புலிப்பாணி ஜாலத்திரட்டு 116 - 120 of 211 பாடல்கள்

புலிப்பாணி ஜாலத்திரட்டு 116 - 120 of 211 பாடல்கள்



கொள்ளி ஜாலம்

116. செய்யவே  யின்னமொரு  வித்தை  கேளு
    சொன்ன  கொள்ளி  வாயினுட  ஜாலமப்பா
பையவே  சிவ  ...  வசி ... என்று  லட்சம்
    பாங்காகத்தான்  செபித்து  பூஜை  செய்து
உய்யவே  அக்கினியைத்  துணியிற்  சுற்றி
    உத்தமனே  தகட்டி  லட்சத்தைக்  கீறிக்
கையவே  யைங்காய  மைங்கோலந்  தான்
    கனிவாகச்  சுடலையுட  கருவும்  பூசே.

விளக்கவுரை :

இன்னொரு  ஜால  வித்தையைக்  கூறுகிறேன்  கேட்பாயாக.  இது  கொள்ளிவாய்  ஜாலமாகும்.  " சிவ ... வசி ... "  என்று  இலட்சம்  தடவை  உச்சரித்து  பூஜை  செய்து  நெருப்பை  துணியில்,  தகட்டில்  அட்சரத்தை  எழுதி  ஐங்கோல  மையைத்  தடவி,  சுடுகாட்டு  கருவையும்  அதன்மீது  பூசவும்.

117. பூசியே  யெதிரியுட  பேரை  நாட்டிப்
    பொங்கமுடன்  பூசித்து  கொள்ளி  வாய்க்கு
ஆசியே  பந்தெடுத்து  தகட்டில்  வைத்தே
    யப்பனே  இருதலைக்  கொள்ளிதானும்
வாசியே  சத்துருவின்  மனைகள்  தோறும்
    வைத்துநீ  கொளுத்தென்று  தியானமோது
காசியே  கொளுத்துமடா  திரியும்  பந்தும்
    கடிதாகத்  கொளுத்திவிடுங்  கண்டு  பாரே.

விளக்கவுரை :

அதன்மீது  பூசிவிட்டு  எதிரியின்  பெயரை  அதன்மேல்  எழுதி  பூசித்துவிட்டு  கொள்ளிவாய்க்குப்  பந்தெடுத்து  தகட்டின்  மேல்  வைக்கவும்.  " இருதலைக்  கொள்ளியே,  பகைவரின்  வீட்டை  கொளுத்து"  என்று  தியானம்  செய்து  தகட்டின்  மேல்  உள்ள  பந்தைக்  கொளுத்தினால்  உடனே  எதிரியின்  வீடும்  எரிவதைக்  காணலாம்.

மலக்குட்டி  சாத்தான்  தியானம்

118. பாரடா  மலக்குட்டி  தியானங்  கேளு
    பாங்கான  ஒம் ...  இரீம்  ...  வா  ...  வா ...  வென்று
கூறடா  மலக்குட்டிச்  சாத்தா  னென்று
    குணமாகத்  தான்வைத்து  பூசை  கொண்டு
வீரடா  நான்  சொல்லும்  வேலை  கேட்டு
    வீணாக  மலமதனை  வாரி  நீயும்
சேரடா  நானினைத்த  விடத்திற்  போடு
    செப்பியது  ராசபலி  பெலக்கச்  செய்யே.

விளக்கவுரை :

மலக்குட்டி  ஜாலம்  செய்ய  அதற்கான  தியான  முறையைக்  கூறுகிறேன்  கேட்பாயாக.  மலக்குட்டி  என்னும்  குட்டி  சாத்தானை  நினைத்து,  " ஒம் ... இரீம் ... வா ... வா ... மலக்குட்டி  சாத்தானே ... "  என்று  சொல்லி  பூசை  செய்து  நான்  சொல்லும்  வேலையைக்  கேட்டு,  மலங்களையெல்லாம்  வாரி  நான்  நினைத்த  இடங்களிளெல்லாம் போடு"  என்று  சொல்லி  ராஜ  பலி  பூசை  செய்யலாம்.

மலக்குட்டி  ஜாலம்

119. செய்யவே  மந்திரத்தைத்  தகட்டிற்  கீறிச்
    செம்மையா  யைங்காய  மைங்கோலஞ்  சேர்த்து
வையகத்திற்  சுடலையுட  கருவுங்  கூட்டி
    வளமாக  மத்தித்துத்  தகட்டிற்  பூசிப்
பையவே  யெதிரியின்பேர்  தகட்டில்  நாட்டி
    பாங்காக  மந்திரத்தை  லட்சமோது
ஐயமின்றி  பூசை  பலி  பெலக்கச்  செய்து
    அப்பனே  மலமெடுத்துத்  தகட்டில்  வையே.

விளக்கவுரை :

முன்னர்  கூறியுள்ள  மந்திரத்தை  தகட்டில்  கீறி  எழுதி  ஐங்கோலல  மையைச்  சேர்த்து  சுடுகாட்டு  கருவுஞ்  சேர்த்துக்  குழைத்து  அந்த  தகட்டில்  பூசி  எதிரியின்  பெயரை  அந்த  தகட்டில்  எழுதி  மந்திரத்தை  இலட்சம்  தடவைகள்  உச்சரித்து  பூசை  பலி  ஆகியவற்றைச்  சிறப்பாகச்  செய்து  மலத்தை  எடுத்து  அந்தத்  தகட்டின்  மீது  வைத்திடவும்.

120. வைக்கயிலே  மலமிந்தா  மலக்குட்டி  யென்று
    வைத்தல்லோ  மந்திரத்தைத்  தியானஞ்  செய்நீ
வலக்கையிலே  மலமதனை  வாரிக்  கொண்டு
    வகையாக  நீநினைத்த  விடங்கள்  தோறுஞ்
சொக்கயிலே  தகடெடுத்துக்  கழுவிப்  போடு
    சொகுசாகப்  போகுமடா  தீர்க்கமாக
உலக்கையிலே  யிதுவல்லவோ  வுலகபேதம்
    உத்தமனே  மலக்குட்டிச்  செய்கைதானே.

விளக்கவுரை :

பின்னர் , " ஒ ... மலக்குட்டி  மலம்  இந்தா"  என்று  சொல்லி  முன்னர்  கூறிய  மந்திரத்தைச்  சொல்லி  தியானம்  செய்து  விட்டு  வலது  கையினால்  மலத்தை  வாரிக்  கொண்டு  நீ  நினைத்த  இடங்களிளெல்லாம்  போடு"   என்று  கூறினால்  எதிரியின்  இடத்திற்கெல்லாம்  மலத்தைப்  போடும்.  அதன்  பின்னர்  அந்த  தகடை  யெடுத்துக்  கழுவிப்  போட்டு  விடு.  இது  மலக்  குட்டியின்  செயலாகும்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு, புலிப்பாணி, Pulipani, Pulipani Jaalathirattu, Pulipani Siththar