புலிப்பாணி ஜாலத்திரட்டு 141 - 145 of 211 பாடல்கள்

புலிப்பாணி ஜாலத்திரட்டு 141 - 145 of 211 பாடல்கள் 


வசியம்  செய்தல்

141. போடவே  யின்னமொன்று  சொல்லக்  கேளு
    புகன்றபொன்  னாவாரை  மூலம்  வாங்கி
ஆடவே  கருக்கியதை  நிழலிலுலர்த்தி 
    அப்பனே  குழித்தயிலமாக  வாங்கி
கூடவே  குழியம்மி  தன்னில்  விட்டுக் 
    குக்குடத்தின்  வெண்கருவுங்  கூடவிட்டுச்
சாடவே  மாக்கொடியும்  புனுகும்  பூரம்
    தக்க  கோரோசனையும்  வகைக்கு  வொன்றே.

விளக்கவுரை :

இன்னொன்று  வித்தையைக்  கூறுகிறேன்  கேட்பாயாக.பொன்னாவாரை  வேரைக்  கொண்டு  வந்து  நன்றாகக்  கருகும்படி  நிழலில்  உலர்த்தியெடுத்து  முறையாக  குழித்தயிலம்  செய்து  அதனை  கல்வத்திலிட்டு , கோழி  முட்டையின்  வெண்கருவை  அதில்  சேர்த்து  மேலும்  மாக்கொடி , புனுகு , பச்சைக்  கற்பூரம் , கோரோசனை  ஆகிய  இவைகளில்  வகைக்கு  ஒரு  விராகனெடை  எடுத்துச்  சேர்த்துக்  கொள்ளவும்.

142. ஒன்றான  வகைவகைக்கு  விராக  னொன்று
    ஒழுங்காகத்  தானரைத்துச்  சிமிழில்  வைத்து
நன்றாகத்  திலர்தமிடப்  புருஷ  ரெல்லாம்
    நாயகியாள்  கேட்டதெல்லா  மீவார்  பாரு
ஒன்றாக  வவர்வந்து  வாசல்  காப்பார்
    உனக்கடிமை  யாகவல்லோ  வேலை  செய்வார்
பன்றாக  வவளையே  காணா  விட்டால்
    பதறுவார்  சிணுங்குவார்  கோபிப்பாரே.

விளக்கவுரை :

வகைக்கு  ஒரு  விராகனெடை  வீதம்  எடுத்ததை  அந்தக்  கல்வத்திலிட்டு  நன்றாக  மைபோல  அரைத்தெடுத்து  சிமிழில்  வைத்துக்கொள்ளவும். சிமிழிலிருந்து  கொஞ்சம்  எடுத்து  திலகமிட்டுக்  கொண்டால்  புருஷர்களெல்லாம்  மனைவி  கேட்பதெல்லாம்  கொடுப்பார்கள். அவள்  சொல்லும்  வேலைகளையெல்லாம்  வாயில்  காப்பார்போல்  வேலை  செய்வார். அருள்  ஒரு  நிமிடம்  இல்லை  யென்றாலும்  பதறுவார் , சிணுங்கி  கோபிப்பார். இது  வசியமையாகும்.

வசியம்  செய்ய  மற்றொரு  வழி

143. கோவிதமா  யின்னமொரு  மார்க்கங்  கேளு
    குணமாம்  புல்லாமணக்குச்  சமூலம்  வாங்கி
ஆவிதமாய்  மாதவிடாய்  மூன்று  நாளும்
    அப்பனே  கட்டிவைத்து  நாலா  நாளில்
தவிதமாய்  மாக்கொடியும்  விராக  னொன்று
    தனியாக  முன்சீலை  விராக  னொன்று
பூவிதமா  யவணீரா  லரைத்து  மைபோல்
    பொங்கமுடன்  துவரைபோற்  குளிகை  செய்யே.

