புலிப்பாணி ஜாலத்திரட்டு 206 - 211 of 211 பாடல்கள்


அயச்செம்பு

206.பாடியே  அயச்செம்பு  சொல்லக்  கேளு
    பண்பரங்  கற்றாமரையின்  கிழங்கை  யாட்டி
கூடியே  இரும்புகளின்  மேலே  பூசிக்
    கூசாமற்  புடம்போடச்  செம்பதாகும்
ஆடியே  அயச்செம்பு  ஏழதாகம்
    அப்பனே  வெள்ளியிடை  யொன்று  கூட்டி
நாடியே  யுருக்கிடவே  ஏழுமாற்று
    நாயகனே  தப்பாது  செய்துக்  கேளே.

விளக்கவுரை :

   
தமிழில்  உயிர்  எழுத்துக்கள்  பன்னிரெண்டாகும்  அதில்  முதல்  எழுத்து  ' அ '  விலிருந்து  ' ஔ '  வரை  ஒவ்வொரு  உயிர்  எழுத்துகளைப்  போடவேண்டும்.  அதனை  சக்கரத்தைச்  சுற்றிப்  போடவேண்டும்.  சக்கரத்தில்  சுற்றிப்  போட்டால்  உயிர்  எழுத்து  பன்னிரெண்டாகும்.

207. கேளடா  அயச்செம்பொன்று  தங்க  மொன்று
    கெணிதமுடன்  தானுருக்கித்  தகடாய்த்  தட்டி
தூளாகப்  பொடிசெய்து  நறுக்கி  யப்பா
    சுத்திசெய்த  ரசமிரண்டுங்  கூடவிட்டு
நாளான  கெந்தியிடை  நாலுங்  கூட்டி
    நாயகனே  தாரமிடை  அரையுஞ்  சேர்த்து
வாளான  பொற்றலையின்  சாற்றா  லாட்டி
    வளமாக  வுரலிலிடு  குப்பிக்  கேற்றே.

விளக்கவுரை :


அந்த  அயச்செம்பில்  ஒரு  எடையும் , தங்கம்  ஒரு  எடையும்  சேர்த்து  நன்றாக  உருக்கி  தகடாகத்  தட்டிப்  பொடியாக  நறுக்கிக்  கொள்ளவும்.  பின்னர்  அதில்  சுத்தி  செய்த  இரசம்  இரண்டு  எடை  சேர்த்து  அத்துடன்  கந்தகம்   நாலு  எடையும் , தாளகம்  அரை  எடையும்  சேர்த்து  அதில்  கரிசலாங்கண்ணிச்  சாறுவிட்டு  நன்றாக  அரைத்தெடுத்து  குப்பில்  போட்டுக்  கொள்ளவும்.

208. ஏற்றப்பா  சட்டிக்குள்  மணல்  விரல்தா  நாலு
    இதமாக  நீகொட்டி  குப்பிக்கே  தான்
வாற்றமா  மண்சீலை  ஏழுசெய்து
    வாய்மூட  மாக்கல்லை  யுரைத்து  மூடு
சாற்றவே  குப்பிவைத்து  மணலைக்  கொட்டிச்
    சார்வாகக்  குப்பிவாய்க்  கழுத்து  மட்டும்
ஊற்றமாய்  நாற்சாம  மெரித்தே  யாற்றி
    உத்தமனே  பிரிக்கச்  செந்தூர  மாமே.

விளக்கவுரை :

ஒரு  சாட்டியை  எடுத்து  அதில்  நான்கு  விரற்கடை  அளவுக்கு  மணலைக்  கொட்டி  குப்பிக்கு  எழு  சீலை  மண்  செய்து  அதன்  வாயை  மூடி  மாக்கல்லை  அரைத்து  மூடி  அந்தக்  குப்பியை  அந்த  மணல்  சட்டியில்  வைத்து  அதன்  மேல்  குப்பியின்  கழுத்து  வரை  மணலைக்  கொட்டி  நான்கு  சாமம்வரை  எரித்து  எடுத்துப்  பார்த்தால்  செந்தூரமாக  இருக்கும்.

209. ஆமப்பா  நவலோகம்  பத்துக்  கொன்று
    அப்பனே  தான்கொடுக்க  மாற்றோ  பத்து
தாமப்பா  தேவிக்கும்  நிருவாணிக்குந் 
    தயவாகப்  பூசைசெய்து  நிழலில்  நின்று
வாமப்பா  பெரியோரை  வணங்கி  வாழ்த்தி
    வாழ்குவாய் யுபைமதிற் சீமானாக
நாமப்பா  போகருட  கடாட்சத்  தாலே
    நலமாகப்  புலிப்பாணி  பாடினேனே.

விளக்கவுரை :

இந்த  செந்தூரத்தில்  நவலோகம்  பத்துக்கு  ஒன்று  கொடுத்தால்  பத்து  மாற்றாகும்.  தேவிக்கும் , திருவாணிக்கும்  இதனை  வைத்து  பயபக்தியுடன்  பூஜைசெய்து  விட்டு , நிழலில்  நின்று  பெரியோர்களை  வணங்கி  துதித்தால்  இவ்வுலகில்  சிறப்பாக  வசதியுடன்  வாழ்வாய்.  இதனை  போகருடைய  கடாட்சத்தினால்  புலிப்பாணியாகிய  நான்  உரைத்துள்ளேன்.

இரசமணி

210. பாடியே  ரசமதை  சுத்தி  செய்து
    பண்பான  நாகத்தின்  வாயில்  வார்த்து
ஆடியே  முப்பூவுங்  கழஞ்சு  போட்டு
    அடைவாகக்  கட்டிநீ  மேலே  துக்கு
கூடியே  யதின்கீழே  பானை  வைநீ
    கொற்றவனே  பாம்பழுகி  வீழும்  பாரு
நாடியே  ரசங்கட்டி  மணியாய்  போகும்
    நாயகனே  வேதைமுதல்  வசிய  மாமே.

விளக்கவுரை :


சுத்திசெய்த  இரசத்தை  எடுத்து  நாகப்  பாம்பின்  வாயில்  ஊற்றி  அத்துடன்  முப்பூ  ஒரு  கழஞ்சு  சேர்த்துப்  போட்டு  நன்றாக  வாயைத்  தைத்து  தலைகீழாக  மேலே  கட்டி  அதனடியில்  ஒரு  பானையை  வைத்துவிடு.  சில  நாட்களில்  அந்த  பாம்பானது  அழுகி  கீழேயுள்ள  பானையில்  விழுந்து  இரசம்  கட்டி  மணியாய்  இருக்கும்.  இதனால்  எல்லா  லோகத்தையும்  வேதிக்கலாம்.  எக்காரியமும்  வசியமாகும்.

211. ஆமேநீ  கொதியிட்டுச்  செந்தூரத்தால்
    அப்பனே  நவலோகந்  தன்னில்  வேதை
வாமேநீ  யிருநூறும்  இந்திர  ஜாலம்
    வளவான  கண்ணாடி  போலவே  தோற்றுந்
தாமேநீ  நவரத்னங்  கோர்த்தாற்  போலே
    தரணிதனில்  விளங்கும்  புலிப்பாணி  தானும்
நாமேநீ  போகருட  கடாட்சம்  பெற்றே
    நலமான  ஜாலமிரு  நூறும்  முற்றே.

விளக்கவுரை :
   
இந்த  இரட்சத்தைக்  கொதிக்க  வைத்து  செந்தூரமாக்கி  ஒன்பது  விதமான  உலோகங்களில்  சேர்த்தால்  வேதிக்கலாம்.  நான்  கூறியுள்ள  ஜாலத்திரட்டு  இருநூறையும்  கண்ணாடிபோல்  தெளிவாய்  தெரிந்து  கொள்வாய்.  நவ  ரத்தினங்களைக்  கோர்த்தது  போன்று  புலிப்பாணியாகிய  நான்  எனது  குரு  போகருடைய  அருளினால்  இவ்வளவையும்  கூறியுள்ளேன்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு 201 - 205 of 211 பாடல்கள்


201. செய்யப்பா  பிராமணருக்  கன்னம்  பாரு
    செயலாக  நினைத்தபடி  யெல்லாஞ்  செய்யுங்
கையப்பா  பூஜையது  சக்திபூஜை
    கனிவாகச்  செய்திடுவாய்  வெள்ளி  தோறும்
அய்யப்பா  இதற்கெதிரி  ஜெகத்தி  லில்லை
    யப்பனே  வானுலகந்  தன்னி  லில்லை
உய்யவே  போகருட  கடாட்சத்தாலே
    உத்தமனே  புலிப்பாணி  பாடினேனே.

