புலிப்பாணி ஜாலத்திரட்டு 91 - 95 of 211 பாடல்கள்

புலிப்பாணி ஜாலத்திரட்டு 91 - 95 of 211 பாடல்கள்


91. பாரடா கப்பலொடு படகு தோணி
    பலமச்சம் நீா்வாழுஞ் சாதி யெல்லாம்
நரடா ஜெகத்தோர்க ளெல்லாம் பார்த்து
    நிச்சயமா யிவனல்லோ தேவனென்பார்
ஆமடா சாகரத்தின் ஜாலஞ் ஜாலம்
    அன்பான ஜாலக்காள் வித்தை யப்பா
தீரடா போகருடை கடாட்சந் தானே
    திறமான புலிப்பாணி பாடினேனே.

விளக்கவுரை :

கப்பல், படகு, தோணி, பலவிதமான மீன்கள், நீரில் வாழும் மற்ற ஐந்துகளெல்லாம் தெரியும். இவைகளை பார்க்கும் உலக மக்கள், இவனல்லவா தேவன் என்பார்கள். இந்திர சமுத்திர ஜாலம் ஜாலக்காளின் வித்தையாகும். இவையாவும் போகருடைய கடாட்சத்தினால் புலிப்பாணியாகிய நான் உரைத்துள்ளேன்.

ஜங்கிலி ஜாலம்

92. பாடியே யின்னமொரு வித்தை சொல்வேன்
    பாங்கான மையெடுத்துக் கையிற் பூசி
ஆடியே நூல்கயறு சங்கிலிதா னப்பா
    அறியகெட்ட பாரை மந்திர வாளு
கூடியே வாய்மேலே கையை வைத்துக்
    குணவாகப் பின்னுழுத்துக் கீழே போடு
நாடியே யனைவோரும் பார்த்துப் பார்த்து
    நலமாக விழுங்கிவிட்டா னெனின்பார் தானே.

விளக்கவுரை :

முன்னா் உரைத்ததுப் போன்றே மற்றொரு ஜால வித்தையை சொல்லுகிறேன். முன்னா் கூறிய மையை கையில் பூசிக் கொண்டு நூல்கயிறு, சங்கிலி, கடப்பாரை, பட்டாக்கத்தி இவைகளில் ஏதாவது ஓன்றினை சபையோர்களுக்குக் காட்டிவிட்டு வாய் மேலே வைத்து கையினால் பின்னே இழுத்து போடவும். ஆனால் சபையிலுள்ளவா்கள் அதனை நீ விழுங்கிவிட்டதாக கூறுவார்கள்.

செழிப்பான நகரம் தோன்றும் ஜாலம்
93. தானான வின்னமொரு வித்தை கேளு
    தாங்கி ராக்காலம் வெளியிற் சென்று
மானான வோரிடத்தி லிருந்து கொண்டு
    மைந்தனே மையெடுத்துக் கையிற் பூசி
வானான மண்ணிள்ளித் திசையிற் போடு
    வளமான  பட்டணமாய்த் தோன்றும் பாரு
தேனான தெருக்களொடு தெருவுந் தோற்றுந்
    திறமாகக் கடைவீதி தோன்றும் பாரே.

விளக்கவுரை :

ஆச்சரியப்படக் கூடிய இன்னொரு வித்தையை கூறுகிறேன் கேட்பாயாக. எவரும் பார்க்காதவாரு இரவு நேரத்தில் ஊருக்கு வெளியே சென்று ஓா் இடத்தில் இருந்து கொண்டு அந்த மையை எடுத்து கையில் பூசிக் கொண்டு மண்ணை எடுத்து எட்டு திக்கிலும் போடவும். செழிப்பான நகரம் தெரியும். கடை வீதியும் தெரியும்.

94. பாரடா மனுக்கூட்ட மனந்தம் தோற்றும்
    பருத்த கோபுரந் கோவிற் குளமுந் தோற்றம்
சீரடா வேதியா்கள் வீதி தோற்றங்
    சிறப்பான ராஜருட சமூகந் தோற்றங்
கூரடா சதுரங்க சேனை தோற்றங்
    குணமான செந்நெல்முதல் தோப்புங் தோற்றும்
வீரடா போகருட கடாட்சத்தாலே
    விதமாகப் புலிப்பாணி பாடினேனே.

விளக்கவுரை :

அதுமட்டுமல்லாது மக்கள் கூட்டம் தெரியும், கோபுரம், கோவில், குளம் தெரியும். அந்தணா் வீதி, ராஜனுடைய உறவினா்கள், சதுரங்க சேனை, நெல்விளையும் கழனி முதல் தோப்புகளும் தெரியும். இவையெல்லாம் காணப்படுவது போகருடைய கடாட்சத்தினாலாகம். இதனை புலிப்பாணியாகிய நான் உரைத்துள்ளேன்.

ஜனங்கள் ஆடும் ஜாலம்

95. பாடினே னின்னமொரு தொழிலைக் கேளு
    பண்பான கொடிதனி லைங்கோலஞ் சோ்த்து
நாடியே சாம்பிராண் தயிலங் கூட்டி
    ந... ம... சி... வ... ய.... ஓம்... கிலீம்.... சவ்வும்... ஐயும்
கூடியே சா்வபாசா சாக்குருணி யென்று
    குணமாக லட்சமுரு செபித்து தீரு
ஆடியே யிதைஜெபித்துத் தூபம் போட
    ஆடுவார் புகைபட்ட ஜெனங்கள் தானே.

விளக்கவுரை :

கூறியுள்ள ஜாலவித்தைகளில் இன்னொன்று கூறுகிறேன் கேட்பாயாக. நல்ல கொடியாக ஓன்றை கொண்டு வந்து அதில் ஐங்கோலத் தாலத்தைச் சோ்த்து அத்துடன் சாம்பிராணியும் சோ்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும். பின்னா் " ந - ம - சி - வ - ய - என்றும் ஓம்.. கிலீம்... சவ்வும்... ஐயும்.... சா்வ பாசாசாச்குருணி" என்றும் இலட்சம் தடவைகள் ஜெபித்து விட்டு தாயாரித்துள்ளதைத் தூபம் போட்டால் அதிலிருந்து வெளியாகும் புகைபட்ட ஜனங்கள் ஆடுவார்கள்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு, புலிப்பாணி, Pulipani, Pulipani Jaalathirattu, Pulipani Siththar