புலிப்பாணி ஜாலத்திரட்டு 101 - 105 of 211 பாடல்கள்

புலிப்பாணி ஜாலத்திரட்டு 101 - 105 of 211 பாடல்கள்
           

காளி தியானத்தின் மகிமையால் செப்பிட்டு வித்தை
 
101. சித்தியாம்  வித்தையென்று சொல்லக்  கேளு
    செம்பஞ்சால்  பந்தஞ்சு  கோல்தா  னொன்று
வெற்றியால்  சபைதனிலே  யிருந்து  கொண்டு
    விளையாடுங்  காளியுட  தியான  மோது
பத்தியாய்  ஜாலமையைக்  கோலிற்  றேய்க்கப்
    பண்பான  செம்பஞ்சு  பந்து  மாடும்
சந்தியாய்  யைந்து  பந்தும்  லட்சும்  பந்தாய்
    சார்வாக  ஆடுமப்பா  தாழ்வில்  லாதே.
 
விளக்கவுரை :
 
காளி  தியானத்தின்  மூலம்  சித்திப்பெற்ற  உனக்கு மற்றொரு  ஜாலவித்தையைச்  சொலுகிறேன்  கேட்  பாயாக  ஒரு  கோலும்  கொண்டு  வந்து  சபையினரைக்  கூட்டிவைத்து  நீ  காளியை  தியானம்  செய்.  பின்னர்  ஜால  மையைக்  கொஞ்சம்  எடுத்து  அந்த  கோலில்  தேய்த்து  விட்டு,  அந்தக்  கோலினால்  இந்த  ஐந்து  பந்துகளை  ஆட்டினால்  இலட்சம்  பந்துகள்  ஆடினாற்  போல  சபையிலுள்ள  வா்களுக்குத்  தெரியும்.

எட்டி   முளை   வித்தை
 
102. இல்லப்பா  அறுபத்து  நாலு  மோடி
    இதமாக  வாருமடா  விந்தக்  காளி
வல்லப்பா  இன்னமொரு  வித்தைக்  கேளு
    வளமான  மாங்கொடியுஞ்  சீலை  தேய்த்து
கொள்ளவே  சவத்தினுட  தயிலங்  கூட்டிக்
    குணமாக  யைங்கோலத்  தயிலஞ்  சேரு
சொல்லவே  மூன்றையுந்தான்  சுருக்கிக்  கொண்டு
    செய்மையாய்க்  குழிக்கல்லி  லரைத்திடாயே.
 
விளக்கவுரை :
 
காளிகாதேவியின்  அருளினால்  அறுபத்து  நான்கு  மோடி  வித்தைகளைச்  செய்யலாம். அதில்  இன்னொரு  ஜால  வித்தையைக்  கூறுகிறேன்  கேட்பாயாக. கொடியுடன்  சீலையுஞ்  சோ்த்து  சவத்தின்  தயிலமும்,  ஐங்கோலத்  தயிலத்தையும்  கூடச்  சோ்த்து  மூன்றையும்  ஒன்றகாகக்  கல்வத்திலிட்டு  நன்றாக  மைபோல  அரைக்கவும்.
 
103. அரைத்தெடுத்துச்  சிமிழிதனில்  வைத்துக்  கொண்டு
    அடைவாக  மந்திரத்தைச்  சொல்லக்  கேளு
திரைய  நம் ... யங் ... வங் ... சிங் ...சுவாஹா  வென்று 
    திரமாக  லட்சமுரு  செபித்துப்  போடு
கருத்தடவி  எட்டிமுளை  தன்னைச்  சீவி
    கனிவாக  மந்திர  மாயிரந்தா  னோதி
நிறைத்தமகா  பூசைபலி  பெலக்கச்  செய்து
    நினைவாக  முளையெடுத்துக்  கடாவு  வாயே.
 
விளக்கவுரை :

அரைத்ததை  எடுத்து  சிமிழில்  வைத்துக்  கொண்டு  பயபக்தியுடன்  கீழ்காணும்  மந்திரத்தைச்  சொல்லவும்.  "நம்  ...யங்... வங் ...சிங் ...சுவாஹா ... "  என்று  இலட்சம்  தடவைகள்  செபிக்கவும்.  பின்னர்  எட்டி  முளையைச்  சீவி  கருவைத்  தடவி  ஆயிரமந்திரம்  சொல்லி  பலிகொடுத்து  பூசை  செய்யவும்.  பின்னர்  முளையை  அடிப்பாயாக.
 
104. கடாவுவாய்  கடைமுன்னே  கடைநில்லாது
    கனிவாகச்  செக்கடியி  லெண்ணை  யில்லை
அடாவுவயா  யாலையாடி  சாறு  மில்லை
    அப்பனே  இன்னமொரு  வஸ்து  பட்டி
கிடாவவே  வஸ்துவது  மிறங்காதப்பா
    கிருபையுள்ள  சூளையது  வேகாதப்பா
நடாவியே  கொல்லனுலை  சுண்ணாம்புச்  சூளை
    நலமான  செங்கல்லின்  சூளை  தானே.
 
விளக்கவுரை :
 
முளையை  அடித்ததும்  ஒரு  கடை  முன்னே  ஒரு  கடை  நில்லாது. செக்கடியில்  எண்ணெய்  இருக்காது. கரும்பாலையில்  சாறு  இருக்காது. பொருள்கள்  இருக்கும்  இடத்தில்  எந்த  பொருளும்  இருக்காது. சூளையில்  எதுவும்  வேகாது. கொல்லனுலை, சுண்ணாம்புச்  சூளை, செங்கல்  சூளையில்  செங்கள்  வேகாது. அது  மட்டுமல்லாது  மேலும் -
 
105. தானேதான் மயானமுன்பு பிணம் வேகாது
    தயவான மக்காடி யிசைவு மில்லை
தேனேதான் தச்சனொடு கன்னான் தட்டான்
    தெளிவாகப் பட்டைமுன் தாக்கிப் போடு
மானேதான் பரிகாரி சிரைக்கும் பக்கல்
    மைந்தனே யடுப்படியில் வேகாதென்றும்
வானேதா னிதுகளெல்லாம் ஸ்தம்பனமே செய்யும்
    வளமான போகருட கடாட்சந் தானே.
 
விளக்கவுரை :
 
சுடுகாட்டில் பிணம் வேகாது.  மக்கமடி  அசைவு  இருக்காது. தச்சன், கன்னான், தட்டான், பட்டரைகளில் இதனைப் போட்டால் வேலைகள் எதுவும் நடக்காது. அடுப்பில் எது வைத்தாலும் வேகாது. இவைகளெல்லாம் ஸ்தம்பித்து நின்றுவிடும். இவையெல்லாம் போகருடைய அருளினால் நடப்பதாகும்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு, புலிப்பாணி, Pulipani, Pulipani Jaalathirattu, Pulipani Siththar