விளக்கவுரை :

அதன்பின்னர்  அந்தணர்களுக்கு  அன்னதானம்  செய்ய  வேண்டும்.  இதனால்  நினைத்தக்  காரியங்களை  கைகூட  வைப்பாள்.  இந்த  சக்தி  பூசையை  வெள்ளிக்கிழமை  தோறும்  தவறாமல்  செய்யவேண்டும்.  இதற்கு  எதிரியாக  இந்த  உலகத்திலும்  எதுவும்  இல்லை.  தேவலோகத்திலும்  இல்லை.  இதனை  போகருடைய  கடாட்சத்தினாலே  புலிப்பாணி  யாகிய  நான்  உரைத்துள்ளேன். 

பார்வதிதேவி - பிரத்தியங்கிரா ரூபமாதல்

202. பாடினேன்  பூச்சக்ர  வாளத்துள்ளே
    பண்பான  மகமேரு  பர்வதங்  ளெட்டும்
நாடினே  நவகண்டஞ்  சப்ததீவு
    நலமான  சப்தசா  கரங்களேழும்
கூடியே  யஷ்டதிக்கு  ளைம்பத்  தாறும்
    குணமான  தேசமெங்குஞ்  சென்றாலுந்தான்
ஆடியே  பிரத்தியங்கிரா  கிருபையாலே
    அப்பனே  ஜெயங்கொண்டு  மீளலாமே.

விளக்கவுரை :

பூச்சக்ர  வாளத்திற்குள்ளே  மேரு  மலைகளோடு  எட்டு  மலைகளும் , ஒன்பது  கண்டங்கள் , சப்ததீவு , சப்பத  சமுத்திரங்கள்  ஏழும் , அஷ்டத்திக்கு  ஐம்பத்தாறும் , மற்றும்  தேசமெங்கும்  சென்றாலும்  பிரத்தியங்கிரா  தேவியின்  கிருபையினால்  எதனையும்  எதிர்த்து  வெற்றியோடுவரலாம்.

203. ஆமப்பா  விஷ்ணு  நரசிங்கமாகி
    அடைவாக  விரணியனைக்  கொன்று  தோஷம்
வாமப்பா  பிரமை  கொண்ட  மயக்கந்தீர
    வளமான  ஈஸ்வரனுஞ்  சரப  ருபந்
தாமப்பா  வடிவுகொண்டு  நரசிங்கத்தை
    தான்கிழித்தே  யுதிரமதைக்  கொண்டதாலே
போமப்பா  மருள்கொண்டு  மயக்க  மிஞ்சிப்
    பொலிவான  ஈஸ்வரனும்  யிருந்தார்  பாரே.

விளக்கவுரை :

விஷ்னு  பகவான்  ஒருசமயம்  நரசிம்ம  அவதாரமெடுத்து  இரணியனைக்  கொன்ற  தோஷம்  நீங்க  வேண்டுமென்பதற்காக  ஈஸ்வரன்  சர்பரூபமாய் (பாம்பாக)  தோன்றி  நரசிங்க  ரூபத்தைக்  கிழித்து  அதன்   இரத்தத்தைக்  குடித்ததினால்  ஈஸ்வரன்  சுயநினைவற்று  மயக்கமடைந்து  விட்டார்.

204. பாரப்பா  ஈஸ்வரனார்  மயக்கம்  நீங்க
    பரிவான  விஷ்ணு  கெண்ட  பேரண்டமாகிச்
சேரப்பா  சர்பத்தைப்  பிளந்து  பானஞ்
    செய்தாரே  ஈஸ்வரற்கு   பிரமை  போச்சு
தீரப்பா  கெண்ட  பேரண்ட  மப்பா
    திறமழிந்து  மருள்கொண்டு  மயக்க  மாகிக்
கூறப்பா  தேவர்களை  யடித்த  தாலே
    குணமான  ஈஸ்வரனும்  வோட  லாச்சே.

விளக்கவுரை :

மயக்கமடைந்த  ஈஸ்வரனிம்  மயக்கம்  நீங்க  விஷ்னு  கெண்ட  பேரண்ட  பட்சியாய்  (மிகப்  பெரிய  பறவையாக)  மாறி  சர்பத்தைப் (பாம்பைப்)  பிளந்து  பானஞ்  செய்தார்.  இதனால்  ஈஸ்வரனுக்கு  மயக்கம்  தெளிந்தது.  இதனால்  கெண்ட  பேரண்டப்  பட்சி  (பெரிய  பறவை)  நினைவிழந்து  மயக்கமாகி  தேவர்களை  அடித்ததினால்  ஈஸ்வரன்  அங்கிருந்து  ஓடவேண்டியதாயிற்று.  

205. ஆச்சப்பா  இதனைப்  பார்வதியாள்  பார்த்து
    அடைவான  பிரத்தியங்கிரா  ரூபமாகி
மாச்சப்பா  கெண்ட  பேரண்ட  பட்சி
    மதம்நீங்கத்  தான்பிடித்துச்  சிரசைக்  கொய்யப்
போச்சப்பா  பிரமையது  தீர்ந்து  போச்சு
    பொலிவான  விஷ்ணுவுந்தான்  உருவமானார்
வீச்சப்பா  போகருட  கடாட்சத்  தாலே
       விதமான  புலிப்பாணி  பாடினேனே.

விளக்கவுரை :

இதனைக்  கண்ட  பார்வதி  தேவியானவள்  பிரத்தியங்கிரா  தேவி  ரூபமாகி  கண்ட  பேரண்ட  பட்சியின்  மதம்  நீங்க  அதனைப்  பிடித்து  சிரசை  கொய்து  எறிந்தாள்.  அதனால்  மயக்கம்  நீங்கி  விஷ்னு  உருவம்  பெற்றார்.  இதனை  போகருடைய  கடாட்சத்தினால்  புலிப்பாணியாகிய  நான் 
நலமாக  உரைத்துள்ளேன்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு 196 - 200 of 211 பாடல்கள் 


பிரத்தியங்கிரா  தேவி  மந்திரமும் - சக்ரமும்

196. தானேதா  னின்னமொன்று  சொல்லக்  கேளு
    தயவாகப்  பிரத்தியங்கிரா  தேவி  மந்திரம்
வானேதான்  சகல  சத்ரு  சம்மாரி
    வளமாக  சகல  சம்பத்து  மீவான்
தேனேதான்  கிருபைவா  ரிதியதானான்
    தெளிவான  கார்மேக  வடிவ  முள்ளாள்
கேனேதான்  சிக்கமுகஞ்  சிங்கப்பல்லி
    கொடிய  முக்கண்ணு  மக்கினி  சுவாலை  யெண்ணே.

விளக்கவுரை :


நலமுடைய  மற்றொரு  பிரத்தியங்கரா  தேவி  மந்திரம்  பற்றிக்  கூறுகிறேன்  கவனமாகக்  கேட்கவும்.  இம்மந்திர  சக்தியினால்  எவ்வளவு  எதிரிகள்  இருந்தாலும்  அவர்களை  அகற்றி  சகல  சம்பத்துகளையும்  கொடுப்பாள்.  பிரத்தியங்கிரா  தேவி.  கிருபைகளை  அளிக்கவல்ல  அவள்  கார்மேக  நிறமுடையாள்.  சிங்க  முகமும் , சிங்கப்பல்லும் , கோபமுடைய  முக்கண்ணும்  உடைய  அவள்  அக்கினி  சுவாலை  போன்றவள்.

197. எண்ணவே  யஷ்டதிக்கும்  நிறைந்த  தேவி
    இலகு  மாயிரத்தோ  டாயிரங்கை  யுள்ளாள்
பண்ணவே  கிண்கிணி  மாலை  கொண்டாள்
    பக்தர்கள்  தன்சத்துரு  நாசஞ்  செய்வாள்
அண்ணவே  யுதிரமது  பானஞ்  செய்வாள்
    அடைவான  சகல  சாஸ்திரமும்  வல்லாள்
நண்ணவே  தியானித்துச்  சரணம்  பண்ணு
    நாயகனே  மூலமினி  சொல்லக்  கேளே.

