புலிப்பாணி ஜாலத்திரட்டு 126 - 130 of 211 பாடல்கள்

 

126. செய்யப்பா மையெடுத்துப் பார்க்கும்போது
    செயலான களவுமுத லேவலப்பா
வையப்பா தொழில் முறையும் தெய்வபூதம்
    வளமான பிசாசு ராட்சத கணங்கள்
பையப்பா மோடிதர னொருவன் செய்தால்
    பாங்காக யவன் செய்கை  தோற்றாகும்
கையப்பா  யிதுபார்வை மைதானப்பா
    கனிவாகச் சொல்லுமடா கருத்தாய்த் தானே.

விளக்கவுரை :

அதன்பின்னா் சிமிழிலிருந்து மையை எடுத்து தடவி பார்க்கும் போது, தம்மிடம் திருடியவா்வன், ஏவல் செய்தவன், தொழில் முறையில் எதிரி, ஆகியவைகளுடன் பிசாசு, ராட்சதன், கணங்கள், மோடி செய்தவன் போன்றவா்களின் உருவம் தெளிவாக அந்த மையில் தெரியும். இதனை பார்வை மை என்றும் சொல்லுவார்கள்.

கவச  மந்திரம்

127. தானேதான்  கவசமொன்று  சொல்லக்  கேளு
    தயவான  ரீங்காரம்  வெள்ளி  தகட்டில்
மானேதான்  இம் ... உம் ... கம் ... ராங் ... சிங் ... கென்று
    மைந்தனே  யாயி ... டாகினி ... மாங்காளி ...
ஊனேதான்  விஷ்ணு  சகோதரி  சர்வாணி
    உமைதேவி  பராசக்தி  ந-வ-சி  யென்று
கோனேதான்  லட்சமுரு  செபித்துப்  போடு
    கொற்றவனே  சத்திசிவ  பூசையாச்சே.

விளக்கவுரை :

கெட்ட  காரியங்களைத்  தடுத்து  நன்மை  யளிக்கும்  கவச  மந்திரம்  ஒன்றைக்  கூறுகிறேன்  கேட்பாயாக  சுத்தவெள்ளி  தகட்டில்,  "இம் ... உம் ... கம் ... ராங் ... சிங்"  என்றும்,  "ஆயி ... டாகினி  மாங்காளி  விஷ்ணு  சகோதரி  சர்வாணி ... உமாதேவி ... பராசக்தி ... ந-வ-சி"  என்றும்  எழுதவும்.  இதனை  வைத்து  இலட்சம்  தடவைகள்  ஜெபித்துவிட்டு  சக்தி  - சிவ  பூஜை  செய்யவும்.

128. செய்யடா  தியானமிட்டு  விபூதி  பூசக்
    செகதலத்தில்  ஏவல்  முதல்  பிசாசுபூதம்
பையவே  புதையிலே  வேர்  பிடுங்கிப் 
    பகர்ந்த  கருத்தடவிச்  சக்கரங்களாட்டில்
கையவே  பார்வையுடன்  குரளிகூட்டி 
    நலமாக  மற்றுமுள்ள  சூனியங்கள்
கையவே  கல்லெறிக்கு  நீக்குமப்பா
    கனிவான  மந்திரத்தை  எழுதிக்  கட்டே.  

விளக்கவுரை :

பூசை  செய்துவிட்டு  விபூதி  பூசி  உலகத்தில்  ஏவல்  முதல்  பிசாசு  பூதம்  இவைகளின்  பாதிப்பை  தடுத்திட,  வேர்  பிடுங்கி,   கருவைத்  தடவி  எழுதி  வைத்த  சக்கரத்தில்  வைத்து  அதனை  உற்று  நோக்கியபடி  பார்த்தாயானால்  மற்றுமுள்ள  சூனியங்கள்,  கல்லெறி  இவைகள்  ஏற்படாது.  இந்த  மந்திரத்தை  தகட்டில்  எழுதி  கட்டிக்  கொள்ளவும்.  இதனால்  எந்த  கெட்ட  காரியமும்  உங்களைப்  பாதிக்காது.

காரியம்  சித்தியாக  அஞ்சனம்

129. பாடினே  றூசியென்ற  காந்தம்  நீலம்
    பண்பான  லூமைகையில்  மஞ்சளப்பா
ஆடியே  வேகை  வெத்திலையுங்  கூட
    அடைவான  செங்களழுநீர்  வேரு  மையா
நாடியே  தலைமஞ்சள்  மாவுங்  கூட்டு
    நலமான  கோரோசனை  குங்குமப்பூ
கூடியே  வகைவகைக்கு  விராக  னொன்று
    குழியம்மி  தனிலரைக்க  வகையைக்  கேளே.  

விளக்கவுரை :

இன்னொரு  ஜாலவித்தைப்  பற்றிச்  சொல்லுகிறேன்.  ஊசி  காந்தம்,  நீலம்,  ஊமைகை  மஞ்சள்,  முற்றிய  வெற்றிலை,  செங்களுநீர்  வேர்,  தலைமஞ்சள்  மாவு  இவைகளுடன்  கோரோசனை,  குங்குமப் பூ  ஆகிய  இவைகளி லெல்லாம்  வகைக்கு  ஒரு  விராகன்  எடைவீதம்  எடுத்துச்  சேர்த்து  கல்லத்திலிட்டு  அரைக்கவும்.  அரைப்பதற்க்கு  முன்னர்  மேலும்  சேர்க்க  வேண்டியவற்றையும்  கூறுகிறேன்  கேள்.

