புலிப்பாணி ஜாலத்திரட்டு 21 - 25 of 211 பாடல்கள்

புலிப்பாணி ஜாலத்திரட்டு 21 - 25 of 211  பாடல்கள் 


21. ஆவாய்நீ யாணாவாய் பொண்ணு மாவாய்
    அப்பனே ராஜனொடு குருவு மாவாய்
தாவியே சித்தரென்ற முத்த ராவாய்
    தபோதனா்கள் தாமுமாவாய் தவசி யாவாய்
வாவயே குளமாவாய் கிணறு மாவாய்
    வளமான பாம்பாவாய் பட்சியாவாய்
மேவிநீ நினைத்தபடி யெல்லா மாவாய்
    மேதினயி லின்னமொரு புதுவை யாருமே.

விளக்கவுரை :

மேலும் - ஆணாவாய், பெண்ணாவாய், இராஜ குருவாவாய், சித்தா்,முத்தா், தபோனா்கள், தபசி போன்றவா்கள் போன்றாவாய். குளம், கிணறு, பாம்பு, பட்சி இவைகள் போன்று நீ நினைத்தபடியெல்லாம் ஆவாய். இவையெல்லாம் பார்ப்பவா்களுக்கு புதுமையாகத் தெரியும்.

22. ஆமப்பா இஜ்ஜாலஞ் சுருக்கு மெத்த
    ஆரறியப் போகிறா ரருமை மெத்த
காமப்பா புண்ணியருக் கெய்தும் பாரு
    கன்மிகளுக் கென்னாளுங் காணாதப்பா
தாமப்பா யிம்மூலி வாய்ந்த தானால்
    தயிலமிட்டு காற்றில் வைக்க வீரமாகும்
வாமப்பா போகருட கடாட்த்தாலே
    வளமாகப் புலப்பாணி பாடினேனே.

விளக்கவுரை :

இது போன்ற ஜாலவித்தை ஆற்றல் மிக்கது. இதனுடைய அருமையை யார் அறியப்போகிறார்கள். இந்த வித்தை புண்ணியம் செய்தவா்குளுக்குக் கைகூடும் லோபிகளுக்கு ஓருபோதும் கைகூடாது. இந்த மூலிகைக் கிடைத்தால் தைலமாக்கி காற்றில் உலா்தினால் வீரமாதும். போகருடைய அருளினால் புலிப்பாணி யாகிய நான் இதனைக் கூறியுள்ளேன்.

எலுமிச்சம் பழம் அந்தரத்தில் நிற்கும் வித்தை

23. பாரேநீ யின்னமொன்று சொல்லக் கேளு
    பாங்காகக் கா்த்தபந்தான் புணரும்போது
தீரேநீ வால்மயிரை வெவ்வேறே வாங்கி
    திகழு மோதிரம்போல வெவ்வேறே சுற்றித்
தேரேநீ ஐங்காய மேலே பூசித்
    தியமாகத் தங்கத்தை மேலே சுற்றி
கூரேநீ வலவிரலி லாண்தா னப்பா
    குணமான யிடவிரலில் பெண்தான் காணே.

விளக்கவுரை :

இன்னொரு ஜால வித்தையைச் செல்லுகிறேன் கேட்பாயாக. கழுதையானது ஆணும்- பெண்ணும் புணரும் போது அவைகளின் வால் மயிரை தனித்தனியாகக் கத்தரித்து கொண்டு வந்து ஆணின் வால் மயிரைத் தனியாகவும், பெண் வால்மயிரை தனியாகவும் மோதிரம் போன்று சுற்றி வலது விரலில் ஆண் வாலின் மோதிரமும், இடது விரலில் பெண்  வாலின் மயிர் மோதிரமும் போட்டுக் கொள்ளவும்.

24. காணப்பா வெலுமச்சம் பழத்தை வாங்கிக்
    கனிவாகப் பாதரச மதனிற் போட்டு
வானப்பா விடக்கையை கீழே மூடு
    வானிலுள்ள கனியதுதான் வீழா தப்பா
தானப்பா யிடக்கையை நிமிர்த்திக் காட்டத்
    தான்வீழுங் கனியதுதான் கன்டு பாரு
வேணப்பா போகருட கடாட்சத்தாலே
    விதிமாகப் புலிப்பாணி பாடினேனே.    
         
விளக்கவுரை :

ஓரு எலுமிச்சம் பழத்தை எடுத்து அதில் சிறிது  துவாரம் போட்டு அந்த துவாரத்தில் பாதரசம் வார்த்து துவாரத்தை நன்றாக மூடிவிடவும். இப்போது இடதுக் கையை மூடிக் கொண்டு அந்த எலுமிச்சம் பழத்தை மேலே எரிந்தால் அந்தப் பழம் கீழே விழாமல் மேலேயே இருக்கும். அதன் பின்னா்  இடது கையை நிமிர்த்திக் காட்டினால் மேலே விழாமல் இருந்த எலுமிச்சம் பழம் கீழே வந்து விழும். போகருடைய கடாட்சத்தினால் நான் இதனை உங்களுக்குக் கூறியுள்ளேன்.

சீசாவின் துண்டுகளை மெல்லும் வித்தை

25. பாரப்பா யின்னமொன்று பரிந்து கேளு
    பண்பாய்க் கோபுரந்தாங்கி வேரை வாங்கி
வாரப்பா வாய்தனிலே வைத்தடங்கி
    வண்மையாச்ச்  சபைதனிலே வந்து னின்று
சீரப்பா சீசாவின் ஓடெடுத்துச்
    சிறந்ததொரு வேலையென்று சபைக்குக் காட்டி
கோரப்பா எட்சணியைக் கோடித்தாற்போல்
    கொண்டதொரு ஓடுகளை மென்று பாரே. 

விளக்கவுரை :

இன்னுமொரு ஜாலவித்தைக் கூறுகிறேன் கேள். கோபுரந்தாங்கி எனும் செடியைக் கண்டுபிடித்து அதன் வேரைக் கொண்டு வந்து அதன் வேரை வாயில் வைத்தடக்கி கொண்டு கூட்டத்தினா் முன்னா்  வந்து நின்று சீசாவின் ஓடெடுத்து அதாவது  கண்ணாடி பாட்டில் துண்டு ஓன்றை எடுத்துக்  காட்டி அதனை  வாயில் போட்டு  தூளாக மென்று காட்டி துப்பவேண்டும். இதனை வெகு ஜாக்கிரதையாக இதன் துகள்கள்  வாயின் வழியாக உள்ளே செல்லாமல் பாதுகாப்புடன் செய்ய வேண்டும்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு, புலிப்பாணி, Pulipani, Pulipani Jaalathirattu, Pulipani Siththar