விளக்கவுரை :

அதுமட்டுமின்றி - எட்டுத்  திக்கிலும்  நிறைந்தவள்.  ஆயிரம்  கைகளையுடையவள்.  கிண்கிணி  மாலையைச் சூடியவள்.  அவளுடைய  பக்தர்களின்  எதரிகளை  அழித்தொழிப்பவள்.  இரத்தத்தைக்  குடிப்பவள்.  எல்லா  சாஸ்திரங்களையும்  அறிந்தவள்.  இவ்வளவு  பெருமைகளையுடைய  பிரத்தியங்கிரா  தேவியை  தியானித்த  சரணமடைபவர்களை  காத்து  ரட்சிப்பவள்.  ஆதலின்  அவளை  தியானிக்க  மூலமந்திரத்தைச்  சொல்லுகிறேன்  கேட்பாயாக.

198. கேளப்பா  ஒம்  சுவாஹா ... சிம்மே  பிரத்தியங்கிரே
    கெணிதமுடன்  உம் ... படு ... ஒம் ... ஆம் ... யென்று
நாளப்பா  இரீங் ... ஸ்ரீயுங் ... கிலிவு  மென்று
    நலமான  சிம்மமுகி  ருத்திர  காளி
சூளப்பா  வட்ட  முக்கோண  மிட்டுச்
    சுகமாக  வதின்மேலே  யென்கோணஞ்  சதுரம்
ஆளப்பா  வட்டமதில்  இச்சமென்றிட்டு
    அறிய  முக்கோணமேல்  முனையிற்  கேளே.

விளக்கவுரை :


"ஒம் ... சுவாஹா ... சிம்மே  பிரத்தியங்கிரே ... உம் ... படு ... ஒம் ... ஆம் ... இரீங் ... ஸ்ரீயும் ... கிலியும் ..."  என்றும் , "சிம்மமுகி , ருத்திர  காளி"  என்று  கூறி  வட்டத்துடன்  கூடிய  முக்கோணம்  போட்டு  அதன்மேல  எண்கோண  சதுரம்  போட்டு  வட்டத்  தில்  இச்சம்  என்று  போட்டு  முக்கோணத்தின்  முனையில்  போட  வேண்டியதைக்  கூறுகிறேன்  கேள்.

199. கேளடா  ரீங்கார  மதிலே  யிட்டு
    கெணிதமுள்ள  இடக்கோணம்  உம்மை  நாட்டி
ஆளடா  வலக்கோணம்  படுவே  யென்று
    அடைவான  என்கோணம்  ரீயைப்  போட்டு
நாளடா  நாற்கோணம்  வலமேல்  மூலை
    நலமாக  ஆம்யென்று  பதித்துப்  போடு
சூளடா  இடக்கோணம்  மேலே  யப்பா
    சுகமாகக்  கிரோம்யென்று  சூட்டிப்  போடே.

விளக்கவுரை :

முக்கோண  முனைகளில்  "ரீங்"  காரம்  போட்டு , கோணத்தின்  அடியில்  இடது  முனையில்  "உம்"  என்று  போட்டு , வலது  முனையில்  "படு"  என்று  போட்டு , எண்  கோணத்தின்  முனைகளில்  "ரீங்"  என்று  போடவும் , நாற்கோணத்தின்  வலது  பக்க  மேல்  மூலையில்  "ஆம்"  என்று  போடவும்.  இடது  முனையில்  "கிரோம்"  என்று  போடவும்  மேலும் -

200. போடேநீ  யிடக்கோணங்  கீழேயப்பா
    புங்கமுடன்  புரோம்யென்று  பதித்து  வைப்பாய்
ஆடேநீ  வலக்கோணங்  கீழே  தானும்
    அப்பனே  ஸ்ரீமென்று  அடைவாய்ப்  போடு
சூடேநீ  யட்சரங்கள்  கிரந்தந்  தன்னிற்
    சூட்டினால்  வலிமையடா  தகடோ  தங்கம்
நாடேநீ  லட்சமுரு  ஜெபித்துப்  பாரு
    நாயகனே  தற்பணமு  மோமஞ்  செய்யே.

விளக்கவுரை :


அதன்  கீழ்ப்புறம்  இடது  முனையில்  "புரோம்"  என்றும்  வலது  முனையில்  "ஸ்ரீம்"  என்றும்  போட  வேண்டும்.  இந்த  அட்சரங்களை  கிரந்த  எழுத்தில்  தங்கத்தகட்டில்  கீறி  எழுதவேண்டும்.  இந்த  எழுதிய  மந்திர  தகட்டை  வைத்து  இலட்சம்  தடவைகள்  ஜெபிக்க  வேண்டும்.  பின்னர்  தர்ப்பணம் , ஹோமம்  செய்யவேண்டும்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு 191 - 195 of 211 பாடல்கள் 


தண்டாயுதபாணியின்  அருள்

191. தானான  சிவகிரியில்  தண்டாயுதபாணி
    தாதாவை  மென்மேலும்  பணிந்து  இந்திரன்
தேனான  கெளசிகர்  போகருட  னிவர்கள்
    தெளிவாக  முன்யுகத்தில்  மூவரப்பா
கோனான  கலியுக  மிருநூற்றைந்தில்
    கொற்றவனே  புலிப்பாணி  பூசித்தேன்  பார்
மானான  அஷ்டசித்தி  கோடா  சித்தி
      மைந்தனே  சித்தருட  நடனந்  தானே.

விளக்கவுரை :


சிவபெருமானுக்குரிய  கயிலை  மலையில்  சிறப்புற்றுத்  திகழும்  தண்டாயுதபாணியை  மனமுருகி  பணிந்து  போற்றிட  இந்திரன் , கௌசிகர் , போகர்  இம்மூவரும்  முன்  யுகத்திலும் , கலியுகத்தில்  இருநூற்று  ஐந்தில்  (ஜாலத்திரட்டு -200)  புலிப்பாணியாகிய  நான்  போற்றி  பூஜித்தேன்.  அஷ்ட  சித்தியும் , கோடா  சித்தியும்  சித்தர்கள்  பெற்று  சிறப்புற்றவர்கள்.

192. தானானா  ராஜரொடு  குருக்கள்  பெண்கள்
    தயவாக  வேதியர்கள்  சிறுவ  ரேழை
பானான  விவர்களுக்கே  யிடுக்க  மான
    பஞ்சமற்  றொழில்முறைகள்  செய்தாற்  றோஷங்கள்
கோனாகச்  செய்தவர்கள்  நரகில்  வீழ்வார்
    குற்றம்வரும்  நற்பதவி  கிட்டா  தப்பா
தேனான  போகருட  கடாட்சத்  தாலே
    தெளிவாகப்  புலிப்பாணி  பாடினேனே.

விளக்கவுரை :

ஆதலின்  அரசர்கள் , குருமார்கள் , பெண்கள் , வேதியர்கள் , சிறுவர்கள் , ஏழைகள்  ஆகிய  இவர்கள்  பாதகச்  செயல்களைச்  செய்வார்களேயானால்  தோஷம்  உண்டாகும்.  இதனால்  நரகில்  வீழ்வார்கள்.  கஷ்டத்தை  அனுபவிப்பார்கள்.  தண்டாயுதபாணியின்  அருள்கிடைக்காது.  இதனை  போகருடைய  அருளினால்  மிகத்  தெளிவாக  புலிப்பாணியாகிய  நான்  உரைத்துள்ளேன்.

சாஸ்திரத்தைப்  பழித்தால்

193. பாடியே  சாஸ்திரத்தைப்  பழித்த  பேர்கள்
    பண்பில்லா  கூன்குருடு  ஊமையாகி
வாடியே  சப்பாணி  நொண்டி  யாகி
    வளமிலாச்  செவிடாகி  ரூபங்  கெட்டுச்
சாடியே  யவர்களெல்லாம்  நாசமாகிச்
    சாவார்கள்  பெண்பிள்ளை  யெல்லாஞ்  சேர்த்து
கூடியே  வியாதியிலே  யமிழ்ந்து  மாய்ந்து
    கொடிதான்  நரகத்தி  லழுந்து  வாரே.

விளக்கவுரை :

சாஸ்திரத்தைப்  பழித்தோர்களுக்கு  உண்டாகும்  பாதகங்களைக்  கூறுகிறேன்  கேட்பாயாக.  பண்பில்லாது  சாஸ்திரத்தைப்  பழிப்பவர்கள்  கூன் , குருடு , ஊமை , சப்பாணி , நொண்டி , செவிடு , குஷ்டம்  ஏற்பட்டு  உடல்  விகாரம்  போன்ற  பாதிப்புகளுடன் , பெண்டு  பிள்ளைகளும்  நோயினால்  பாதிக்கப்பட்டு  இறப்பார்கள் . இதுபோன்ற  கொடியவர்கள்  நரகத்தில்  வீழ்வார்கள்.

