புலிப்பாணி ஜாலத்திரட்டு 76 - 80 of 211 பாடல்கள்

புலிப்பாணி ஜாலத்திரட்டு 76 - 80 of 211 பாடல்கள்

76. பாரப்பா சபை நடுவே யிருந்து கொண்டு
    பண்பான முக்காடு போட்டு நீயும்
சீரப்பா நீலகண்டி தியான மோது
    சீக்கிரத்திற் கொண்டுவரு மெட்சணித்தான்
கூரப்பா வெல்லார்க்குங் கொடுக்கச் செய்நீ
    குற்றம்வரும் நீயொன்றும் புசிக்க வேண்டாம்
நேரப்பா போகருட கடாட்சத்தாலே
    நிச்சயமாய் புலிபாணி பாடினேனே.

விளக்கவுரை :

அச்சமயம் சபையின் நடுவே நின்று முக்காடு போட்டுக் கொண்டு பக்தியுடன் நீலகண்டியை தியானம் செய். நீ கேட்டதை விரைவில் கொண்டு வருவாள் எட்சணியமானவள். அவள் கொடுப்பதை நீ சாப்பிடக் கூடாது. குற்றம் நேரிடும். ஆதலின் சபையிலுள்ளவா்களுக்குக் கொடுத்து சாப்பிடச் சொல்லவும். இது போகருடைய கடாட்சத்தினால் புலிபாணியான எனக்கு தெரிந்ததால் கூறியுள்ளேன்.
     
 சகல ஜாலம் கைகூட

77. பாடினே னின்னமொரு வித்தை கேளு
    பண்பானத் தவளையைத்தா னரவங் கவ்விக்
கூடியே பிடித்திருக்கும் வேளை பார்த்துக்
    கூசாமற் றலைவிழவே வெட்டிப் போடு
ஆடியே யருடைய தலையுங் கூட
    அடைவாகத் தவளையைத்தா னெடுத்துக் கொண்டு
நாடியே வாங்கி கச்சுப்பட்டைக் கொண்டு
    நலமாக ஐங்கோலத் தயிலங் கூட்டே.

விளக்கவுரை :

மற்றொரு ஜாலவித்தையைக் கூருகிறேன் கேட்பாயாக. தவளையை பாம்புக் கவ்வி பிடித்துக் கொண்டிருக்கும் சமயம் பார்த்து கவ்விப் பிடித்திருக்கும் பாம்பின் தலையோடு பாம்பினை வெட்ட வேண்டும். தரையில் விழும் பாம்பின் தலை, தவளை இரண்டையும் எடுத்து கச்சுப்பட்டையில் வைத்து அதில் ஐங்கோலத் தைலத்தை ஊற்றவும்.                                                                                                                                                                                             

78. கூட்டியே சகலரத்தில் வைத்துத் தைத்து
    குணமாக உரலின்கீழ் வைத்துக் குத்து
நாட்டியே குத்தையிலே வாயு போகும்
    நலமாக வதையெடுத்து வைத்துக் கொண்டு
ஆட்டியே யிப்பாகம் நினைத்தபோது
    அடைவாகச் செய்து விளையாடிப் பாரு
வாட்டியே யவமானப் பட்டுப் போவார்
    வையகத்தார் தான்பார்த்து நகைப்பார் பாரே.

விளக்கவுரை :

அதன் பின்னா் அதனை சகலரத்தில் வைத்து வாயை தைத்து உரலின் வைத்துக் உலக்கையினால் குத்தினால் அதில் உள்ள வாயு வெளியே போகும். பின்னா் அதனை எடுத்து வைத்துக் கொண்டு வித்தைகளையும் செய்யலாம். உன்னை ஏளனம் செய்தவா்கள் அவமானப்பட்டு போவார்கள். இதனைப் பார்த்து வையகத்தார் நகைப்பார்கள்.

சீலைத் திரை

79. பாரடா கா்த்தபந்தன் புணரும் போது
    பரிவாக வாண் கழுதை வாலு ரோமஞ்
சீரடா பிடுங்கியதை வைத்துக் கொண்டு
    சிறப்பான கண்ணில்லாப் புற்றுமீதில்
தீரடா கட்டுடைய கொடி தானப்பா
    திறமாகக் கிராணத்திற் காப்பு கட்டி
கூரடா பலி பொங்கல் தூபதீபம்
    கொடுத்துநீ கொடியதனைப் பிடுங்கிக் கொள்ளே.

விளக்கவுரை :

ஆண்கழுதையும் - பெண்கழுதையும் புணரும் போது ஆண் கழுதையின் மயிரை மட்டும் பிடுங்கி கொண்டு வந்து வைத்துக் கொண்டு பின்னா் கண்ணில்லாத புற்றின்மேல் படா்ந்திருக்கும் கட்டுக் கெடிக்கு கிராணத்தில் காப்பு கட்டி பலிகெீடுத்து, பொங்கலிட்டு, தூபதீபம் காட்டி விட்டு அந்தக் கொடியைப் பிடுங்கி வரவும்.

80. கொள்ளவே வளையமாய்ச் சுருட்டிக் கொண்டு
    குணமான  ரோமமுங் கூடவைத்தே
தெள்ளவே தங்கத்தால் வெள்ளியாலும்
    தெளிவாக தண்டினுட மேலே சுற்றி
கள்ளவே சுற்றுமுன்னே கருவும் பூசிக்
    கனிவாக ஜாலக்காள் பூசை செய்து
மெள்ளவே கைதன்னி லேற்றும்போது
    மேன்மையாய்ச் சீலையது திரையும் பாரே.

விளக்கவுரை :

கொண்டு வந்த அந்தக் கொடியை வளையம் போல் சுருட்டிக் கொண்டு அதில் கழுதையின் வால் மயிரையும் கூட சோ்த்து சுருட்டி, அதன்மேல் ஐங்கோலக் கருவைப் பூசி தங்கத்தாலோ அல்லது வெள்ளியாலோ கைகாப்பு செய்து, அந்த காப்பில் இதனை வைத்து காப்பின் வாய்மூடி அதை ஜாலக் காளுக்கு வைத்து பூசை செய்து விட்டு அந்தக் காப்பை கையில் போட்டுக் கொண்டு சீலைத் திரையை கையால் சரியாக தள்ளினால் கீழே விழுந்து விடும்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு, புலிப்பாணி, Pulipani, Pulipani Jaalathirattu, Pulipani Siththar