புலிப்பாணி ஜாலத்திரட்டு 176 - 180 of 211 பாடல்கள்

புலிப்பாணி ஜாலத்திரட்டு 176 - 180 of 211 பாடல்கள்


176. போட்டவுட  னவன்விழுவா  னுதைத்துக்  கொள்வான்
    பொங்கமுட  னவன்வாயி  லுதிரங்  கக்கும்
ஆட்டவுட  னகன்றகழல்  குறடா  வப்பா
    அடைவான  தேங்காயு  முலக்கை  தானும்
கூட்டமுட  னிதுகளெல்லா  மெழுந்  தடிக்கும்
    கொற்றவனே  வாளெழும்பி  வெட்டும்  பாரு
நாட்டமுடன்  காளியைத்தான்  தியானஞ்  செய்தால்
    நாயகனே  யிவைகளெல்லா  மடிக்குந்  தானே.

விளக்கவுரை :

ஒதிப்  போட்டதும்  அவன்  விழுவான்.  கைகால்களை  உதைத்துக்  கொள்வான்.  அவன்  வாயிலிருந்து  ரத்தம்  வழியும்.  அச்சமயம்  குறடா , தேங்காய் , உலக்கை  இவைகளெல்லாம்  எழுந்து  அவனை  அடிக்கும்.  அதுமட்டுமல்லாது  வாள்  மேலே  எழும்பி  அவனை  வெட்டும்.  காளியை  தியானம்  செய்தால்  கீழே  வைத்துள்ள  இவைகளெல்லாம்  அவனை  அடிக்கும்.

177. தானடா  ஒம் ... வங் ... றம் ... மென்று
    தயவாக  அம் ... அம் ... அம் ... மென்றோது
வானடா  நங் ... மங் ... சிங் ... கென்று
    வளமான  அங் ... அங் ... அங் ... சுவாஹாவென்று
கோனடா  லட்சமுரு  செபித்துப்  போடு
    கொற்றவனே  நினைத்த  தெல்லாந்  தம்பமாகும்
நானடா  போகருட  கடாட்சத்தாலே
    நலமாகப்  புலிப்பாணி  பாடினேனே.

விளக்கவுரை :

" ஒம் ... வங் ... றம் ... "  என்றும் , " அம் ... அம் ... அம் ..."  என்றும் , "நங் ... மங் ... சிங் ... "  என்றும் , "அங் ... அங் ... அங் ... சுவாஹா"  என்று  இலட்சம்  தடவைகள்  ஜெபிக்கவும்.  இதனால்  நீ  நினைத்ததெல்லாம்  நடக்கும்.  இவையாவும்  போகருடைய  கடாட்சமாகும்.  அதனை  புலிப்பாணியாகிய  நான்  உரைத்துள்ளேன்.

சாதம்  வேகாதிருக்க

178. பாடவே  யின்னமொரு  வித்தை  கேளு 
    பண்பாக  வெண்காந்தி  வேரை  வாங்கி
நாடவே  கஞ்சாவித்  தைலங்கோலஞ்  சேர்த்து
    நாயகனே  யுலையரிசி  தன்னிற்  போட்டாற்
கூடவே  சோரதுவும்  வேகா  தப்பா
    கொற்றவனே  மாற்றுமிதுக்  கில்லை  பாரு
ஆடவே  போகருட  கடாட்சத்  தாலே
    அருமையாய்ப்  புலிப்பாணி  பாடினேனே.

விளக்கவுரை :

இன்னொரு  ஜால  வித்தையைக்  கூறுகிறேன்  கேட்பாயாக.  வெண்காந்தி  வேரைக்  கொண்டு  வந்து  கஞ்சாவிதையும் , ஐங்கோலத்  தைலமும்  சேர்த்து  உலையரசியில்  போட்டால்  சோறு  வேகாது.  இதற்கு  மாற்று  எதுவும்  இல்லை.  இதுவும்  போகருடைய  அருளினால்  புலிப்பாணி  கூறியுள்ளேன்.

நெருப்பில்லாமல்  சோறு ஆக்கும்  ஜாலம்

179. பாடினேன்  அக்னியு  மில்லாமற்  றான்
    பண்பான  அன்னமது  சமைக்கக்  கேளு
ஆடினேன்  கானகத்தில்  வேண  துண்டு
    அடைவாகச்  சதுரக்கள்ளி  பாற்கரந்து
சாடிநீ  பாண்டத்தி  லரிசி  போட்டுச்
    சரியாகப்  பால்தன்னைச்  சுருக்காய்  வாரு
நாடிப்பார்  சோரதுவும்  வெந்திருக்கும்
    நலமாக  ஜாலம்போ  லாடிப்  பாரே.

விளக்கவுரை :

இப்போது  நெருப்பில்லாமல்  சாதம்  சமைக்கும்  ஜாலவித்தைப்  பற்றிக்  கூறுகிறேன்  கேட்பாயாக.  காட்டில்  வளர்ந்திருக்கும்  சதுரக்  கள்ளி  செடியிலிருந்து  சதுரக்கள்ளிப்  பாலைக்  கொண்டு  வந்து  வைத்துக்  கொண்டு  பானையிலிட்டு  அந்தப்  பானையில்  அரிசியைக்  கழுவி  நீரை  இறுத்து  அதில்  போட்டு  எவரும்  பார்க்காதவாறு  சதுரக்கள்ளிப்  பாலை  அதில்  வார்த்து  விடு.  பானையினை  மூடி  சிலநிமிடம்  கழித்து  திறந்தால்  அரிசி  வெந்து  சாதமாகி  விடும்.  இந்த  ஜாலத்தினால்  சாதமாகியதை  எவரும்  உண்ணக்கூடாது.

பேயோட்டல்

180. பாரேநீ  யங் ... சிங் ... வய ... நம ... வென்று
    பண்பாகச்  செபித்தவுடன்  பிசாசு  பூதங்
கூரேநீ  யோடுமடா  கண்டு  பாரு
    குணமாக  வங் ... மங் ... சிங் ... சிவயநமசி  யென்று
நாடியே  ஜெபித்தவுட  னழும்  பாரு
    நாயகனே  சிவயநமசி  யென்று  சொல்ல
சூடியே  பிசாசுமுதல்  பூதமெல்லாம்
    சுருக்காக  ஒடுமடா  கண்டு  பாரே. 

விளக்கவுரை :

பேய்கள்  ஒடுவதற்கான  மந்திரத்தைக்  கூறுகிறேன்  கேள்.  " யங் ... சிங் ... வய ... நம ... "  என்று  மனசுத்தியுடன்  ஜெபித்தால்  பிசாசு , பூதம்  எல்லாம்  ஓடும்.  "வங் ... மங் ... சிங் ...சிவயநமசி ..."  என்று  ஜெபித்தால்  பிசாசு  அழும்.  அதே  "சிவயநமசி"  என்று  சொல்லச்  சொல்ல  பிசாசு  முதல்  பூதம்  வரை  எல்லாம்  இருக்கும்  இடம்  தெரியாமல்  ஒடிவிடும்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு, புலிப்பாணி, Pulipani, Pulipani Jaalathirattu, Pulipani Siththar