130. கேளடா  மாடனென்ற  புறாவின்  ரத்தம்
    கெணிதமாய்  யொன்றறுத்துக்  கடவாரு
சூளடா  சிவந்தபசு  வெண்ணெ  யப்பா
    சுகமாக  விராகனது  பணிரென்  டாகும்
நாளடா  மூன்றுநா  ளரைத்  தெடுத்து
    நாயகனே  சிமிழில்  வைத்து  காளிமுன்னில்
வாளடா  புதைத்தெடுப்பாய்  நாளெட்டாகும்
    வளமான  புனுகுடன்  சவ்வாது  சேரே.    

விளக்கவுரை :

மாடப்  புறாவினை  அறுத்து  அதன்  இரத்தத்தை  அதில்  வார்த்து  சிவப்பு  நிறமுடைய  பசுவின்  வெண்ணெய்  பனிரெண்டு  விராகன்  எடை  சேர்த்து  மூன்று  நாட்கள்  அரைத்து  அதனை  எடுத்து  சிமிழில்  வைத்து  காளி  முன்னால்  புதைத்து  எட்டு  நாட்கள்  கழித்து  எடுத்து  அதில்  புனுகு,  சவ்வாது  சேர்க்கவும்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு 121 - 125 of 211 பாடல்கள்
 


வனமடக்கம்

121. தானேதா  னின்னமொன்று  சொல்லக்  கேளு
    தயவாக  அவையடக்கம்  அங்க  மடக்க
மானேதா  னங்கமேற்  பங்கமடக்க
    மைந்தனே  வழியடக்கச்  சுவாஹா  வென்று
கோனேதான்  தண்ணிமிட்டான்  கிழக்குப்  கப்பா
    கொற்றவனே  யருக்கநாள்  காப்புக்  கட்டி
வானேதான்  பொங்கல்  பலிபூசை  யிட்டு
     வளமான  மந்திர  மாயிரந்தா  னோதே.

விளக்கவுரை :

மற்றொரு  ஜாலவித்தையைக்  கூறுகிறேன்  கேட்பாயாக.  " அவையடக்கம் ... அங்க  அடக்கம் ... வழி  அடக்கம் ... சுவாஹா"  என்று  சொல்லி,  தண்ணீர்  விட்டான்  கிழங்குக்கு  ஆதிவாரத்தில்  காப்பு  கட்டி  பலி  புசை  செய்துவிட்டு  பின்னர்  மந்திரத்தை  ஆயிரம்  தடவைகள்  செபிக்கவும்.

122. ஒதியே  பிடுங்கிமுன்  கருவைப்  பூசி
    ஒகோகோ  காலடியில்  மிதுத்துக்  கொள்ளு
சோதியே  யவனமது  வயதி  றாது
    கறுக்கான  மந்திரத்தை  யோதி  நில்லு
ஆதியே  யவனமது  வெட்டும்  பாரு
    அந்நிறத்திற்  சொல்லாது  அதீத  வித்தை
வாதியே  போகருட  கடாட்சத்தாலே
    வளமாக  புலிப்பாணி  பாடினேனே.

விளக்கவுரை :

செபித்தபின்னர்  அந்த  வேரைப்  பிடுங்கி  வந்து  கருவைப்  பூசி  அந்த  வேரை  காலடியில்  மிதித்துக்  கொண்டு,  வனத்தைப்  பார்த்தபடி  மந்திரத்தை  ஒதவும்.  அச்சமயம்  வன  மடக்கமாகி  வெட்டும்.  இந்த  வித்தை  ஒருபோதும்  பொய்காது.  இது  அருமையான  வித்தையாகும்.  இந்த  வித்தையை  போகருடைய  கடாட்சத்தினால்  புலிப்பாணியாகிய  நான்  உரைத்துள்ளேன்.

ஒண்டி  மூலிகை

123. கட்டப்பா  மூலிகை  யொன்று  சொல்லக்  கேளு
    கணிவாக  ஒண்டியுட  மூலிக்கே  தான்
கிட்டப்பா  அமாவாசைக்  கிராண  காலங்
    கிருபையுள்ள  அருக்க  னாளே  தோன்றில்
நெட்டப்பா  பொங்கல்பலி  பூசைசெய்து
    நேராக  வேரெடுத்துக்  கட்டிக்  கொண்டால்
பட்டப்பா  பார்வை  முதலெது  வானாலும்
    பரத்திலனு  காமலது  அகன்று  போமே.

விளக்கவுரை :
   
ஓரு  மூலிகையின்  சிறப்பைக்  கூறுகிறேன்  கேட்பாயாக.  ஒண்டி  மூலிகை  என்று  ஒன்று  இருக்கிறது.  அதனைக்  கண்டு  பிடித்து  அமாவாசை  அல்லது  கிராணம்  பிடித்திருக்கும்  சமயம்  அதற்க்கு  காப்பு  கட்டி  பொங்கலிட்டு  பலி  பூசை  செய்து  அதணன்  வேரைக்  கொண்டு  வந்து  கட்டிக்  கொண்டால்  பார்வை  முதல்  எல்லா  குறைகளும்  அகன்றுவிடும்.

