புலிப்பாணி ஜாலத்திரட்டு 146 - 150 of 211 பாடல்கள்

புலிப்பாணி ஜாலத்திரட்டு 146 - 150 of 211 பாடல்கள் 


146. கேளடா  ஒம் ... ஸ்ரீறீம் ... பிரிய  நசி ... நசி ... யென்று
    கெணிதமுட  னிருவட  பேருமாறிப்
சூளடா  வைங்காய  மரைத்துப்  பூசி
    கறுக்கா  மந்திரமா  யிரந்தா  னோதி
வாளடா  சீலையிலே  வைத்துக்  கட்டி
    வளமாக  பூசைசெய்  திருப்பின்  முன்பில்
கேளடா  வைத்துவிடு  இருவர்  தாமுங்
    கொற்றவனே  பிரிபட்டுப்  போவார்  பாரே.

விளக்கவுரை :

"ஒம் ... ஸ்ரீறீம் ... பிரிய  நசி ... நசி ..."  என்று  இரண்டு  பேருடைய  (ஆண் - பெண்)  அதாவது  கணவன்  - மனைவி  பேரை  மாறி  மாறி  எழுதிய  தகட்டில்  ஐங்காயம்  அரைத்துப்  பூசி  மேற்படி  மந்திரத்தை  ஆயிரம்  தடவைகள்  ஜெபித்து  சீலையில்  வைத்துக்  கட்டி  பூசை  செய்து  கதவின்  முன்னே  இரப்பரில்  வைத்துவிட்டு  வந்துவிட்டால்  கணவன் - மனைவி  இருவரும்  ஒருவரைவிட்டு  ஒருவர்  பிரிந்து  விடுவார்கள்.

தாதுபுஷ்டி  விருத்தி

147. பாரப்பா  சந்தனமுந்  தேற்றான  வித்தும்
    பண்பான  பூமிசர்க்  கரையின்  மூலஞ்
சேரப்பா  பூனையென்ற  காலி  வித்துஞ்
    செயலான  முருங்கை  வேர்ப்பட்டை  கூட்டி
கூறப்பா  வகைவகைக்கு  விராகன்  ரெண்டு
    கொற்றவனே  தானரைத்து  தேங்காய்  பாலின்
தீரப்பா  சீனி  சர்க்கரையும்  போட்டுத்
    திறமாகக்  குடிப்பாயீ  ராறு  நாளாமே.

விளக்கவுரை :

தாதுபுஷ்டிக்கான  வழிமுறையைச்  சொல்லுகிறேன்  கேள்.  சந்தனம் , தேற்றான்  கொட்டை , பூமிசர்க்கரைக்  கிழங்கு , பூனைகாலி  வித்து , முருங்கை  வேர்ப்பட்டை  இவைகளிளெல்லாம்  வகைக்கு  இரண்டு  விராகன்  எடை  வீதம்  எடுத்துக்  கல்வத்திலிட்டு  தேங்காய்ப்  பால்  விட்டு  நன்றாகக்  அரைத்தெடுத்து  சீனிசர்க்கரைச்  சேர்த்து  பன்னிரெண்டு  நாட்கள்  குடிக்கவும்.

148. ஆமடா  குடித்துவரத்  தாது  புஷ்டி
    அப்பனே  வீரியந்தான்  விளையும்  போது
தாமடா  சூடுகள்தான்  தணியும்  பாரு
    தளதளப்பாய்  தேகமது  காந்தி  யுண்டாம்
வாமடா  மங்கையரைப்  புணர்ந்தா  யானால்
    வளமான  மாகமதனோ  விவனென்  பார்கள்
நாமடா  போகருட  கடாட்சத்  தாலே
    நலமாகப்  புலிப்பாணி  பாடினானே.

விளக்கவுரை :

பன்னிரெண்டு  நாட்கள்  குடித்தால்  தாதுபுஷ்டி  ஏற்பட்டு  வீரியம்  உண்டாகும்.  உடல்  சூடு  தணியும்.  தேகம்  பொலிவடையும்.  மங்கையரைப்  புணர்ந்தால்  இவன்  மன்மதனோ  என்று  எண்ணுவார்கள்.  இதனை  எனது  குரு  போகருடைய  அருளினால்  புலிப்பாணியாகிய  நான்  புகலுகின்றேன்.

மண்  பாண்டமுடைய

149. பாடியே  யின்னமொரு  வித்தை  கேளு
    பிரிவான  சாராய  மூன்று  பட்டை
நாடியே  கொணர்ந்து  கருச்சீலை  சுற்றி
    நாயகனே  காளிகோயில்  முன்பு  வைக்க
ஆடியே  பானையெல்லா  முடையும்  பாரு
    அடைவாக  விற்காது  கெட்டுப்  போகும்
கூடியே  எடுத்தெறிந்து  போட்டா  யானால்
    குணமாகப்  பானையது  விளையும்  பாரே.

விளக்கவுரை :

இப்போது  மற்றோரு  ஜால  வித்தையைக்  கூறுகிறேன்  கேட்பாயாக.   சாராயம்  ஊறுகின்ற  வெள்வேலன்  பட்டை  மூன்று  கொண்டு  வந்து  கருப்புச்  சீலையை  அதன்மீது  சுற்றி,  காளிதேவியின்  கோயிலின்  முன்பாக  வைத்தால்  பானைகள்  எல்லாம்  உடைந்துவிடும்.  அதனால்  விற்பனையாகாது.  பின்னர்  வைத்ததை  எடுத்து  போட்டுவிட்டால்  உடைந்த  பானைகளெல்லாம்  உடையாத  பானைகளாக  மாறிவிடும்.

விளைச்சல்  கெட்டுப்  போக

150. விளைவுகெடக்  கொடிவேலிக்  காப்புக்  கட்டி
    விதமாகத்  தா ...  வென்று  லட்சமோது
களவாகக்  கலசத்தில்  வைத்து  மூடிக்
    கனிவாகக்  கருக்கூட்டி  காடுசெந்நெல்
விளைபெருகுங்  கோடிக்காலுங்  சோலை  தோப்பும்
    விதமான  தென்னமரச்  சோலை  தோப்பும்
அளவுபெற  வைக்கவெல்லா  பலனுங்  குன்றும்
    அப்பனே  யெடுத்தெறிந்தால்  பலனுண்டாமே. 

விளக்கவுரை :

விளைச்சல்  கெட்டுப்போக  ஒருமுறையை  உரைக்கிறேன்  கேள்.  கொடிவேலி  அதாவது  சித்திரமூலச்  செடிக்குக்  காப்பு  கட்டி  "தாவென்று"  இலட்சம்  தடவைகள்  உச்சரித்துவிட்டு  அதனைக்  கொண்டு  வந்து  கலசத்தில்  வைத்துமூடி  கருக்  கூட்டி  மூடி  நெல்  விளையும்  நிலம்,  கொடிக்கால்  தோட்டம்,  வாழைமரம்  தோட்டம்,  தென்னந்  தோப்பு  போன்ற  இடங்களில்  இதனைப்  புதைத்து  வைத்தால்  விளைச்சல்  பலன்  அளிக்காது.  கெட்டுவிடும்.  உடனே  புதைத்தை  எடுத்துப்  போட்டுவிட்டால்  பலனுண்டாகும்

புலிப்பாணி ஜாலத்திரட்டு, புலிப்பாணி, Pulipani, Pulipani Jaalathirattu, Pulipani Siththar