விளக்கவுரை :

வசியம்  செய்யும்  மற்றொரு  முறையைக்  கூறுகிறேன்  கேட்பாயாக.  புல்லாமணக்கு  சமூலம்  கொண்டு  வந்து  மாதவிடாகும்  மூன்று  நாட்களும்  அங்கு  வைத்துக்  கொள்ளும்  துணியில்  இந்த  சமூலத்தை  வைத்துக்  கட்டி  கொண்டு  நான்காவது  நாள்  அதனை  எடுத்து  அதனுடன்  மாக்கொடி  ஒரு  விராகன்  எடை , சமூலம்  கட்டியத்  துணி  ஒரு  விராகன்  எடை  ஆகிய  இவைகளை  சிறுநீர்விட்டு  மைபோல  அரைத்தெடுத்து  துவரைப்  பருப்பு  அளவுக்கு  குளிகைகளாகச்  செய்து  நிழலிலுர்த்தி  எடுத்துக்  கொள்ளவும்.

144. செய்யப்பா  குளிகையது  தாம்பூலத்திற்
    செயலான  வறுசுவையி  லன்னப்  பாலில்
வையப்பா  கொடுத்தவுடன்  மயங்குவார்கள்
     வாணுதலார்  தான்பிரியார்  மறுமுகமும்  பாரார்
கையப்பா  மகிழ்வாக  மருவி  வாவழ்வார் 
    கடன்வாங்கித்தான்  கொடுப்பார்  ஏவலாளாய்
ஐயப்பா  யவர்பிரியாச்  சிந்தை  செய்வார்
    அப்பனே  இனிபிரியுங்  குளிகை  யாட்டே.

விளக்கவுரை :

இந்த  குளியயை  வெற்றிலைப்  பாக்குடன்  சேர்த்தோ  அல்லது  அறுசுவை  உணவுடன்  சேர்த்தோ  அல்லது  பசும்  பாலில்  கலந்தோ  கொடுத்தால்  மயங்கி  போய்  பிரிய  மாட்டார்கள்.  வேறொரு  பெண்ணை  ஏறெடுத்தும்  பார்க்க  மாட்டார்கள்,  இணைபிரியாதிருப்பார்கள்.  கேட்பதை  வாங்கிக்  கொடுப்பார்கள்.  நீங்கள்  சொல்லும்  எந்த  வேலையையும்  மனம்  கோணாமல்  மகிழ்வுடன்  செய்வார்கள்.  இது  ஆற்றலுள்ள  குளிகையாகும்.

பெண் பிரிவுக்குக்  குளிகை

145. மாட்டடா  பெண்பிரியும்  பிரிவுக்  கெல்லாம்
    மைந்தனே  கடுகோடு  மயானச்  சாம்பல்
கூட்டடா  குடிபோன  வீட்டு  மண்ணும்
    குணமான  வருக்கனா  ளிரவு  வேளை
நாட்டடா  கத்தபந்தான்  புரண்ட  மண்ணும்
    நலமான  தச்சனுளிச்  சிறாவுஞ்  சேர்த்து
ஆட்டடா  முப்பாதை  பிரிந்த  மண்ணும்
    அப்பனே  மந்திரத்தைச்  சொல்லக்  கேளே.

விளக்கவுரை :

பெண்களைப்  பிரிப்பதற்க்கான  முறையைக்  கூறுகிறேன்  கேட்பாயாக . ஆற்றோரமாக  உள்ள  மயானத்திற்க்குச்  சென்று  பிணம்  எரித்த  சாம்பல் , குடிபோன  வீட்டில்  மண் , ஆதிவாரம்  இரவில்  கழுதை  புரண்ட  மண் , தச்சன்  உளிச்சிறாவும் , முச்சந்தி  கூடி  பிரிகின்ற  இடத்தின்  மண்ணும்  ஒன்றாகக்  கலந்து  கொள்ளவும் . இப்போது  அதற்கான  மந்திரத்தைச்  சொல்லுகிறேன்  கேள்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு, புலிப்பாணி, Pulipani, Pulipani Jaalathirattu, Pulipani Siththar