மைதடவிப்  பார்த்தல்

124. போமப்பா  ஆமையொன்று  மண்தவளை  யொன்று
    பொங்கமுடன்  கன்னிகோழி  முட்டை  யொன்று
தாமப்பா  புதைத்தெலும்பு  பலந்தான்  ரெண்டு
    தயவான  ஈசலது  பலந்தான்  ரெண்டு
நாமப்பா  நிலவாகை  விதைதா  னப்பா
    நாயகனே  பலமிரண்டு  நிறுத்துப்  போடு
ஆமப்பா  மாக்கொடிதான்  விராகன்  மூண்று
    அடைவாகப்  பூத்தயிலமாக  வாங்கே.

விளக்கவுரை :

மைபோட்டுப்  பார்க்கும்  வித்தையைச்  செய்வதற்கு  - ஆமை  ஒன்று,  தவளை  ஒன்று,  கன்னி  கோழி  அதாவது  இளம்  பெட்டைக்  கோழியின்  முட்டை  ஒன்று  பூதைத்த  பிணத்தின்  எலும்பு  இரன்டு  பலம்,  ஈசல்  இரண்டு  பலம்,  நிலவாகை  விதை  இரண்டு  பலம்,  மாக்கொடி  மூன்று  விராகன்  எடை  இவைகளையெல்லாம்  சேர்த்து  பூத்தயிலமாக  இறக்கிக்  கொள்ளவும்.

125. வாங்கியே  தயிலத்தை  யெடுத்துக்  கொண்டு
    வளமான  குழியம்பி  தன்னிற்  போடு
தாங்கியே  யஞ்சனக்கல்  விராக  னொன்று
    தான்போடு  ஆள்காட்டி  முட்டை  நெய்யிற்
பாங்கியே  கொஞ்சமது  கூட  விட்டுப்
    பரிவாக  ஒருசாமந்  தானரைத்துக்
காங்கியே  சிமிழில்  வைத்து  அனுமாருக்கும்
    கனிவோடு  அஞ்சனிக்கும்  பூசை  செய்யே.

விளக்கவுரை :
   
அந்தத்  தைலத்தை  எடுத்து  கல்லத்திலிட்டு  அதில்  அஞ்சனக்கல்  ஒரு  விராகன்  எடை,  ஆள்காட்டி  முட்டையின்  வெள்ளைக்  கரு  கொஞ்சம்  விட்டு  நன்றாக  ஒரு  சாமம்  நேரம்  அரைத்து  மை  பக்குவத்தில்  எடுத்து  சிமிழில்  வைத்துக்  கொள்ளவும்.  அதனை  வைத்து  அனுமாருக்கும்,  அஞ்சனாதேவிக்கும்  பூசை  செய்யவும்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு 116 - 120 of 211 பாடல்கள்



கொள்ளி ஜாலம்

116. செய்யவே  யின்னமொரு  வித்தை  கேளு
    சொன்ன  கொள்ளி  வாயினுட  ஜாலமப்பா
பையவே  சிவ  ...  வசி ... என்று  லட்சம்
    பாங்காகத்தான்  செபித்து  பூஜை  செய்து
உய்யவே  அக்கினியைத்  துணியிற்  சுற்றி
    உத்தமனே  தகட்டி  லட்சத்தைக்  கீறிக்
கையவே  யைங்காய  மைங்கோலந்  தான்
    கனிவாகச்  சுடலையுட  கருவும்  பூசே.

விளக்கவுரை :

இன்னொரு  ஜால  வித்தையைக்  கூறுகிறேன்  கேட்பாயாக.  இது  கொள்ளிவாய்  ஜாலமாகும்.  " சிவ ... வசி ... "  என்று  இலட்சம்  தடவை  உச்சரித்து  பூஜை  செய்து  நெருப்பை  துணியில்,  தகட்டில்  அட்சரத்தை  எழுதி  ஐங்கோல  மையைத்  தடவி,  சுடுகாட்டு  கருவையும்  அதன்மீது  பூசவும்.

117. பூசியே  யெதிரியுட  பேரை  நாட்டிப்
    பொங்கமுடன்  பூசித்து  கொள்ளி  வாய்க்கு
ஆசியே  பந்தெடுத்து  தகட்டில்  வைத்தே
    யப்பனே  இருதலைக்  கொள்ளிதானும்
வாசியே  சத்துருவின்  மனைகள்  தோறும்
    வைத்துநீ  கொளுத்தென்று  தியானமோது
காசியே  கொளுத்துமடா  திரியும்  பந்தும்
    கடிதாகத்  கொளுத்திவிடுங்  கண்டு  பாரே.

விளக்கவுரை :

அதன்மீது  பூசிவிட்டு  எதிரியின்  பெயரை  அதன்மேல்  எழுதி  பூசித்துவிட்டு  கொள்ளிவாய்க்குப்  பந்தெடுத்து  தகட்டின்  மேல்  வைக்கவும்.  " இருதலைக்  கொள்ளியே,  பகைவரின்  வீட்டை  கொளுத்து"  என்று  தியானம்  செய்து  தகட்டின்  மேல்  உள்ள  பந்தைக்  கொளுத்தினால்  உடனே  எதிரியின்  வீடும்  எரிவதைக்  காணலாம்.

மலக்குட்டி  சாத்தான்  தியானம்

118. பாரடா  மலக்குட்டி  தியானங்  கேளு
    பாங்கான  ஒம் ...  இரீம்  ...  வா  ...  வா ...  வென்று
கூறடா  மலக்குட்டிச்  சாத்தா  னென்று
    குணமாகத்  தான்வைத்து  பூசை  கொண்டு
வீரடா  நான்  சொல்லும்  வேலை  கேட்டு
    வீணாக  மலமதனை  வாரி  நீயும்
சேரடா  நானினைத்த  விடத்திற்  போடு
    செப்பியது  ராசபலி  பெலக்கச்  செய்யே.

