புலிப்பாணி ஜாலத்திரட்டு 186 - 190 of 211 பாடல்கள்
புலிப்பாணி ஜாலத்திரட்டு 186 - 190 of 211 பாடல்கள்
186. பாரடா சுவாமியை சென்னிற மதாகப்
பண்பாகத் தியானித்து முக்கோணங் கீறிச்
சேரடா கிலியும் ... ரோ ... மென்று சொல்லிச்
செயலாக வாயிரத்தெட்டுஞ் செபித்து
வீரடா விபூதிகளை யளித்துக் கொண்டால்
விதமாகச் சகலமும் வசிய மாகும்
தீரடா பின்னொருத்தர் தனக்கே யீந்தாற்
திறமாக வசியமாய் வணங்குவாரே.
விளக்கவுரை :
அதன்பின்னர் சுவாமியை சென்னிறமாக நினைத்து தியானம் செய்து விபூதியில் முக்கோணம் கீறி , "கிலியும் ... ரோ ..." என்று ஆயிரத்தெட்டு தடவைகள் ஜெபித்து விபூதியை எடுத்து நெற்றியில் பூசிக் கொண்டால் எல்லாம் உன் வசமாகும். அதன் பின்னர் மற்றவர்களுக்கு இந்த விபூதியை அளித்தால் அவர்கள் உனக்கு வசியமாகி வணங்கி நிற்பார்.
187. வணங்கியே சுவாமியை பளிங்கு நிறமாக
வளமாகத் தியானித்து பிறைபோற் கீறி
அணங்கியே அம்மாரோ வெனச் செபித்து
அடைவாக வாயிரத் தெட்டுருத்தா னோதி
வணங்கியே விபூதியைப் பூசிக் கொண்டால்
விழுவாமல் சகலமும் யோகம் போகம்
இணங்கியே சுவாமியை மேக நிறமாக
யின்பமுறத் தியானித்து நாற்கோணங் கீறே.
விளக்கவுரை :
சுவாமியை பளிங்கு நிறமாக மனதில் தியானித்து விபூதியில் பிறைபோல் கீறி "அம்மாரோ" என்று ஆயிரத்தெட்டு தடவைகள் ஒதிவிட்டு விபூதியை எடுத்துப் பூசிக் கொண்டால் சகல யோகம் - போகம் உண்டாகும். சுவாமியை மேகம் நிறமாக மனதில் நினைத்து தியானம் செய்து விபூதியில் நாற்கோணம் கீறவும்.
188. கீறியே ஒம் ... றம் ... ரோ ... மென்று
கிருபையாய்த் தென்னோலை தன்னிலப்பா
சீறியே யிருவர்பேர் தன்னைச் சூட்டிச்
சிறப்பாக வாயிரத்தெட் டுருஜெபித்து
வீறியே எதிரியின்முன் னிறப்பில் வைக்க
விதமாக யிருவருமே பிரிந்து போவார்
தெறியே சுவாமியைப் புகை வா்ணமாகத்
தெளிவாகத் தியானித் தைங்கோணங் கீறே.
விளக்கவுரை :
விபூதியில் நாற்கோணம் கீறியதும் , "ஒம் ... றம் ... ரோ ..." என்று தென்னை ஓலையில் நண்பராக ஒருவர் இருந்து எதிரியாகிவிட்டால் அவர்கள் இருவரின் பெயரையும் எழுதி அதன்மீது வைத்து ஆயிரத்தெட்டு முறைகள் ஜெபித்துவிட்டு அந்த ஓலையை எதிரியின் முன்னிருப்பில் வைக்க இருவரும் பிரிந்து விடுவார்கள். சுவாமியைப் புகை நிறமாக நினைத்து தியானம் செய்து விபூதியில் ஐங்கோணம் கீறவும்
189. கீறியே அம்மாரோ மென்று நாட்டி
கிருபையுட னாயிரத்தெட்டுரு ஜெபித்து
வாறியே விபூதியைநீ போட்டபோது
வரிசையுடன் சகலமுமே யோடிப் போகும்
தேறியே சுவாமியைப் பிரளயகால ருத்ரனாய்த்
தியானித்து முக்கோணந் திறமாய்க் கீறி
ஏறியே ஓம் ... ரோ ... மென்று நாட்டி
எளிதிற் சத்ருவின் சத்தெழுத்தை நாட்டே.
விளக்கவுரை :
ஐங்கோணம் கீறியதும் "அம்மாரோ" என்று ஆயிரத்தெட்டு தடவைகள் ஜெபித்துவிட்டு விபூதியை எடுத்துப் போட்டால் கஷ்டத்தை ஏற்படுத்தும் எந்த சக்தியும் ஒடிப்போய்விழும். பின்னர் சுவாமியை பிரளய கால ருத்திரனாக நினைத்து தியானம் செய்து விபூதியில் முக்கோணம் கீறி , "ஒம் ... ரோ ..." என்று கூறி எதிரியின் பெயரை எழுதி அதில் போடவும்.
190. நாட்டியே யாயிரத்தெட்டுருத் தானோதி
நாயகனே யழல்காட்ட கீறிப்போகும்
வாட்டியே சகலமு மாரணமாய்ப் போகும்
வளமாக சுவாமியைக் கறுப்பதாகக்
கூட்டியே தியானித்து முக்கோணங் கீறி
குணமாகப் பம் ... மென்று அதிலே நாட்டி
சூட்டியே யாயிரத்தெட்டுத்தா னோதி
கறுக்கப்பா நீறிடவே பேதந்தானே.
விளக்கவுரை :
அதன்பின்னர் ஆயிரத்தெட்டு தடவைகள் ஒதி விட்டு எழுதியதை எடுத்து தீயில் காட்ட கருகிப் போகும். இதனால் எந்த எதிரியாக இருப்பினும் மரணமடைவான். சுவாமியை கறுப்பு நிறமாக நினைத்து தியானம் செய்து விபூதியில் முக்கோணம் கீறி " பம் " என்று அதிலே எழுதி ஆயிரத்தெட்டுத் தடவைகள் ஓதிவிட்டு விபூதியை எடுத்து நெற்றியில் பூசிக் கொண்டால் எல்லா காரியமும் சித்தியாகும்.