புலிப்பாணி ஜாலத்திரட்டு 181 - 185 of 211 பாடல்கள்

புலிப்பாணி ஜாலத்திரட்டு 181 - 185 of 211 பாடல்கள் 



உடுக்கு  கட்டல்

181. பாரடா  சிவனாணை  சிற்றுக்  கடைச்சான்
    பண்பாகச்  சிவதம்மை  பகவதியாணை
கூரடா  ஐயுங்  கிலியும்  சவ்வுங்  கட்டு
    குறிப்பாக  மாதவ  ராணைக்  கட்டு
சேரடா  ஐயுங்  கிலியுங்  சுவாஹா  வென்று
    சிறப்பாக  ஜெபித்தவுட  னுடுக்கு  கட்டும்
விதமான  போகருட  கடாட்சந்தானே.

விளக்கவுரை :

சிவபெருமான்  கையிலுள்ள  உடுக்கை  போன்று  உடுக்கையைக்  கட்ட  வேண்டுமானால் , சிவனையும் - பார்வதியையும்  நினைத்து  " ஐயுங் ... கிலியுங் ... சவ்வும் , கட்டு"  என்றும் , "ஐயுங் ... கிலியுங் ... சுவாஹா ..."  என்று  கூறியதும் , " ஆதியந்தி  மூலங்  கட்டு"  என்று  ஜெபித்தல்  உடுக்கு  கட்டும்.  இது  போகருடைய  கடாட்சமாகும்.

விபூதியினால் வியாதிகள்  குணமாக

182. தாமப்பா  ஒர்துளி  யந்த  துளி
    தயவான  முன்திருக்  கண்ணிற்  பின்தூளி
பானப்பா  காய்ச்சல்  தலை  வலியும்
    பாரிற்பறந்தோடச்  சுவாமி  குருவாணை  போவென்
றானப்பா  விபூதியைநீ  தியான  மோதி
    யளித்தவுடன்  பலபிணியு  மகன்று  போகும்
வானப்பா  போகருட  கடாட்சத்  தாலே
    வளமாக  புவிப்பாணி  பாடினேனே.

விளக்கவுரை :

எந்த  வியாதியும்  வந்தவுடனேயே  அதற்கான  மருந்தை  உட்கொண்டு  உடலைப்  பாதுகாத்துக்  கொள்ள  வேண்டும்.  காய்ச்சல் , தலைவலி  முதலிய  பல  வியாதிகள்  நலமாக  "சுவாமி  குருவாணை - பீடித்த  நோய்  அகலவும் "  என்று  விபூதிப்  பூசி  தியானம்  செய்தால்  வந்த  பிணி  உடனே  அகன்றுவிடும்.  இதனை  போகருடைய  அருளினால்  புலிப்பாணி  பாடியுள்ளேன்.

நீலகண்ட  மந்திரம்

183. பாடியே  நீலகண்டா  சொல்லக்  கேளு
    பண்பாக  ஒம்நீல  கண்ட  மித்ரா
ஆடியே  மங் ... சிங் ... சர்வ ... மனோகண்ட
    அடைவாக  உம் ... படு ... சுவாஹா ... வென்று
கூடியே  லட்சமுரு  ஜெபித்துத்  தீரு
    குற்றமற்ற  தர்பணமும்  தானம்  பத்து
நாடியே  போகமா  யிருந்தாலப்பா
    நலமாக  அன்னமிடு  நூறு  பேர்க்கே.

விளக்கவுரை :

நீலகண்ட  மந்திரத்தினால்  எண்ணற்ற  பலன்கள்  கிடைக்கும்.  ஆதலின்  அதுபற்றிக்  கூறுகிறேன்  கேட்பாயாக.  " ஒம் ... நீலகண்ட  மித்ரா ... மங் ... சிங் ... சர்வ  மனோகண்டா ... உம் ... படு ... சுவாஹா ..."  என்று  இலட்சம்  தடவைகள்  ஜெபிக்கவும்.  தானமும் , தர்மமும்  செய்.  நூறு  பேர்களுக்கு  அன்னமிடவும்.

184. பேரான  பிராமணருக்  கன்னம்  போடு
    பேதமில்லை  பூஜையது  பத்தே  யாகும்
நேரான  பூசையது  வஸ்து  சுத்தி
    நிறுத்துவிடு  நீலகண்டஞ்  சித்தியாச்சு
சீரான  தம்பனம்நீ  செய்யவேண்டி
    செயலாக  சுவாமியே  பொன்னிறமதாச்சு
வீரான  நீலகண்டந்  தியானமப்பா
    விதமான  நெஞ்சிலெண்  கோணமெட்டே.

விளக்கவுரை :

நல்ல  பிராமணர்  நூறுபேர்களுக்கு  அன்னமிடலாம்.  இதனால்  பேதம்  எதுவுமில்லை.  இதனால்  பத்து  பூசைக்கு  சமமாகும்.  பூசையினால்  மனம்  சுத்தியாகும்.  இதனால்  நீலகண்ட  மந்திரம்  சித்தியாகும்.  நீ  ஸ்தம்பனம்  செய்தால்  சுவாமியும்  பொன்னிறமாகக்  காட்சியளிப்பாய்.  நீலகண்டத்  தியானம்  செய்ய  முதலில்  நெஞ்சில்  அதாவது  உனது  மனதில்  எண்  கோணம்  எட்டு  போட்டுக்  கொள்ளவும்.

185. ஒட்டியே  அம்மாரோ  மென்று  நாட்டில்
    ஒளிவான  வுருவமப்பா  முப்பத்தாறு 
தீட்டியே  செபித்தவுடன்  தங்கமாகும்
    தியமாகச்  சகலமும்  தம்பிக்கும்  பாரு
காட்டியே  சுவாமிதனை  வெள்ளையாக 
    கருத்தில்வைத்து  விபூதியிலே  வட்டங்  கீறி
ஆட்டியே  யம்மாரோமென்  ராயிரத்  தெட்டோதி
    அன்பாக  கொடுத்தவுடன்  அழைக்கும்  பாரே.

விளக்கவுரை :

எட்டு  கோணம்  போட்டதும்  உடனே  "அம்மாரோ"  என்று  கூறி  முப்பத்தாறு  உரு  செபித்தால்  சுவாமி  முதற்கொண்டு  எல்லாம்  தங்கம்  போன்று  பிரகாசிக்கும்.  எந்த  சிந்தனையுமில்லாமல்  சுவாமியை  மனதில்  நினைத்து  விபூதியில்  வட்டமாகக்  கீறிவிட்டு, "அம்மாரோ"  என்று  ஆயிரத்தெட்டு  தடவைகள்  ஒதவும்.  பின்னர்  அன்பாக  இந்த  விபூதியைக்  கொடுத்தால்  எல்லோரும்  மனமுவந்து  அழைப்பார்கள்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு, புலிப்பாணி, Pulipani, Pulipani Jaalathirattu, Pulipani Siththar