விளக்கவுரை :

மலக்குட்டி  ஜாலம்  செய்ய  அதற்கான  தியான  முறையைக்  கூறுகிறேன்  கேட்பாயாக.  மலக்குட்டி  என்னும்  குட்டி  சாத்தானை  நினைத்து,  " ஒம் ... இரீம் ... வா ... வா ... மலக்குட்டி  சாத்தானே ... "  என்று  சொல்லி  பூசை  செய்து  நான்  சொல்லும்  வேலையைக்  கேட்டு,  மலங்களையெல்லாம்  வாரி  நான்  நினைத்த  இடங்களிளெல்லாம் போடு"  என்று  சொல்லி  ராஜ  பலி  பூசை  செய்யலாம்.

மலக்குட்டி  ஜாலம்

119. செய்யவே  மந்திரத்தைத்  தகட்டிற்  கீறிச்
    செம்மையா  யைங்காய  மைங்கோலஞ்  சேர்த்து
வையகத்திற்  சுடலையுட  கருவுங்  கூட்டி
    வளமாக  மத்தித்துத்  தகட்டிற்  பூசிப்
பையவே  யெதிரியின்பேர்  தகட்டில்  நாட்டி
    பாங்காக  மந்திரத்தை  லட்சமோது
ஐயமின்றி  பூசை  பலி  பெலக்கச்  செய்து
    அப்பனே  மலமெடுத்துத்  தகட்டில்  வையே.

விளக்கவுரை :

முன்னர்  கூறியுள்ள  மந்திரத்தை  தகட்டில்  கீறி  எழுதி  ஐங்கோலல  மையைச்  சேர்த்து  சுடுகாட்டு  கருவுஞ்  சேர்த்துக்  குழைத்து  அந்த  தகட்டில்  பூசி  எதிரியின்  பெயரை  அந்த  தகட்டில்  எழுதி  மந்திரத்தை  இலட்சம்  தடவைகள்  உச்சரித்து  பூசை  பலி  ஆகியவற்றைச்  சிறப்பாகச்  செய்து  மலத்தை  எடுத்து  அந்தத்  தகட்டின்  மீது  வைத்திடவும்.

120. வைக்கயிலே  மலமிந்தா  மலக்குட்டி  யென்று
    வைத்தல்லோ  மந்திரத்தைத்  தியானஞ்  செய்நீ
வலக்கையிலே  மலமதனை  வாரிக்  கொண்டு
    வகையாக  நீநினைத்த  விடங்கள்  தோறுஞ்
சொக்கயிலே  தகடெடுத்துக்  கழுவிப்  போடு
    சொகுசாகப்  போகுமடா  தீர்க்கமாக
உலக்கையிலே  யிதுவல்லவோ  வுலகபேதம்
    உத்தமனே  மலக்குட்டிச்  செய்கைதானே.

விளக்கவுரை :

பின்னர் , " ஒ ... மலக்குட்டி  மலம்  இந்தா"  என்று  சொல்லி  முன்னர்  கூறிய  மந்திரத்தைச்  சொல்லி  தியானம்  செய்து  விட்டு  வலது  கையினால்  மலத்தை  வாரிக்  கொண்டு  நீ  நினைத்த  இடங்களிளெல்லாம்  போடு"   என்று  கூறினால்  எதிரியின்  இடத்திற்கெல்லாம்  மலத்தைப்  போடும்.  அதன்  பின்னர்  அந்த  தகடை  யெடுத்துக்  கழுவிப்  போட்டு  விடு.  இது  மலக்  குட்டியின்  செயலாகும்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு 111 - 115 of 211 பாடல்கள்

111.  போடப்பர  வெதிரியின்பே  ரதன்கீழ்  நாட்டிப்
பொங்கமுட  னாகாச  மாடனோது
    கூடப்பா  லட்சமுரு  செபித்துப்  போடு 
குணமான  மந்திரந்தான்   சொல்லக்  கேளு
    நடப்பா  ஓம் ...  நமோ ...  பகவதே
நலமாக  ஓம் ...  பாடு ...  சுவாஹா  வென்று
    ஆமப்பா  பூசைபலி  பலக்கச்  செய்து
அடைவாக  மந்திரந்தான்  ஓதக்  கேனே.

விளக்கவுரை :

தீயில்  எழுதிப்  போடும்போது  அந்த  எதிரியின்  பெயரை  அதன்  கீழே  எழுதிப்  போடவும்.  பின்னர்  ஆகாச  மாடனை  நினைத்து  இலட்சம்  தடவைகள்  செபிக்க  வேண்டும்.  செபிக்கவேண்டிய  மந்திரத்தை  கூறுகிறேன்  கேட்பாயாக.  "ஓம்... .  நமோ  ...  பகவதே  ...  ஓம்  ...  பாடு  ...  சுவாஹா ... "  என்று  ஓத  வேண்டும்.  அதற்க்கு  முன்னர்  காரியம்  பலிக்க  பூசை  செய்து,  பலி  கொடுத்து  மந்திரத்தை  ஓதவேண்டும்.
 
112. கேளடா  காரியத்  தகட்டி  லப்பா
கெணிதமாய்  மந்திரத்தை  எழுதிப்  போடு
         சூளடா  வெதிரியுட  பேரை  நாட்டுஞ்
    சுகமான  வைங்காயங்  கோலஞ்  சேர்த்து
          ஆளடா  சுடலையுட  கருவுங்  கூட்டி
    அப்பனே  மத்தித்துத்  தகட்டிற்  பூசி
         வாளடா  பூசைபலி  பலக்கச்  செய்து
    வளமாக  மாடனைத்தான்  தியான  மோதே.