சக்திபூஜையின் பலன்

194. வாரான   ஐயும்... நமோ... பகவதே...ஓம்...                                        
    மகாரூபி  மஹாமாயி  மகத்வ சக்தி
தேராக  சர்வதாரணி  சுவாஹா  வென்று
    தெளிவாக  லட்சமுரு  ஜெபித்துத்  தீரு
சார்வாகத்  தர்ப்பணத்  தோடு  மன்னஞ்
    செயமாகப்  பூஜையது  திறமாய்ச்  செய்நீ
கூறான  மஹாமாயை  சித்தி  யாச்சு
    குணமாக  வதின்பெருமை  கூறக்  கேளே. 

விளக்கவுரை :    


ஐயும்... நமோ... பகவதே... ஓம்... மகாரூபி , மஹாமாயி , மகத்துவ  சக்தி , சர்வதாரணி , சுவாஹா என்று மனசுத்தியுடன் இலட்சத் தடவைகள் ஜெபிக்கவும். பின்னர்     தர்ப்பணம் அன்னதானம் பூஜை இவைகளை  முறையோடு  செய்தால்  மஹாமாலை  சித்தியாகும் .  இதன்  பெருமையைக்   கூறுகிறேன் கேட்பாயாக.

195. கேளடா  சக்தியைத்தான்  பூஜை  செய்யக்
      கேலிசெய்து  சோதனைகள்  பார்க்க  வந்தால்
நாளடா  மந்திரத்தைத்  தியானஞ்  செய்து
    நலமான  வஸ்துசுத்தி  பால்  பூவென்று
வாளடா  தியானித்து  நினைத்த  போது
    வளமான  பால்பூவா  விருக்கும்  பாரு
ஆளடா  போகருட  கடாட்சத்  தாலே
    அப்பனே  புலிப்பாணி  பாடினேனே.

விளக்கவுரை :


சக்தியை  மனதாரப்  பூஜை  செய்தால்  உன்னைக்  கேலி  செய்து  சோதனைகள்  செய்து  பார்த்தால்  மந்திரத்தை  தியானம்  செய்து , வஸ்து , சுத்தி , பால் , பூவென்று  தியானித்து  சக்தியை  நினைத்தால்  எங்கும்  பால் , பூவாக  இருக்கும். இதனை  போகருடைய  அருளினால்  புலிப்பாணியாகிய  நான்  உரைத்துள்ளேன்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு 186 - 190 of 211 பாடல்கள் 


186. பாரடா  சுவாமியை  சென்னிற  மதாகப்
    பண்பாகத்  தியானித்து  முக்கோணங்  கீறிச்
சேரடா  கிலியும் ... ரோ ... மென்று  சொல்லிச்
    செயலாக  வாயிரத்தெட்டுஞ்  செபித்து
வீரடா  விபூதிகளை  யளித்துக்  கொண்டால்
    விதமாகச்  சகலமும்  வசிய  மாகும்
தீரடா  பின்னொருத்தர்  தனக்கே  யீந்தாற்
    திறமாக  வசியமாய்  வணங்குவாரே.

விளக்கவுரை :

அதன்பின்னர்  சுவாமியை  சென்னிறமாக  நினைத்து  தியானம்  செய்து  விபூதியில்  முக்கோணம்  கீறி , "கிலியும் ... ரோ ..."  என்று  ஆயிரத்தெட்டு  தடவைகள்  ஜெபித்து  விபூதியை  எடுத்து  நெற்றியில்  பூசிக்  கொண்டால்  எல்லாம்  உன்  வசமாகும்.  அதன்  பின்னர்  மற்றவர்களுக்கு  இந்த  விபூதியை  அளித்தால்  அவர்கள்  உனக்கு  வசியமாகி  வணங்கி  நிற்பார்.

187. வணங்கியே  சுவாமியை  பளிங்கு  நிறமாக
    வளமாகத்  தியானித்து  பிறைபோற்  கீறி
அணங்கியே  அம்மாரோ  வெனச்  செபித்து
    அடைவாக  வாயிரத்  தெட்டுருத்தா  னோதி
வணங்கியே  விபூதியைப்  பூசிக்  கொண்டால்
    விழுவாமல்  சகலமும்  யோகம்  போகம்
இணங்கியே  சுவாமியை  மேக  நிறமாக
    யின்பமுறத்  தியானித்து  நாற்கோணங்  கீறே.

விளக்கவுரை :

சுவாமியை  பளிங்கு  நிறமாக  மனதில்  தியானித்து  விபூதியில்  பிறைபோல்  கீறி "அம்மாரோ"  என்று  ஆயிரத்தெட்டு  தடவைகள்  ஒதிவிட்டு  விபூதியை  எடுத்துப்  பூசிக்  கொண்டால்  சகல  யோகம் - போகம்  உண்டாகும்.  சுவாமியை  மேகம்  நிறமாக  மனதில்  நினைத்து  தியானம்  செய்து  விபூதியில்  நாற்கோணம்  கீறவும்.

188. கீறியே  ஒம் ... றம் ... ரோ ... மென்று
    கிருபையாய்த்  தென்னோலை  தன்னிலப்பா
சீறியே  யிருவர்பேர்  தன்னைச்  சூட்டிச்
    சிறப்பாக  வாயிரத்தெட்  டுருஜெபித்து
வீறியே  எதிரியின்முன்  னிறப்பில்  வைக்க
    விதமாக  யிருவருமே  பிரிந்து  போவார்
தெறியே சுவாமியைப் புகை வா்ணமாகத்
    தெளிவாகத்  தியானித்  தைங்கோணங்  கீறே.

விளக்கவுரை :

விபூதியில்  நாற்கோணம்  கீறியதும் , "ஒம் ... றம் ... ரோ ..."  என்று  தென்னை  ஓலையில்  நண்பராக  ஒருவர்  இருந்து  எதிரியாகிவிட்டால்  அவர்கள்  இருவரின்  பெயரையும்  எழுதி  அதன்மீது  வைத்து  ஆயிரத்தெட்டு  முறைகள்  ஜெபித்துவிட்டு  அந்த  ஓலையை  எதிரியின்  முன்னிருப்பில்  வைக்க  இருவரும்  பிரிந்து  விடுவார்கள்.  சுவாமியைப்  புகை  நிறமாக  நினைத்து  தியானம்  செய்து  விபூதியில்  ஐங்கோணம்  கீறவும்

189. கீறியே  அம்மாரோ  மென்று  நாட்டி
    கிருபையுட  னாயிரத்தெட்டுரு  ஜெபித்து
வாறியே  விபூதியைநீ  போட்டபோது
    வரிசையுடன்  சகலமுமே  யோடிப்  போகும்
தேறியே  சுவாமியைப்  பிரளயகால  ருத்ரனாய்த்
    தியானித்து  முக்கோணந்  திறமாய்க்  கீறி
ஏறியே  ஓம் ... ரோ ...  மென்று  நாட்டி
    எளிதிற்  சத்ருவின்  சத்தெழுத்தை  நாட்டே. 

விளக்கவுரை :

ஐங்கோணம்  கீறியதும்  "அம்மாரோ"  என்று  ஆயிரத்தெட்டு  தடவைகள்  ஜெபித்துவிட்டு  விபூதியை  எடுத்துப்  போட்டால்  கஷ்டத்தை  ஏற்படுத்தும்  எந்த  சக்தியும்  ஒடிப்போய்விழும்.  பின்னர்  சுவாமியை  பிரளய  கால  ருத்திரனாக  நினைத்து  தியானம்  செய்து  விபூதியில்  முக்கோணம்  கீறி , "ஒம் ... ரோ ..."  என்று  கூறி  எதிரியின்  பெயரை  எழுதி  அதில்  போடவும்.

190. நாட்டியே  யாயிரத்தெட்டுருத்  தானோதி
    நாயகனே  யழல்காட்ட  கீறிப்போகும்
வாட்டியே  சகலமு  மாரணமாய்ப்  போகும்
    வளமாக  சுவாமியைக்  கறுப்பதாகக்
கூட்டியே  தியானித்து  முக்கோணங்  கீறி
    குணமாகப்  பம் ... மென்று  அதிலே  நாட்டி
சூட்டியே  யாயிரத்தெட்டுத்தா  னோதி
    கறுக்கப்பா  நீறிடவே  பேதந்தானே.

