புலிப்பாணி ஜாலத்திரட்டு 131 - 135 of 211 பாடல்கள்

புலிப்பாணி ஜாலத்திரட்டு 131 - 135 of 211 பாடல்கள்

 

131. சேரப்பா  வகைவகைக்கு  விராக  னொன்று
    சீரான  மத்தித்து  மந்திரந்தான்
பாரப்பா  சர்வலோக  வசிகரி  ஒமென்று
    பண்பாக  யாயிரத்  தெட்டுஞ்  செபித்து
நேரப்பா  திலர்தமிடு  புருஷர்  பெண்கள்
    நிச்சயமாய்  கேட்டதெல்லா  மீவாரப்பா
கூடப்பா  பகையெல்லாம்  நசித்து  போகும்
    குற்ற  மொன்று  யில்லையடா  ஜெகத்தில்  தானே.

விளக்கவுரை :

கூறியதில்  வகைக்கு  ஒரு  விராகன்  எடை  சேர்த்து  நன்கு  மத்தித்து  கீழ்காணும்  மந்திரத்தை  ஒதவும்.  "சர்வலோக  வசிகரி ... ஒம் ..."  என்று  ஆயிரத்தெட்டு  தடவைகள்  ஜெபிக்கவும்.  பின்னர்  தயாரித்த  அஞ்சனத்  மையில்  சிறிது  எடுத்து  திலகமிட்டுக்  கொண்டால்  ஆண்களும்,  பெண்களும்  நீங்கள்  கேட்டவற்றைக்  கொடுப்பார்கள்.  பகைவர்கள்  இருப்பின்  ஒழிந்து  விடுவார்கள்.  உனக்கு  இந்த  உலகத்தில்  எந்த  தீமையும்  ஏற்படாது.

பாதாள  அஞ்சனம்

132. தானப்பா  வேர்வெடித்த  பலாவின்  கொட்டை
    தான்கருக்கி  விராகநிடை  பத்த  தாகும்
தேனப்பா  அஞ்சனம்  பாஷன  மொன்று
    தெளிவாகப்  குழியம்மி  தன்னற்  போட்டு
வானப்பா  விளக்கெண்ணெய்  தன்னிலாட்டு
    வளமாக  ஒருசாம  மரைத்த  பின்பு
கோனப்பா  சிமிழில்வைத்  தஞ்சனிக்குங்
    குணமான  வனுமார்க்கும்  பூசை  செய்யே.

விளக்கவுரை :

வேர்ப்  பாலக்கொட்டையைக்  கருக்கிக்  கொண்டு  அதில்  பத்து  விராகன்  எடை,  அஞ்சனப்  பாடாணம்  ஒன்று  இவைகளை  கல்வத்திலிட்டு விளக்கெண்ணெய்  விட்டு  ஒரு  சாம  நேரம்  அரைத்தெடுத்து  அதனை  ஒரு  சிமிழில்  வைத்துக்  கொண்டு  அஞ்சன  தேவிக்கும்,  அனுமார்க்கு  பூசை  செய்யவும்.

133. செய்தபின்பு  கையிலிட்டு  யெவரும்  பார்க்கச்
    செகத்திலுள்ள  நிதிகளெல்லாங்  கண்ணிற்  காணும்
எய்தபின்பு  வேண்டியதை  யெடுத்துக்  கொள்ளு
    இதமாக  இகபரத்துக்  சூதவியாகும்
உய்தபின்பு  நாழிகைதான்  பாதாளத்தில்
    உத்தமனே  நிகழ  முன்னூருமாகும்
பெய்தபின்பு  யிம்மைதா  னுறுதிமெத்த
    பார்த்தவர்க்குப்  பலணுண்டு  பலிக்கும்  பாரே.

விளக்கவுரை :

பூசை  செய்து  விட்டு  சிமிழிலுள்ள  மையை  கையிலிட்டுக்  கொண்டு  யார்  பார்த்தாலும்  சர்வ  நிதிகளும்  கன்ணில்  தெரியும்.  அச்சமயம்  வேண்டியதை  எடுத்துக்  கொள்ளவும்.  இது  இகபரத்துக்கு  உதவியாகயிருக்கும்.  இந்த  மையை  செய்து  முடித்து  முன்னூறு  நாழிகை  பூமியின்  அடியில்  புதைத்தெடுத்து  உபயோகித்தால்  உடனே  காரியம்  சித்தியாகும்.  இதற்க்கு  பாதாள  அஞ்சனம்  எனப்படும்.

குறிசொல்லிட

134. பாரடா  ஆடையொட்ட  சமூமைப்பா
    பண்பான  நின்றிடந்  தீஞ்சமூலி
சேரடா  கருச்சீலை  யிந்த  மூன்றும்
    செம்மையாய்  கருக்கியல்லோ  மைபோலாட்டி
சீரடா  சுடலையென்ற  தயிலஞ்  சேர்த்துச்
    ஈசஷ  வீரடா  அனுமாரை  தியானஞ்  செய்து
    விதமாகத்  திலகமிட்டுக்  குறிதான்  சொல்லே.

விளக்கவுரை :

ஆடையொட்டி  சமூலம்,  தீஞ்சமூலி,  கருப்புத்  துணி  ஆகிய  மூன்றையும்  ஒன்றாகச்  சேர்த்து  எரித்து  கருக்கி  அதனை  கல்வத்திலிட்டு  மைபோல  அரைக்கவும்.  மைபதமானதும்  அதில்  சுடலைத்  தைலம்  சேர்த்து  நன்கு  அரைத்து  சிமிழில்  எடுத்து  வைத்து  அனுமாரை  தியானம்  செய்து  சிமிழிலுள்ள  மையை  எடுத்து  திலகமிட்டு  கொண்டு  குறி  செல்லவும்.

135. சொல்லடா  அஞ்சனாதேவி  புத்ரா
    சொகுசான  வாய்வுமைந்தா  புருஷருபா
வல்லவா  அனுமந்தா  ராம  தூதா
    வந்துகுறி  சொல்லலென்று  வணங்கி  கொள்ளு
இல்லப்பா  நினைத்ததெல்லாஞ்  சொல்வான்  பாரு
    என்னசொல்வே  னவனுடைய  குறிதான்  மைந்தா
நல்லப்பா  போகருட  கடாட்சத்தாலே
    நலமாகப்  புலிப்பாணி  பாடினேனே.

விளக்கவுரை :

குறிசொல்வதற்க்கு  முன்னர்  ,  "அஞ்சனா  தேவி  புத்திரா , வாயு  மைந்தா , புரூஷரூபா , வல்லவா , அனுமந்தா , இராம  தூதா , வந்து  குறி  சொல்லு"  என்று  கூறி  வணங்கிவிட்டு  குறி  சொல்லவும்.  குறி  கேட்க  வந்தவர்கள்  நினைத்ததையெல்லாம்  நீ  சொல்லுவாய்.  இது  போகருடைய  அருளினால்  புலிப்பானி  பாடியுள்ளேன்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு, புலிப்பாணி, Pulipani, Pulipani Jaalathirattu, Pulipani Siththar