விளக்கவுரை :

 பின்னர்  காரியத்  தகட்டில்  இந்த  மந்திரத்தை  எழுதி  அதன்  கீழே  எதிரியின்  பெயரையும்  எழுதி  ஐங்கோலஞ்  சேர்த்து  அத்துடன்  சுடலைக்  கருவையும்  கூட்டி  இவற்றையெல்லாம்  குழைத்து  காரீயத்  தகட்டில்  பூசி,  பூசை  செய்து  பலியிட்டு  மாடனை  தியானம்  செய்யவும்.

113.  ஓதியே  மாடனைத்தான்  கட்டிக்  கொண்டு
    ஒளிவான  வாகாச  மாடா  நீயும்
          வாதியாக்  கல்லிந்தா  விந்தா  வென்று
    வகையாகச்  சொல்லுயபின்  கல்லுதானும்
          ஆதியாற்  றகட்டின்மேல்  வைத்தா  யானால்
    அப்பனே  கல்லதுவு  மளவிராது
           பாதியே  யொருகோடி  பூதமெல்லாம்
    பார்த்திருக்கத்  தானெறியுங்  கல்லு  தானே.

விளக்கவுரை :

மந்திரத்தை  ஓதி  மாடனை  தன்  வசமாக்கிக்  கொண்டு,  "ஓ ... ஆகாச  மாடா ... நான் கொடுக்கும் கல்லை  வாங்கிக்  கொள்"  என்று  சொல்லி  அந்தக்  கல்லை  அந்த  தகட்டின்மீது  வைத்தாயானால்  கோடி  பூதஙகள்  பார்த்திருக்க  நீ  எறிகின்ற  கல்  மாடனின்  ஆற்றலால்  எதிரியின்  வீட்டில்  போய்  விழும்.

114.  தானேதான்  மண்ணெடுத்துச்  சாலை  கற்கள்
    தயவாக  மாட்டெலும்பு  செங்கல்  மூட்டை
           மானேதான்  நவபாண்ட  மரிசு  யுப்பு
    மணமான  மிளகு  பொடி  தீட்டுச்சீலை
           வானேதான்  குப்பையொடு  கண்டதெல்லாம்
    வாரியே  தானெரிவு  மில்லந்  தன்னில்
            கோனதா  னெதிரிபோ  மிடங்களெல்லாம்
    கொற்றவனே  யவனுடனே  போகும்  பாரே.

விளக்கவுரை :

 அதுமட்டுமல்லாது  மண்,  சாலைக்  கற்கள்,  மாட்டெலும்பு,  செங்கல்,  முட்டை,  நவபாண்டம்,  அரிசி,  உப்பு,  மிளகுப்  பொடி,  தீட்டுச்சீலை,  குப்பை  போன்ற  கண்ட  பொருள்களெல்லாம்  வாரிவாரி  எதிரியின்  வீட்டில்  எறியும்.  எதிரி  போகும்  இடங்களுக்கெல்லாம்  அவைகள்  போகும்.

115.  பாரடா  சத்துருவும்  வணங்கி  வந்தால்
    பண்பான  மாடனைநீ  யழித்துப்  போடு
         வீரடா  மாடாநீ  கல்லைத்  தானும்
    விதமாகத்  தாவென்று  யெடுத்துப்  போடு
          தீரடா  சாணமிட்டு  மெழுகிப்  போடு
    திறமாகச்  சக்கரத்தைக்  கழுவு  வாய்நீ
          கூறடா  ஜலந்தனிலே  விட்டுப்  போடு
    குணமாக  மாடனைத்தான்  பூசை  செய்யே.
 
விளக்கவுரை :
 
 எதிரியானவன்  தங்களிடம்  மன்னிப்புக்  கேட்டு  வணங்கி  வந்தால்  மாடனை  அழித்து  விடு.  எப்படி  யெனில்  நான்  கொடுத்த  கல்லை  திரும்பக்  கொடுத்து  விடு  என்று  கூறி  தகட்டின்  மீது  வைத்தக்  கல்லை  எடுத்துப்  போட்டுவிடு.  அந்த  இடத்தை  பசு  சாணமிட்டு  மெழுகி  விடு.  சக்கரத்தைக்  கழுவி  தண்ணீரில்  போட்டுவிடு.  பின்னர்  மாடனுக்குப்  பூசை செய்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு 106 - 110 of 211 பாடல்கள்

106. தானென்ற வெள்ளாவி முன்னே வைக்க
    தயவான வெள்ளாவி வேகாதப்பா
கேனென்ற நெற்களத்தில் ராசிகுன்றும்
    குணமான உப்பதுவும் விளையாமற்றான்
தேனென்ற ராசியது குறையும் பாரு
    தெளிவான மீன்கரையில் மீன் கிட்டாது
ஆனென்ற கொட்டணத்தில் நெற்களெல்லாம்
    அப்பனே மசியாது கண்டு பாரே.