விளக்கவுரை :

அதன்பின்னர்  ஆயிரத்தெட்டு  தடவைகள்  ஒதி  விட்டு  எழுதியதை  எடுத்து  தீயில்  காட்ட  கருகிப்  போகும்.  இதனால்  எந்த  எதிரியாக  இருப்பினும்  மரணமடைவான்.  சுவாமியை  கறுப்பு  நிறமாக  நினைத்து  தியானம்  செய்து  விபூதியில்  முக்கோணம்  கீறி  " பம் "  என்று  அதிலே  எழுதி  ஆயிரத்தெட்டுத்  தடவைகள்  ஓதிவிட்டு  விபூதியை  எடுத்து  நெற்றியில்  பூசிக்  கொண்டால்  எல்லா  காரியமும்  சித்தியாகும்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு 181 - 185 of 211 பாடல்கள் 



உடுக்கு  கட்டல்

181. பாரடா  சிவனாணை  சிற்றுக்  கடைச்சான்
    பண்பாகச்  சிவதம்மை  பகவதியாணை
கூரடா  ஐயுங்  கிலியும்  சவ்வுங்  கட்டு
    குறிப்பாக  மாதவ  ராணைக்  கட்டு
சேரடா  ஐயுங்  கிலியுங்  சுவாஹா  வென்று
    சிறப்பாக  ஜெபித்தவுட  னுடுக்கு  கட்டும்
விதமான  போகருட  கடாட்சந்தானே.

விளக்கவுரை :

சிவபெருமான்  கையிலுள்ள  உடுக்கை  போன்று  உடுக்கையைக்  கட்ட  வேண்டுமானால் , சிவனையும் - பார்வதியையும்  நினைத்து  " ஐயுங் ... கிலியுங் ... சவ்வும் , கட்டு"  என்றும் , "ஐயுங் ... கிலியுங் ... சுவாஹா ..."  என்று  கூறியதும் , " ஆதியந்தி  மூலங்  கட்டு"  என்று  ஜெபித்தல்  உடுக்கு  கட்டும்.  இது  போகருடைய  கடாட்சமாகும்.

விபூதியினால் வியாதிகள்  குணமாக

182. தாமப்பா  ஒர்துளி  யந்த  துளி
    தயவான  முன்திருக்  கண்ணிற்  பின்தூளி
பானப்பா  காய்ச்சல்  தலை  வலியும்
    பாரிற்பறந்தோடச்  சுவாமி  குருவாணை  போவென்
றானப்பா  விபூதியைநீ  தியான  மோதி
    யளித்தவுடன்  பலபிணியு  மகன்று  போகும்
வானப்பா  போகருட  கடாட்சத்  தாலே
    வளமாக  புவிப்பாணி  பாடினேனே.

விளக்கவுரை :

எந்த  வியாதியும்  வந்தவுடனேயே  அதற்கான  மருந்தை  உட்கொண்டு  உடலைப்  பாதுகாத்துக்  கொள்ள  வேண்டும்.  காய்ச்சல் , தலைவலி  முதலிய  பல  வியாதிகள்  நலமாக  "சுவாமி  குருவாணை - பீடித்த  நோய்  அகலவும் "  என்று  விபூதிப்  பூசி  தியானம்  செய்தால்  வந்த  பிணி  உடனே  அகன்றுவிடும்.  இதனை  போகருடைய  அருளினால்  புலிப்பாணி  பாடியுள்ளேன்.

நீலகண்ட  மந்திரம்

183. பாடியே  நீலகண்டா  சொல்லக்  கேளு
    பண்பாக  ஒம்நீல  கண்ட  மித்ரா
ஆடியே  மங் ... சிங் ... சர்வ ... மனோகண்ட
    அடைவாக  உம் ... படு ... சுவாஹா ... வென்று
கூடியே  லட்சமுரு  ஜெபித்துத்  தீரு
    குற்றமற்ற  தர்பணமும்  தானம்  பத்து
நாடியே  போகமா  யிருந்தாலப்பா
    நலமாக  அன்னமிடு  நூறு  பேர்க்கே.

விளக்கவுரை :

நீலகண்ட  மந்திரத்தினால்  எண்ணற்ற  பலன்கள்  கிடைக்கும்.  ஆதலின்  அதுபற்றிக்  கூறுகிறேன்  கேட்பாயாக.  " ஒம் ... நீலகண்ட  மித்ரா ... மங் ... சிங் ... சர்வ  மனோகண்டா ... உம் ... படு ... சுவாஹா ..."  என்று  இலட்சம்  தடவைகள்  ஜெபிக்கவும்.  தானமும் , தர்மமும்  செய்.  நூறு  பேர்களுக்கு  அன்னமிடவும்.

184. பேரான  பிராமணருக்  கன்னம்  போடு
    பேதமில்லை  பூஜையது  பத்தே  யாகும்
நேரான  பூசையது  வஸ்து  சுத்தி
    நிறுத்துவிடு  நீலகண்டஞ்  சித்தியாச்சு
சீரான  தம்பனம்நீ  செய்யவேண்டி
    செயலாக  சுவாமியே  பொன்னிறமதாச்சு
வீரான  நீலகண்டந்  தியானமப்பா
    விதமான  நெஞ்சிலெண்  கோணமெட்டே.

விளக்கவுரை :

நல்ல  பிராமணர்  நூறுபேர்களுக்கு  அன்னமிடலாம்.  இதனால்  பேதம்  எதுவுமில்லை.  இதனால்  பத்து  பூசைக்கு  சமமாகும்.  பூசையினால்  மனம்  சுத்தியாகும்.  இதனால்  நீலகண்ட  மந்திரம்  சித்தியாகும்.  நீ  ஸ்தம்பனம்  செய்தால்  சுவாமியும்  பொன்னிறமாகக்  காட்சியளிப்பாய்.  நீலகண்டத்  தியானம்  செய்ய  முதலில்  நெஞ்சில்  அதாவது  உனது  மனதில்  எண்  கோணம்  எட்டு  போட்டுக்  கொள்ளவும்.

185. ஒட்டியே  அம்மாரோ  மென்று  நாட்டில்
    ஒளிவான  வுருவமப்பா  முப்பத்தாறு 
தீட்டியே  செபித்தவுடன்  தங்கமாகும்
    தியமாகச்  சகலமும்  தம்பிக்கும்  பாரு
காட்டியே  சுவாமிதனை  வெள்ளையாக 
    கருத்தில்வைத்து  விபூதியிலே  வட்டங்  கீறி
ஆட்டியே  யம்மாரோமென்  ராயிரத்  தெட்டோதி
    அன்பாக  கொடுத்தவுடன்  அழைக்கும்  பாரே.

விளக்கவுரை :

எட்டு  கோணம்  போட்டதும்  உடனே  "அம்மாரோ"  என்று  கூறி  முப்பத்தாறு  உரு  செபித்தால்  சுவாமி  முதற்கொண்டு  எல்லாம்  தங்கம்  போன்று  பிரகாசிக்கும்.  எந்த  சிந்தனையுமில்லாமல்  சுவாமியை  மனதில்  நினைத்து  விபூதியில்  வட்டமாகக்  கீறிவிட்டு, "அம்மாரோ"  என்று  ஆயிரத்தெட்டு  தடவைகள்  ஒதவும்.  பின்னர்  அன்பாக  இந்த  விபூதியைக்  கொடுத்தால்  எல்லோரும்  மனமுவந்து  அழைப்பார்கள்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு 176 - 180 of 211 பாடல்கள்


176. போட்டவுட  னவன்விழுவா  னுதைத்துக்  கொள்வான்
    பொங்கமுட  னவன்வாயி  லுதிரங்  கக்கும்
ஆட்டவுட  னகன்றகழல்  குறடா  வப்பா
    அடைவான  தேங்காயு  முலக்கை  தானும்
கூட்டமுட  னிதுகளெல்லா  மெழுந்  தடிக்கும்
    கொற்றவனே  வாளெழும்பி  வெட்டும்  பாரு
நாட்டமுடன்  காளியைத்தான்  தியானஞ்  செய்தால்
    நாயகனே  யிவைகளெல்லா  மடிக்குந்  தானே.

விளக்கவுரை :

ஒதிப்  போட்டதும்  அவன்  விழுவான்.  கைகால்களை  உதைத்துக்  கொள்வான்.  அவன்  வாயிலிருந்து  ரத்தம்  வழியும்.  அச்சமயம்  குறடா , தேங்காய் , உலக்கை  இவைகளெல்லாம்  எழுந்து  அவனை  அடிக்கும்.  அதுமட்டுமல்லாது  வாள்  மேலே  எழும்பி  அவனை  வெட்டும்.  காளியை  தியானம்  செய்தால்  கீழே  வைத்துள்ள  இவைகளெல்லாம்  அவனை  அடிக்கும்.

