புலிப்பாணி ஜாலத்திரட்டு 61 - 65 of 211 பாடல்கள்

புலிப்பாணி ஜாலத்திரட்டு 61 - 65 of 211 பாடல்கள் 


எலுமிச்சம் பழம் குதிக்கும் ஜாலம்

61. ஏனப்பா என்னுடைய ஜாலம் போல
    எத்தவரும் சொல்லமாட்டார் இனிதாய் கேளு
ஏனப்பா  எலுமிச்சம்  பழந்தா னொன்று
    எளிதாக துளையொன்று யினிதாய்ச் செய்து
ஏனப்பா   ரசங்களஞ்சு வுள்ளே வார்த்து
    எதிர்வாயை மூடிவிடு மெழுகினாலே
ஏனப்பா  ரவிமுகத்தில் வைத்தா யானால்
    எலுமிச்சம் பழம் எம்பி குதிக்குதானே.
                                    
விளக்கவுரை :

நான் கூறுவது போன்று மாய ஜால வித்தையை எவரும் கூறமாட்டார்கள். ஆதலின் கவனத்துடன் கேட்பாயாக. ஓரு எலுமிச்சம் பழத்தைக் கொண்டு அதில் சிறிதாக ஓரு துளை போட்டு களஞ்சு பாதரசம் உள்ளே ஊற்றி அதன் துளையை மெழுகினால் மூடி விடவும். அதன் பின்னா் அந்தப் பழத்தை வெயில் வைத்தால் சூடேறியதும் எலுமிச்சம் பழம் தரையில் நில்லாமல் மேலே எழும்பி குதிக்கும்.

அக்கினி ஜாலம்

62. தானையா யின்னமொரு வித்தை சொல்வேன்
    தயவாகப் பச்சையென்ற தவளை நெய்யை
மானையா கலசத்தில் வைத்துக் கொண்டு
    மைந்தனே துணியதிலே துவைத்து மைந்தா
வானையா மண்வெட்டி பழுக்கச் காய்ச்சி
    வளமான வுரலின்மேல் வைக்கச் சொல்லி
தேனையா யெண்ணையிலே கையைத் தோய்த்து
    திறமாகத் தானடிப்பா யின்னம் பாரே. 

விளக்கவுரை :

மற்றொரு ஜால வித்தையைச் சொல்லுகிறேன் கேட்பாயாக. பச்சை தவளையின் நெய்யை எடுத்து ஓரு கலசத்தில் வார்த்து அதில் துணியைத் தொய்த்துப் பிழிந்து கொள்ளவும். பின்னா் மண்வெட்டியைப் பழுக்கக் காய்ச்சி ஓரு உரலின் மேல் வைக்கச் சொல்லவும். பின்னா் எண்ணெயில் கையை தேய்த்து எடுக்கவும். அதன்பின்னா் செய்ய வேண்டியதையும் கூறுகிறேன்.

63. பாரடா அனைவோரும் பார்த்திருக்கப்
    பண்பாக துணியதிலே துடைத்துப் போடு
தேரடா யெண்ணெயிலே ரோய்த்துத் தோய்த்து
    தெளிவாகத் தானடிப்ப யனைவோர் பார்க்கச்
சீரடா குண்டைதனைக் காய்ச்ச சொல்லி
    சிறப்பாக வாய்தனிலே யிந்த யெண்ணெய்
தீரடா நிரம்பிவிட் டுமிழ்த்து விட்டுத்
    திறமான குண்டதனைக் கடித்துத் தூக்கே.

விளக்கவுரை :

அதன்பின்னா் அந்தக் துணியில் கையைத் துடைத்துக் கொண்டு மறுபடியும் எண்ணெயில் கையைத் தோய்த்துத் துணியில் துடைத்துக் கொள்ளவும். இது போன்று அடிக்கடி செய்யவும். பின்னா் ஓரு குண்டைக் காய்ச்சச் சொல்லி வாயில்  இந்த எண்ணையை நிறைய வார்த்து கொப்பழித்து உமிழ்ந்து விட்டு காய்ச்சிய அந்தக் குண்டை கடித்துத் தூக்கவும்.

64. தூக்கப்பா அனைவோரும் பார்க்கும் போது
    துணைவாக வைக்கோலில் வைத்து கட்டி
வாக்கப்பா வைக்கோலி வெண்ணை தோய்த்து
    வகையாக  தான்கட்டி முன்னே போடு
போக்கப்பா வைக்கோல்தான் வேகாதப்பா
    பொலிவாகத் தானவிழ்த்துப் பின்னுங் கேளு
தாக்கப்பா வைக்கோல்மேற் போட்டா யானால்
    தயவாகத் தான்பிடித்து வேகும் பாரே.     

விளக்கவுரை :

வாயில் கடித்து எடுத்த அந்தக் குண்டை அனைவரும் பார்க்கும்படி வைக்கோலில் வைத்துக் கட்டி, அந்த வைக்கோலில் அந்த எண்ணெயைத் தடவிப் போட்டாயானால் வைக்கோல் காய்ச்சிய கருகிடாது. எரியாது. ஆனால் அந்த வைக்கோலைப் பிரித்து வேறு வைக்கோலின் மீது போட்டால் கருகி எரியும்.

65. பாரடா சங்கிலியைக் காயப் போட்டுப்
    பண்பாக நெய்யெடுத் துருக்குவாய்நீ
சீரடா பாதத்திற்  றடவிக் கொண்டு
    சிறப்பாக வக்கினிமேல் நடக்கலாகும்
கூரடா கைதனிலே தடவிக் கொண்டு
    குணமான லக்கினி சட்டி தன்னை
வீரடா வெடுக்கலாங் கண்டு பாரு
    விதமான போகருட கடாட்சந் தானே.

விளக்கவுரை :

ஓரு இரும்பு சங்கிலியைப் பழுக்கக் காய்ச்சி கீழே போட்டு இந்த நெய்யை உருக்கி இரண்டு பாதங்களிலும் தடவிக் கொண்டு அக்கினிபோல் இருக்கும் அதன்மேல் நடக்கலாம். இவை யெல்லாம் எனது குரு போக ருடைய கடாட்சமாகும்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு, புலிப்பாணி, Pulipani, Pulipani Jaalathirattu, Pulipani Siththar