விளக்கவுரை :

வண்ணானின் வெள்ளாவியின் முன்னே இதனை  வைத்தால்  வெள்ளாவி  வேகாது. இதனையே நெற்களத்தில் வைத்தால் ராசி இருக்காது. உப்பளத்தில் வைத்தால் உப்பு விளையாது. மீன் பிடிக்கும் இடங்களில் வைத்தால் மீன்கள் வலையில் கிடைக்காது. நெல்கொட்டத்தினால் மசியாது. அது மட்டுமல்ல மேலும் -

107. பாரடா  நாவிதன்னை  சுட்ட கோலும்
    பண்பான  முளைசெதுக்கி  உகரம்  நாட்டி
சீரடா  வைங்காயக்  கருவும்  பூசி
    சிறப்பான  வெதிரிமலந்  தன்னிற்றாக்க
வீரடா  முன்பின்னு  மடைக்கும்  பாரு
    விதமாக  காரணமாய்ப்  போவானையா
கூறடா  முளைபிடுங்கி  நீரிற்  போடக்
    குணமாகு  மடிந்ததெலாம்  நிவர்த்தி  தானே.

விளக்கவுரை :

நாபியைச்  சுட்டகோலும்  முளைசெதுக்கி  அதில்  உகாரம்  நாட்டி,  ஐங்கோலக்  கருவையும்  பூசி  அதனைஎதிரியின்  மலத்தில்  போட்டால்  எதிரிக்கு  மலசலம்  அடைத்துக்  கொள்ளும்  வேதனையையும்  அனுபவிப்பான்.  உடனே  அந்த  முளையைப்  பிடிங்கி  தண்ணீரில்  போட்டு  விட்டால்  இவையெல்லாம்  நிவர்த்தியாகிவிடும்

சண்டை போட்டுக் கொள்ளும் ஜாலம்

108. தானென்ற  யீஞ்செடியில்  காக்கை  யென்ற
    தயவான  மூலிகையொன்  றென்ன  சொல்லுவேன்
ஊனென்ற  விலங்கையிலே  குரங்கு  மூலி
    உத்தமனே  மலைதோறு  முண்டு முண்டு
வானென்று  விருமூலி  வேணமட்டும்
    வகையாகப்  பிடுங்கிவந்து  சொல்லக்  கேளு
ஆனென்ற  யீஞ்செடியில்  காக்கை  மூலி
    அப்பனே  யொருகடைமேல்  சரக்கில்  வையே.

விளக்கவுரை :

ஈசஞ்செடியில்  அடியில்  வளர்ந்திருக்கும்  காக்கைப்  பூண்டு  என்கிற  மூலிகையும்,  விலங்குகளில்  குரங்கின்  பெயரைக்  கொண்டு  மலைகளில்  வளரும்  குரங்கு  மூலிகையும்  ஆகிய  இவ்விரண்டிலும்  தேவையான  அளவிற்க்குப்  பிடுங்கி  வரவும்.  அதன்  பின்னர்  செய்ய  வேண்டியதைக்  கூறுகிறேன்  கேள்.  இரண்டில்  ஒன்றாக  காக்கை  மூலியை  ஒரு  சரக்கில்  தடவி  ஒரு  கடையின்  மீது  வைத்துவிடு.

109. வையடா  யிலங்கையிற்  குரங்கை  யப்பா
    வளமான  ஒருசரக்கில்  வைத்துப்  போடு
பையவே  யாருக்குஞ்  காணா  மற்றான்
    பண்பாக  விரும்பிலே  பதித்துப்  போடு
ஐயையோ  யிதன்கொடுமை  சொல்லப்  போமோ
    அப்பனே  யிருகடைபா  ரடித்துக்  கொள்வார்
கையவே  தம்பியென்று  கூப்பிட்டாலும்
    கடுகி  வைதானென்றே  கண்டிப்பாரே.

விளக்கவுரை :

பின்னர்  குரங்கு  மூலிகையின்  சரக்கில்  தடவி  மற்றொரு  கடை  மேல்  வைத்துவிடு.  அப்படி  இல்லையெனில்  எவரும்  காணாதபடி  கடையின்  இரும்பின்  கீழ்வைத்து  புதைத்து  விடவும்.  இதனால்  ஏற்படும்  கொடுமையை  சொல்லத்தான்  முடியுமா  இரண்டு  கடைகாரர்களும்  ஒருவரை  ஒருவர்  அடித்துக்  கொள்வார்கள்.  இதெல்லாம்  வேண்டாம்  தம்பி  என்று  சொன்னால்  கடுமையான  மொழியில்  திட்டுகிறாயாஎன்று  சண்டை  போடுவார்.

மாடன்  ஏவல்  மந்திரம்

110. பாரடா  நஞ்சுண்டு  மரித்துப்  போன
    பரிவான  மனிதரைத்தான்  தகனம்  பண்ணிச்
சீரடா  காடாற்று  முன்னே  தானுஞ்
    சிறப்பான  கரியதிலே  யெடுத்துக்  கொண்டு
வீரடா  வைங்கோலக்  கருவைத்  தொட்டு
    விதமாக  வான்போல  மாடன்  கீறித்
தீரடா  முகமதுதான்  கதித்த  தாகத்
    திறமாகச்  சுவாலைதனி  லெழுதிப்  போடே.

