புலிப்பாணி ஜாலத்திரட்டு 31 - 35 of 211 பாடல்கள்

புலிப்பாணி ஜாலத்திரட்டு 31 - 35 of 211  பாடல்கள்

 
                                 
31. பாரடா கிராணமது தீண்டும் போது
    பண்பாக நெருப்பிட்டுப் பொங்கலிட்டு
சீரடா பலியிட்டுத் தூப தீபஞ்
    ஜெயமாகக் கொடுத்துமிக வேரை வாங்கி
தீரடா குளிசமா யாடிக் கொண்டு
    திரமாக சிரசுதனில் வைத்து நீயுங்
கூரடா பாரமதை யேற்றிப் பாரு
    குணமாகத் தானெடுக்க கனக்கா தென்றே.

விளக்கவுரை :

கொண்டு வருவதற்கு முன்னா் அந்த செடிக்கு கிராணம் பிடிக்கும் போது அதற்குப் பொங்கலிட்டு, தூபதீபம் காட்டி, பலியிட்டு கிராணம் விடுவதற்கு முன்பாகவே அச்செடியின் வேரை எடுத்து குளிசமாடி சிரசில் வைத்துக் கொண்டு கனத்த பாரத்தைத் தலையில் வைத்தால் பாரம் தெரியாது.

32. கனக்காது உலக்கைமுதல் கட்டிலையா
    கனிவாகப் பல்லாக்கு கொம்பி னோடு
அனக்காது  யிதுகளெல்லாம் நோக்கும் போதில்
    அப்பனே வாயிலிட்டு நோக்கிப் பாரு
இனக்காது ஆனையைத்தான் வாலைப் பற்றி
    இழுத்தாக்கால் பின்னகா்ந்து வரும் பாரு
நினைக்காது கல்லைத்தான் உதைத்தா யானால்
    நகருமப்பா பெரும்பாரம் பின்னைத் தானே.       

விளக்கவுரை :

இதனை வாயில் அடக்கி வைத்துக் கொண்டு உலக்கை, பல்லாக்கு, மரங்கள் இவைகளையெல்லாம் கையால் எடுத்தால் கனக்காது அதுமட்டுமின்ற, யானையின் வாலைப் பிடித்து இழுத்தால் யானை பின்னாலேயே நகா்ந்து வரும். பெரிய பாறாங்கல்லை எட்டி உதைத்தால் அக்கல் நகரும். அதனால் பெரும் பாரங்களை எளிதில் தூக்கி ஆச்சரியப்படுத்தலாம்.

மணலை கண்ணில் கொட்டி தேய்கும் வித்தை
                                                                         
33. பாடினேன் யின்னமொரு ஜால வித்தை
    பண்பானப் போ்விளங்கச் சொல்லுகிறவேன் கேளு
நாடியே நத்தைசூரி வேரைக் கண்டு
    நவிலாமல் தாடையிலே மடக்கி கொண்டு
கூடியே கூச்சமெனத் திருந்திடாமல்
    குணமான கண்ணதனில் மணலைப் போட்டு
ஆடியே இருகண்ணும் விரலால் தேய்க்க
    அன்பான கண்ணும் அருகாது பாரே.

விளக்கவுரை :

மற்றொரு ஜால வித்தைப் பற்றி கூறுகிறேன் கோட்பாயக. இதனைப் பார்ப்பவா்கள் புகழ்வார்கள். நத்தை சூரியன் வேரைக் கொண்டு வந்து கத்திபடாமல் கைகளால் சிறுதுண்டாக்கி அதில் ஓரு சிறிய துண்டை வாயில் போட்டு தாடையில் அடக்கி கொள்ளவும். அதன்பின்னா்  பயப்படாமல் மணலை இரு கண்களிலும் போட்டு கையால் தேய்தால் கண்கள் எரிச்சல் எடுக்காது. உருத்தாது. பார்ப்பவா்களுக்கு வியப்பாக இருக்கம்.

வாத்தியங்கள் முழங்கும் ஜாலம்

34. தானேதா னின்னமொன்று சொல்லக் கேளு                   
    தயவாகப் பள்ளியா்கள் மரண மானால்
கோனேதா னவா்கையி லிரும்பி னாலே
    கொற்றவனே வளையலது போட்டிருப்பார்
தேனேதா னவா்களைத்தான் தகனம் பண்ணத்
    தேருகையில் வளையலுடன் வைப்பார் பாரு
வானேதான் காடாற்ற முன்னே யப்பா
    வகையாகத் தானெடுத்து வைத்துக் கொள்ளே.

விளக்கவுரை :

மற்றொரு ஜால வித்தையைச் சொல்லுகிறேன் கேட்பாயாக. பள்ளியா்கள் என்னும் ஓா் வகை ஜாதியினால் எவராவது மரணமடைந்தால் அவா்கள் கையில் அணிந்திருக்கும் இரும்பு வளையத்துடன் தகனம் செய்வார்கள். அதனால்  அவா்களை தகனம் செய்தபின்னா் அவரது அஸ்தியை ஆற்றில் கரைப்பதற்கு முன்னா் அந்த வளையலை கொண்டு வந்து வைத்துக் கொள்ளவும்.

35. கொள்ளப்பா பாக்குவெட்டி யதனாற் செய்து
    கொற்றவனே கிராணமது தீண்டும்போது
தள்ளப்பா சங்கம்வோ் காப்பு கட்டித்
    தயவா பலிபூசை நடத்தி யப்பா
தெள்ளப்பா வடவேரை வாங்கிக் கொண்டு
    தெளிவான வைங்கோலக் கருவு ம் பூசிக்
கள்ளப்பா பாகாகுவெட்டி தன்னால் வெட்ட
    கனிவா வதின்பெருமை சொல்லப் பாரே.

விளக்கவுரை :

கொண்டு வந்த அந்க இரும்பு வளையலை பாக்கு வெட்டி எனும் ஆயுதத்தைச் செய்து கொள்ளவும். கிராணம் பிடிக்கும் போது சங்கம் வேருக்குக் காப்பு கட்டி, பலியிட்டு, பூசைசெய்து வடக்கு நோக்கிச் செல்லும் வேராகப் பார்த்துக் கொண்டு வந்து ஐங்கோலக் கருவைப் பூசி அந்த வேரை செய்து வைத்துள்ள பாக்கு வெட்டியினால் வெட்டவும். வெட்டும் போது ஏற்படுகின்ற ஒசைகளைப் பற்றிக் கூறுகிறேன் கேள்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு, புலிப்பாணி, Pulipani, Pulipani Jaalathirattu, Pulipani Siththar