றும் சீன தேசத்து வித்தை, மக்களை வளமாக்கும் படுபட்சி இவைகளை யெல்லாம் எளிமையாகக் கைவரக் கூறியுள்ளேன்.

3. ஆமப்பா பேதர்வண்ணான் கேசரியதீதம்
    அடைவான அஷ்டகர்ம வினோத ஆரூடர்
தாமப்பா கண்டனம் பேதனமுஞ் செப்பு
    தயவான எட்சணியுந் தர்க்க சாஸ்திரம்
போமப்பா பட்சணி தட்சணியுங் கூடப்
    புகழ்வாதஞ் சோதிடம் காவியத்தினோடு
நாமப்பா வைத்தியத்தோ டிலக்கணந்தான்
    நல்ல சூடாமணியு மின்னங் கேளே.
   
விளக்கவுரை :

வண்ணார் வைக்கும் வெள்ளாய் வேகாத சாலம், கழுதை அடியெடுத்து வைக்காத சாலம், அஷ்ட கர்மம், வினோத ஆரூடம், துண்டாக வெட்டும் சாலம், செப்புடு வித்தை, எட்சணி தர்க்க சாஸ்திரம், பட்சணி, தட்சணி, வாதம், சோதிடம், காவியம், வைத்தியம், இலக்கணம், சூடாமணி ஆகிய இவைகளுடன் மேலும் கூறுகிறேன் கேள்.

4. கேளடா சித்தராரூடல் கன்னம்
    கெணிதமாய்ச் சிமிழ்வித்தை கம்பி சூஸ்திரம்
சூளடா சூனியமுந் திறவு கோலுஞ்
    சுகமான மந்திரமு நடுக்குச் சல்லியம்
வாளடா மதனநூற் சாஸ்திரந்தான்
    வளமான பெருநூற் சல்லியம் தாகும்
தாளடா விருப்பென்ற கடலையப்பா
    தயவான மலைநிகண்டு சொல்லக் காணே.

விளக்கவுரை :

சித்தர் ஆரூடம், கன்னம், சிமிழ்வித்தை, கம்பி சூஸ்திரம், சூனியம், திறவு கோல் தந்திரம், மந்திரம், நடுக்கு சல்லியம், மதனநூல் சாஸ்திரம், பெருநூல் சல்லியம், இருப்புக் கடலை, மலையைப் பற்றிய அகராதி ஆகிய இவைகளுடன் மேலும் கூறுகிறேன்.

5. காணவே சித்தசுத்தி யஞ்சல் மந்திரங்
    கருவான கூட்டுடைய கருத்தானப்பா
மாணவே சலமாட்ட நிகண்டு பாவை
    மலைவளம் பூருவமாய் கண்டத்தோடு
ஊணமே கலைக்கியானம் ரேகை வித்தை
    யுத்தமனே யாகமங்கள் விசுவாமித்திரம்
தோணவே யின்னம் வெகுநூல் களுண்டு
    தொழிலான போகருட வருள்தான் காணே.

விளக்கவுரை :


சித்த சுத்தி, அஞ்சல் மந்திரம், கருக்கூட்டு, சலமாட்ட அகராதி, பசுமையான மலை வளம், பூர்வ கண்டம், கலைக் கியானம், ரேகை வித்தை, ஆகமங்கள், விசுவாமித்திரம் இவைகளுடன் இன்னும் பல நூல்களுமுண்டு. இவைகளெல்லாம் எனது குருவான போகருடைய அருளினால் கூறியதாகும்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு, புலிப்பாணி, Pulipani, Pulipani Jaalathirattu, Pulipani Siththar