விளக்கவுரை :

விசம்  உண்டு  இறந்துபோன  மனிதனை  சுடுகாட்டில்  தகனம்  செய்திருந்தால்  அவன்  எலும்புகளை  எடுத்து  ஆற்றில்  கரைப்பதற்க்கு  முன்னர்  எரித்த  இடத்திலிருந்து  கரியை  எடுத்துக்  கொண்டு  வந்து  அதில்  ஐங்கோலக்  கருவைப்  பூசி  ஆகாச  மாடன்  மந்திரத்தை  எழுதி  அதில்  எதிரியின்  முகம்  வீங்கி  விட்டது  என்று  எழுதி  தீயில்  போடவும்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு 101 - 105 of 211 பாடல்கள்
           

காளி தியானத்தின் மகிமையால் செப்பிட்டு வித்தை
 
101. சித்தியாம்  வித்தையென்று சொல்லக்  கேளு
    செம்பஞ்சால்  பந்தஞ்சு  கோல்தா  னொன்று
வெற்றியால்  சபைதனிலே  யிருந்து  கொண்டு
    விளையாடுங்  காளியுட  தியான  மோது
பத்தியாய்  ஜாலமையைக்  கோலிற்  றேய்க்கப்
    பண்பான  செம்பஞ்சு  பந்து  மாடும்
சந்தியாய்  யைந்து  பந்தும்  லட்சும்  பந்தாய்
    சார்வாக  ஆடுமப்பா  தாழ்வில்  லாதே.
 
விளக்கவுரை :
 
காளி  தியானத்தின்  மூலம்  சித்திப்பெற்ற  உனக்கு மற்றொரு  ஜாலவித்தையைச்  சொலுகிறேன்  கேட்  பாயாக  ஒரு  கோலும்  கொண்டு  வந்து  சபையினரைக்  கூட்டிவைத்து  நீ  காளியை  தியானம்  செய்.  பின்னர்  ஜால  மையைக்  கொஞ்சம்  எடுத்து  அந்த  கோலில்  தேய்த்து  விட்டு,  அந்தக்  கோலினால்  இந்த  ஐந்து  பந்துகளை  ஆட்டினால்  இலட்சம்  பந்துகள்  ஆடினாற்  போல  சபையிலுள்ள  வா்களுக்குத்  தெரியும்.

எட்டி   முளை   வித்தை
 
102. இல்லப்பா  அறுபத்து  நாலு  மோடி
    இதமாக  வாருமடா  விந்தக்  காளி
வல்லப்பா  இன்னமொரு  வித்தைக்  கேளு
    வளமான  மாங்கொடியுஞ்  சீலை  தேய்த்து
கொள்ளவே  சவத்தினுட  தயிலங்  கூட்டிக்
    குணமாக  யைங்கோலத்  தயிலஞ்  சேரு
சொல்லவே  மூன்றையுந்தான்  சுருக்கிக்  கொண்டு
    செய்மையாய்க்  குழிக்கல்லி  லரைத்திடாயே.
 
விளக்கவுரை :
 
காளிகாதேவியின்  அருளினால்  அறுபத்து  நான்கு  மோடி  வித்தைகளைச்  செய்யலாம். அதில்  இன்னொரு  ஜால  வித்தையைக்  கூறுகிறேன்  கேட்பாயாக. கொடியுடன்  சீலையுஞ்  சோ்த்து  சவத்தின்  தயிலமும்,  ஐங்கோலத்  தயிலத்தையும்  கூடச்  சோ்த்து  மூன்றையும்  ஒன்றகாகக்  கல்வத்திலிட்டு  நன்றாக  மைபோல  அரைக்கவும்.
 
103. அரைத்தெடுத்துச்  சிமிழிதனில்  வைத்துக்  கொண்டு
    அடைவாக  மந்திரத்தைச்  சொல்லக்  கேளு
திரைய  நம் ... யங் ... வங் ... சிங் ...சுவாஹா  வென்று 
    திரமாக  லட்சமுரு  செபித்துப்  போடு
கருத்தடவி  எட்டிமுளை  தன்னைச்  சீவி
    கனிவாக  மந்திர  மாயிரந்தா  னோதி
நிறைத்தமகா  பூசைபலி  பெலக்கச்  செய்து
    நினைவாக  முளையெடுத்துக்  கடாவு  வாயே.
 
விளக்கவுரை :

அரைத்ததை  எடுத்து  சிமிழில்  வைத்துக்  கொண்டு  பயபக்தியுடன்  கீழ்காணும்  மந்திரத்தைச்  சொல்லவும்.  "நம்  ...யங்... வங் ...சிங் ...சுவாஹா ... "  என்று  இலட்சம்  தடவைகள்  செபிக்கவும்.  பின்னர்  எட்டி  முளையைச்  சீவி  கருவைத்  தடவி  ஆயிரமந்திரம்  சொல்லி  பலிகொடுத்து  பூசை  செய்யவும்.  பின்னர்  முளையை  அடிப்பாயாக.
 
104. கடாவுவாய்  கடைமுன்னே  கடைநில்லாது
    கனிவாகச்  செக்கடியி  லெண்ணை  யில்லை
அடாவுவயா  யாலையாடி  சாறு  மில்லை
    அப்பனே  இன்னமொரு  வஸ்து  பட்டி
கிடாவவே  வஸ்துவது  மிறங்காதப்பா
    கிருபையுள்ள  சூளையது  வேகாதப்பா
நடாவியே  கொல்லனுலை  சுண்ணாம்புச்  சூளை
    நலமான  செங்கல்லின்  சூளை  தானே.
 