177. தானடா  ஒம் ... வங் ... றம் ... மென்று
    தயவாக  அம் ... அம் ... அம் ... மென்றோது
வானடா  நங் ... மங் ... சிங் ... கென்று
    வளமான  அங் ... அங் ... அங் ... சுவாஹாவென்று
கோனடா  லட்சமுரு  செபித்துப்  போடு
    கொற்றவனே  நினைத்த  தெல்லாந்  தம்பமாகும்
நானடா  போகருட  கடாட்சத்தாலே
    நலமாகப்  புலிப்பாணி  பாடினேனே.

விளக்கவுரை :

" ஒம் ... வங் ... றம் ... "  என்றும் , " அம் ... அம் ... அம் ..."  என்றும் , "நங் ... மங் ... சிங் ... "  என்றும் , "அங் ... அங் ... அங் ... சுவாஹா"  என்று  இலட்சம்  தடவைகள்  ஜெபிக்கவும்.  இதனால்  நீ  நினைத்ததெல்லாம்  நடக்கும்.  இவையாவும்  போகருடைய  கடாட்சமாகும்.  அதனை  புலிப்பாணியாகிய  நான்  உரைத்துள்ளேன்.

சாதம்  வேகாதிருக்க

178. பாடவே  யின்னமொரு  வித்தை  கேளு 
    பண்பாக  வெண்காந்தி  வேரை  வாங்கி
நாடவே  கஞ்சாவித்  தைலங்கோலஞ்  சேர்த்து
    நாயகனே  யுலையரிசி  தன்னிற்  போட்டாற்
கூடவே  சோரதுவும்  வேகா  தப்பா
    கொற்றவனே  மாற்றுமிதுக்  கில்லை  பாரு
ஆடவே  போகருட  கடாட்சத்  தாலே
    அருமையாய்ப்  புலிப்பாணி  பாடினேனே.

விளக்கவுரை :

இன்னொரு  ஜால  வித்தையைக்  கூறுகிறேன்  கேட்பாயாக.  வெண்காந்தி  வேரைக்  கொண்டு  வந்து  கஞ்சாவிதையும் , ஐங்கோலத்  தைலமும்  சேர்த்து  உலையரசியில்  போட்டால்  சோறு  வேகாது.  இதற்கு  மாற்று  எதுவும்  இல்லை.  இதுவும்  போகருடைய  அருளினால்  புலிப்பாணி  கூறியுள்ளேன்.

நெருப்பில்லாமல்  சோறு ஆக்கும்  ஜாலம்

179. பாடினேன்  அக்னியு  மில்லாமற்  றான்
    பண்பான  அன்னமது  சமைக்கக்  கேளு
ஆடினேன்  கானகத்தில்  வேண  துண்டு
    அடைவாகச்  சதுரக்கள்ளி  பாற்கரந்து
சாடிநீ  பாண்டத்தி  லரிசி  போட்டுச்
    சரியாகப்  பால்தன்னைச்  சுருக்காய்  வாரு
நாடிப்பார்  சோரதுவும்  வெந்திருக்கும்
    நலமாக  ஜாலம்போ  லாடிப்  பாரே.

விளக்கவுரை :

இப்போது  நெருப்பில்லாமல்  சாதம்  சமைக்கும்  ஜாலவித்தைப்  பற்றிக்  கூறுகிறேன்  கேட்பாயாக.  காட்டில்  வளர்ந்திருக்கும்  சதுரக்  கள்ளி  செடியிலிருந்து  சதுரக்கள்ளிப்  பாலைக்  கொண்டு  வந்து  வைத்துக்  கொண்டு  பானையிலிட்டு  அந்தப்  பானையில்  அரிசியைக்  கழுவி  நீரை  இறுத்து  அதில்  போட்டு  எவரும்  பார்க்காதவாறு  சதுரக்கள்ளிப்  பாலை  அதில்  வார்த்து  விடு.  பானையினை  மூடி  சிலநிமிடம்  கழித்து  திறந்தால்  அரிசி  வெந்து  சாதமாகி  விடும்.  இந்த  ஜாலத்தினால்  சாதமாகியதை  எவரும்  உண்ணக்கூடாது.

பேயோட்டல்

180. பாரேநீ  யங் ... சிங் ... வய ... நம ... வென்று
    பண்பாகச்  செபித்தவுடன்  பிசாசு  பூதங்
கூரேநீ  யோடுமடா  கண்டு  பாரு
    குணமாக  வங் ... மங் ... சிங் ... சிவயநமசி  யென்று
நாடியே  ஜெபித்தவுட  னழும்  பாரு
    நாயகனே  சிவயநமசி  யென்று  சொல்ல
சூடியே  பிசாசுமுதல்  பூதமெல்லாம்
    சுருக்காக  ஒடுமடா  கண்டு  பாரே. 

விளக்கவுரை :

பேய்கள்  ஒடுவதற்கான  மந்திரத்தைக்  கூறுகிறேன்  கேள்.  " யங் ... சிங் ... வய ... நம ... "  என்று  மனசுத்தியுடன்  ஜெபித்தால்  பிசாசு , பூதம்  எல்லாம்  ஓடும்.  "வங் ... மங் ... சிங் ...சிவயநமசி ..."  என்று  ஜெபித்தால்  பிசாசு  அழும்.  அதே  "சிவயநமசி"  என்று  சொல்லச்  சொல்ல  பிசாசு  முதல்  பூதம்  வரை  எல்லாம்  இருக்கும்  இடம்  தெரியாமல்  ஒடிவிடும்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு 171 - 175 of 211 பாடல்கள்


171. நீதியாய்  குருபாதந்  தலை  வணங்கி
    நினைவாகப்  பெரியோர்கள்  பதமும்  போற்றி
மோதியே  சித்தர்  முத்தர்  முனிகருப்பன்
    முதலான  ராட்சதையும்  ஏவல்  வைப்பும்
தீதான  சத்துருக்கள்  மிருக  ஜாதி
    தீயகொடு   விஷமுதலா  யெதிர்  நில்லாது
மீதுநீ  நினைத்தபடி  யெல்லாஞ்  சித்தி
    மிதமான  வாளுஞ்  செக்குலக்கை  நாட்டே.

விளக்கவுரை :

குருவின்  பாதம்  வணங்கி , மனதில்  பெரியோர்களின்  பாதம்  போற்றி , சித்தர் , முத்தர் , முனி , கருப்பன்  இவர்களின்  அருளினால்  , ராட்சதன் , ஏவல் ,வைப்பு , எதிரிகள் , மிருகங்கள் , விஷமுள்ள  ஐந்துகள்  எதுவும்  உனது  முன்னால்  நில்லாது.  நீ  நினைத்தக்  காரியங்கள்  கைகூடும்.  ஆதலின்  உடனே  ஒரு  வாள் , செக்குலக்கையை  நிற்க  வைக்கவும்.

172. நாட்டியே  யுலக்கை  முன்பு  தேங்காயொன்று
    நலமான  தேங்காய்முன்  குறடா  வொன்று
           கூட்டியே  யதின்பின்பு  பாதரட்சை
    குறியாக  வதின்முன்பு  தேய்ந்த  மாறுந்
           தேட்டியே  யதின்முன்பு  வாழை  நாட்டித்
    தெளிவாக  பந்தலிற்  பூமாலை  சூட்டி
           ஆட்டியே  மாவிலைத்  தோரண  முங்கூட்டி
    அப்பனே  பூஜைபலி  பெலக்கச்  செய்யே.

விளக்கவுரை :

நிற்கவைத்த  உலக்கையின்  முன்பு  ஒரு  தேங்காயும் , தேங்காயின்  முன்னே  ஒரு  குறடா  ஒன்றும் , பின்னர்  பாதரட்சையும் , (செருப்பு)  அதன்முன்பு  தேய்ந்த  விளக்குமாறும் , அதன்முன்பு  வாழையும்  நாட்டி , அதன்மேல்  பந்தலிட்டு  பூமாலை , மாவிலைத்  தோரணமும்  கட்டி , பூசைசெய்து  பலியிடவும்.

173. பெலக்கவே  யெட்டிமுளைக்  கருவும்  பூசி
    பேதமில்லை  அஷ்டதிக்கி  லடித்துப்  போடு
அயக்கவே  கோடேழு  கீறிப்  போடு
    அப்பனே  காளியுட  தியான  மோது
சிலக்கவே  திரையைநீ  யெடுக்கச்  சொல்லு
    செயலாக  யவன்வந்து  சார்வானாகில்
கலக்கவே  கக்கு  கக்கு  காளிதுர்க்கி
    கருத்தான  அரி ... உம் ... ஆம் ... ஒம் ... மென்றோதே.

விளக்கவுரை :

நன்றாகப்  பூசைபலி  செய்து  முடித்ததும்  எட்டி  முளைகள்  சீவி  அதில்  கருவும்  பூசி  எட்டு  திக்குகளிலும்  அடித்து  ஏழு  கோடுகள்  தரையில்  கீறிவிட்டு  காளிகா  தேவியை  தியானம்  செய்யவும்.  பின்னர்  திரையை  எடுக்கச்  சொல்லவும்.  அவன்  வந்து  எடுக்கும்போது  " கக்கு ... கக்கு ... காளி ... துர்கா . ..அரி ...உம் ... ஆம் ... ஒம் ... "  என்று  ஒதவும்.

174. ஒதியே  கண்கட்டு  மையை  வாங்கி
    உத்தமனே  கைதன்னிற்  றடவிக்  கொண்டு
வாதியே  வேப்பிலையை  யுருவிப்  போடு
    வளமான  தேள்கொட்டி  மயங்குவான்  பார்
ஆதியே  றங் ... றங் ... சூலி  யென்றால்
    அப்பனே  விழுந்தோடி  யெரிய  வீழ்வான்
சோதியே  வறி ... வறி ... மறி ... சண்டாளி
    சுகமான  அம் ... அம் ... அம் ... என்றெண்ணே.

விளக்கவுரை :

ஒதியதும்  கண்கட்டு  மையை  எடுத்து  கைகளில்  தடவிக்  கொண்டு  வேப்பிலையை  உருவிப்  போடு.  அப்போது  அவன்  தேள்  கொட்டி  மயக்கமடைவது  போலாவான்.  பின்னர் , "றங் ... றங் ... சூலியென்றால்  அவன்  விழுந்து  உருண்டு  அப்பால்  போய்  விழுவான்.  பின்னர் , " அம் ... அம் ... அம் ... "  என்று  ஒதவும்.

175. எண்ணியே  விபூதியைத்தான்  தியான  மோதி
    எதிர்போட  யவன்விழுவான்  கண்டு  பாரு
நண்ணவே  ஒடு ... படு ... சுவாஹா ... வென்று
    நலமான  விபூதியள்ளி  யோதிப்  போடு
கண்ணவே  யவன்விழுவான்  கோபிப்பான்  பார்
    கனிவான  அம் ... அம் ... நிம் ... ஒம் ... என்றேதான்
உத்தமனே  வேப்பிலை  மண்ணுளுந்துடனே  யரிசி
    உத்தமனே  விபூதிமுத  லோதிப்  போடே.

விளக்கவுரை :

ஒதியதும்  விபூதியை  எடுத்து  தியானம்  செய்து  எதிரில்  போட்டால்  மீண்டும்  கீழே  விழுவான்.  பின்னர் , " ஒடு ... படு ... சுவாஹா ..."  என்று  சொல்லி  விபூதியை  எடுத்து  ஒதி  போட்டால்  மீண்டும்  விழுவான்.  கோபப்படுவான்.  அதன்பின்னர்  அனபுடன் , "அம் ... அம் ... நிம் ... ஒம் ... "  என்று  கூறியபடி  வேப்பிலை , மண் , உளுந்து , அரிசி இவைகளுடன்  விபூதியைச்  சேர்த்து  ஒதிப்  போடவும்.
   

புலிப்பாணி ஜாலத்திரட்டு 166 - 170 of 211 பாடல்கள்

166. கினவிலே  பெண்போற்போய்  கடிந்து  சொல்லும்
    கனிவாக  யின்னாளை  யழைத்து  நீதான்
மனவியே  யின்னதெல்லாங்  கொடுத்து  நீயும்
    மீறாதே  யவன்சொல்லை  யெது  சொன்னாலும்
பனுவலாற்  றேவியுட  வருள்தான்  பெற்றேன்
    பண்புள்ளோன்  நல்லகுண  மென்று  கூறும்
           அனுவியே  சொற்பனந்தான்  வராசி  யாலே
அப்பனே  ஜெகமுழுதும்  வணங்கும்  பாரே.

விளக்கவுரை :
   
கனவிலே  பெண்  போலவே  வந்து  போகும்.  கனிவாக  அவளை  அழைத்து  கேட்பதையெல்லாம்  கொடுத்து  அவன்  எது  சொன்னாலும்  அப்படியே  அவள்  கனவில்  போய்ச்  சொல்லும்.  அவன்  தேவியின்  அருள்பெற்றவன்  நல்ல  குணமுள்ளவன்  என்றும்  சொல்லும்.  வராகியின்  அருளினால்  உலகம்  முழுதும்  உன்னை  வணங்கும்.

பிரேமை  பிடித்து  அலைதல்

167. பாரடா  பேய்  நரியாய்  திரிந்தபோது
    பாவமில்லை  யதின்சொறையொன்றில்  வாங்கி
சேரடா  வரிசியது  உலரப்  போடு
    சேர்த்தப்பா  சுடலையுட  கருவுங்  கூட்டிக்
கூறடா  நிழல்தனி  லுலர  வைத்துக்
    கொடிதான்  வரிசிகொஞ்ச  மறுசுவையி  லன்னம்
வீரடா  சத்துருவுக்  கிட்டபோது
    விதமான  பிரமைகொண்  டலைவான்  பாரே. 

விளக்கவுரை :

மேலும் , பேய் , நரி  போல்  திரிவதினால்  பாவம்  எதுவும்  இல்லை.  சொறை  ஒன்றை  எடுத்து  அதில்  அரசியைக்  கலந்து  உவர்த்தி  எடுத்து  அதனுடன்  சுடலையுடைய  கருவுங்  கூட்டி  மீண்டும்  உலரவைத்து  எடுத்து  அந்த  அரசியல்  கொஞ்சம்  எடுத்து  சமைத்து  அறுசுவையுடன்  அந்த  சாதத்தைச்  சேர்த்து  எதிரிக்கு  உண்ணக்  கொடுத்தால்  பிரமை  பிடித்து  அலைவான்.

168. பாரப்பா  மிளகு  தக்காளிச்  சாறு
    பண்பாக  மூன்றுநா  ளாறுவேளை
கூறப்பா  கொடுத்திடவே  தீரும்  பாரு
    குணமாக  நிவர்த்தியாப்  போகுங்  கண்டாய்
சீரப்பா  பத்தியந்தா  னுப்பாகாது
    சிறப்பாக  வேழாநா  ளெல்லாங்  கூட்டு
வீரப்பா  போகருட  கடாட்சத்தாலே
    விதமாகப்  புலிப்பாணி  பாடினேனே. 
 
விளக்கவுரை :

எதிரியானவன்  திருந்தி  உணர்ந்து  வணங்கி  வந்தால் - மிளகு , தக்காளி  சாறு  ஆகியவற்றில்  அதனை  கலந்து  மூன்று  நாள் , ஆறு  வேளை  கொடுத்தால்  அவன்  பிரமை  அகன்று  குணமடைவான்.  இதற்கு  உப்பு  நீக்கி  பத்தியத்துடன்  இருக்க  வேண்டும்.  ஏழாவது  நாள்  எல்லாவற்றையும்  சாப்பிடலாம்.  இதனை  போகருடைய  அருளினால்  புலிப்பாணியகிய  நான்  உரைத்துள்ளேன்.

மோடி  வித்தை

169. பாடினே  னின்னமொரு  மோடி  வித்தை
    பண்பான  நடன  சிதம்பரத்தைக்  கீறி
ஆடினே  னட்சரமும்  பீஜ  மெல்லாம்
    அடைவாகத்  தானடைத்  தருளை  யோதிக்
கூடியே  ஒம் ... ஸ்ரீரீங் ... கிலியும் ...
    குணமாக  அவ்வும் ... உவ்வும் ... மவ்வும் ... சிவ்வும் ...
நாடியே  நமசிவாய  சுவாஹா  வென்று
    நலமாக  லட்சமுரு  ஜெபந்தா  னோதே.

விளக்கவுரை :

மற்றொரு  மோடி  வித்தையைப்  பற்றிக்  கூறுகிறேன்  கேட்பாயாக.  நடன  சிதம்பர  சக்கரத்தைக்  கீறி  அட்சர  பீஜங்களை  அதில்  முறையாக  எழுதி  " ஒம் ... ஸ்ரீரீம் ... கிலியும் ... அவ்வும் ... உவ்வும் ...மவ்வும் ... சிவ்வும் ... நமசிவாயய ... சுவாஹா ..."  என்று  இலட்சம்  தடவைகள்  ஜெபிக்கவும்.

170. ஒதியே  சக்கரத்தை  வைத்துக்  கேளு 
    உத்தமனே  சோடசமாம்  பூஜைசெய்து
சோதியே  சக்கரத்தை  வைத்துக்  கொண்டு
    சுகமாக  மோடிவைக்கச்  சொல்லக்  கேளு
ஆதியே  கோயில்முன்பு  குளத்தின்  முன்பு
    அப்பனே  யம்பலங்கள்  தெருவி  லப்பா
தீதிலா  போகருட  கடாட்சத்  தாலே
    திடமாக  மோடிவைக்கும்  வித்தை  கேளே.

விளக்கவுரை :

அந்தச்  சக்கரத்தை  எடுத்து  அங்கு  சோடச  பூசையை  செய்து  எடுத்து  வைத்துக்  கொள்ளவும்.  இப்போது  மோடி  வைக்கச்  சொல்லுகிறேன்  கேட்பாயாக.  கோயில்  முன்பு  அல்லது  குளத்தின்  முன்பு , மைதானம் , பணக்காரர்கள்  இருக்கும்  தெரு  போன்ற  இடங்களில்  மோடி  வைக்கும்  வித்தையைப்  பற்றிக்  கூறுகிறேன்  கேட்பாயாக. 

புலிப்பாணி ஜாலத்திரட்டு 161 - 165 of 211 பாடல்கள் 
 



சீலை  மெழுகு  பாவை

161. தானென்ற  சிவன்காளி  கணபதி  கந்தன்
    தயவான  வயிரவனும்  பெருமாள்  ஐயன்
கோனென்ற  வனுமனொடு  கறுப்ப  னப்பா
    கொற்றவனே  யவர்கள்  மெழுக்  கெடுத்துக்  கொண்டு
தேனென்ற  வகைவகைக்கு  விராக  னொன்று
    தெளிவாக  மெழுகுபதி  னெண்  விராகன்
வாவென்ற  ஐங்கோல  னைங்காயஞ்  சேர்த்து
    வளமான  சுடலையுட  கருவுங்  கூட்டே.

விளக்கவுரை :

சீலை  மெழுகு  பாவை  வித்தையைப்  பற்றி  கூறுகிறேன்  கேள்.  சிவபெருமான் , காளிகாதேவி , விநாயகர் , ஷண்முகன் , வயிரவன் , பெருமாள் , அய்யன் , அனுமான் , கருப்பன்  ஆகிய  தெய்வ  அபிஷேக  வழிபாட்டில்  உண்டாகும்  மெழுகை  வகைக்கு  இரண்டு  விராகன்  வீதம்  எடுத்துக்  கொண்டால்  பதினெட்டு  விராகன்  எடையாகும்.  இதில்  ஐங்கோலம் , ஐங்காயம் , சுடலையின்  கருவையும்  சேர்த்துக்  கொள்ளவும்.

162. கூட்டியே  லேகித்து  உருப்போற்  செய்து
    கொற்றவனே  மயானருத்திரன்  றியானமோது
நாட்டிடே  யம் ... பம் ... யம் ... பம் ... மென்று
    நலமான  மயானருத்திரா  கட்டுகட்டு
சூட்டியே  எரி ... எரி ... யென்று  லட்சஞ்
    சுகமாகத்  தானோதிப்  பூசை  செய்து
ஆட்டியே  சத்துருப்பே  ரெழுதி  வைத்து
    அப்பனே  யுரு  வயிற்றிற்  பதித்துப்  போடே.

விளக்கவுரை :

சேர்த்துக்  கொண்டதை  நன்றாக  லேகியம்போன்று  பிசைந்து,  இவற்றில்  ஒரு  உருவம்  செய்து  கொண்டு,  மயானருத்திரன்  மந்திரம்  சொல்லவும்  " யம் ... பம் ... யம் ... பம்"  என்றும்  " மயான  ருத்திரா  கட்டு ... கட்டு ..."  என்றும்      " எரி ... எரி ..."  என்றும்  இலட்சம்  தடவைகள்  ஒதிவிட்டு  பூசை  செய்யவும்.  அதன்  பின்னர்  எதிரியின்  பெயரை  ஒரு  சீட்டில்  எழுதி  செய்துள்ள  உருவத்தின்  வயிற்றில்  பதிக்கவும்.

163. பதித்துநீ  யாயிரத்  தெட்டுரு  ஜெபித்துப்
    பண்பான  பூசையது  பாங்காய்ச்  செய்து
அதித்துநீ  முப்பத்து  ரெண்டு  குப்பி
    அப்பனே  முடக்கிவைக்க  முடமதாவான்
கதித்தவுட  நூசியிலே  குத்தும்போது
    கனிவான  விரல்நகங்கள்  காதிற்  குத்தும்
நசித்தவுட  லூசியது  சொரிகி  வைக்க
    நாயகனே  குத்தலெடுத்  தலறுவானே.

விளக்கவுரை :

பதித்து  வைத்த  உருவத்தின்முன்  ஆயிரத்து  எட்டு  தடவைகள்  ஜெபித்து  விட்டு  பக்தியுடன்  பூசை  செய்யவும்.  பின்னர்  அதனை  முப்பத்திரண்டு  குப்பியில்  முடக்கி  வைத்தால்  எதிரி  முடமாவான்.  இந்த  உருவத்தில்  ஊசியை  விரல் , நகம் , காது  இவைகளில்  குத்தி  சொருகி  வைத்தால்  எதிரியானவன்  குத்தலெடுத்து  அலறுவான்.

164. அலறியே  யவன்  வணங்கி  வந்தானானால்
    அப்பனே  முடந்திருப்ப  வூசி  வாங்கு
நலமாக  வயிற்றில்  வைத்தசீட்டு  போக்கு
    நாயகனே  நிவர்த்தியாய்ப்  போகும்  பாரு
குலமான  பாவையைநீ  பதனம்  பண்ணு
    கொற்றவனே  நினைத்தபோ  தெடுத்துச்  செய்நீ
பலமாக  யிப்பாவை  கையில்  வேணும்
    பார்த்தவர்க்குப்  பலனுண்டு  பலவிதமாமே. 

விளக்கவுரை :

இந்த  கொடுமையைத்  தாங்காத  எதிரி  பணிந்து  வணங்கி  வந்ததனனால்  உருவத்தின்  வயிற்றில்  பதித்து  வைத்துள்ள  சீட்டு , குத்தியுள்ள  ஊசி ஆகியவற்றை  எடுத்து  விட்டால்  அவனுக்கு  நிவர்த்தியாகி  நலமாவான்.  அதன்  பின்னர்  அந்த  பாவையை  பத்திரமாக  எடுத்து  வைத்துக்  கொள்ளவும்.  தேவைப்  படும்போது  இதனை  எடுத்து  உபயோகித்தால்  பலவிதமான   பலன்  கிடைக்கும்.

165. ஆமப்பா  ஐயுங் ... கிலியுங் ...சுவாகா ... வென்று
    அடைவாக  லட்சமுரு  ஜெபித்துப்  பாரு
நாமப்பா  பூஜையது  சத்தி  பூஜை
    நாள்தோறு  மண்டலந்தான்  தினமுஞ்  செய்நீ
வமப்பா  மண்டலத்திற்  சித்தியாகும்
    வளமாக  வேணுமென்ற  தெதுவானாலும்
போமப்பா  நீசொல்லித்  தியானஞ்  செய்யப்
    போகுமே  யவரிடத்திற்  கிணவிற்றானே.

விளக்கவுரை :

"ஐயும் ... கிலியும் ... சுவாஹா ... "  என்று  இலட்சம்  தடவைகள்  ஜெபித்து  நாற்பத்தெட்டு  நாட்கள்  தினசரி  சக்தி  பூஜை  செய்தால்  நினைத்த  காரியங்கள்  கைகூடி  சித்தியாகும்  எது  தேவையோ  அதனை  நினைத்து  தியானம்  செய்தால்  அவையாவும்  உனக்குக்  கிடைக்கும்.

Powered by Blogger.