விளக்கவுரை :
 
முளையை  அடித்ததும்  ஒரு  கடை  முன்னே  ஒரு  கடை  நில்லாது. செக்கடியில்  எண்ணெய்  இருக்காது. கரும்பாலையில்  சாறு  இருக்காது. பொருள்கள்  இருக்கும்  இடத்தில்  எந்த  பொருளும்  இருக்காது. சூளையில்  எதுவும்  வேகாது. கொல்லனுலை, சுண்ணாம்புச்  சூளை, செங்கல்  சூளையில்  செங்கள்  வேகாது. அது  மட்டுமல்லாது  மேலும் -
 
105. தானேதான் மயானமுன்பு பிணம் வேகாது
    தயவான மக்காடி யிசைவு மில்லை
தேனேதான் தச்சனொடு கன்னான் தட்டான்
    தெளிவாகப் பட்டைமுன் தாக்கிப் போடு
மானேதான் பரிகாரி சிரைக்கும் பக்கல்
    மைந்தனே யடுப்படியில் வேகாதென்றும்
வானேதா னிதுகளெல்லாம் ஸ்தம்பனமே செய்யும்
    வளமான போகருட கடாட்சந் தானே.
 
விளக்கவுரை :
 
சுடுகாட்டில் பிணம் வேகாது.  மக்கமடி  அசைவு  இருக்காது. தச்சன், கன்னான், தட்டான், பட்டரைகளில் இதனைப் போட்டால் வேலைகள் எதுவும் நடக்காது. அடுப்பில் எது வைத்தாலும் வேகாது. இவைகளெல்லாம் ஸ்தம்பித்து நின்றுவிடும். இவையெல்லாம் போகருடைய அருளினால் நடப்பதாகும்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு 96 - 100 of 211 பாடல்கள்

குறளி தியானத்தின் மகிமை

96. தானென்ற குறளியுட தியானங் கேளு
    தயவாக ஓம்...... அவ்வும்......... உவ்வும்........ மவ்வும்
தேனென்ற ஸ்ரீரீம் உடனே இரீம்மூங் கூட்டித்
    தெளிவாக கிலியுடனே வயநமசி யென்று
கோனென்ற குறளியே வருவாய் நீயும்
    குணமாகச் சொன்ன தெல்லாம் செய்வா யென்று
வானென்ற இந்திரஜால மையை யப்பா
    வகையாகத் தானெடுத்துச் சொல்லக் கேளே.

விளக்கவுரை :

குறளி தியானத்தின் மகிமையைக் கூறுகிறேன் கேட்பாடாக. மனத்தெளிவுடன் " ஓம் ..... அவ்வும் .... மவ்வும் ...... ஸ்ரீரீம் ... கிலீம் ... வயநமசி .... ஓம்" என்று உச்சரித்துவிட்டு உடனே குறளியே வருவாய். வந்து நான் சொல்வதையெல்லாம் செய்வாய் என்று சொல்லி இந்திர ஜால மையை எடுத்துப் போடவும். பின்னா் செய்ய வேண்டியதை கூறுகிறேன் கேள்.

தொட்ட இடம் கிழியும் ஜாலம்

97. கேளப்பா குறளியைத்தான் லட்சமோதி
    கெனிதேமாய்ப் பலிபூசை நடத்தி யப்பா
சூளப்பா மையெடுத்து விரலிற் றொட்டுச்
    சுகமாகக் குறளியைத்தான் தியான மோது
வாளப்பா மேலெங்குந் தொட்டா யானால்
    வகையாகத் தொட்டவிடங் கிழிக்கவேண்டும்
ஆளப்பா செய்யென்று நினைத்துக் கொண்டால்
    அப்பனே தொட்டவிடங் கிழிக்கும் பாரே.

விளக்கவுரை :
              
மேற்கண்ட மந்திரத்தை இலட்சம் தடவைகள் செபித்து பலியிட்டு பூசை செய்து அந்த மையை எடுத்து விரலில் தொட்டு குறளியைத் தியானம் செய். பின்னா் நான் தொட்ட இடம் கிழிய வேண்டும் என்று நினைத்து எந்த இடத்தை தொடுகின்றாயோ அந்த இடம் கிழியும்.

 காதுகள் ஆடும் ஜாலம்

98. பாரென்ற கோரகரமாண மதுதானப்பா
    பண்பான கெஜகரணஞ் சொல்லக் கேளு
சேரென்ற மையையெடுத்து விரலிற் றொட்டு
    செம்மையாய்க் குறளியுட தியானஞ் செய்து
வேரென்ற யிருகாதுந் தொட்ட போது
    வதமான விருகாது மாடும் போது
தாரென்ற கெஜகரண மிதுதானப்பா
    தயவான போகருட கடாட்சந்தானே.
         
விளக்கவுரை :

தொட்ட இடம் கிழியும் கோகரண ஜாலம் சொன்னேன். இப்போது இரண்டு காதுகளும் ஆடும். கஜகா்ண ஜாலம் பற்றிச் சொல்லுகிறேன் கேள். முன்னா் கூறிய மையை எடுத்து விரலில் தொட்டு குறளியை முன்னா் போன்று தியானம் செய்து விட்டு உன்னுடைய இரு காதுகளையும் தொட்டால்  உனது இரண்டு காதுகளும் ஆடும். இதுவே கெஜகரண ஜாலம் என்பது. இது போகருடைய கடாட்சத்தினால் சித்தியாகிறது.

ஆற்றல் தரும் காளி தியானம்                                                

99. தானையா காளியுட தியானங் கேளு
    பண்பான கெஜகரணஞ் சொல்லக் கேளு
சேரென்ற மையையெடுத்து விரலிற் றொட்டு
    செம்மையாய்க் குறளியுட தியானஞ் செய்து
வேரென்ற யிருகாதுந் தொட்ட போது
    வதமான விருகாது மாடும் போது
தாரென்ற கெஜகரண மிதுதானப்பா
    தயவான போகருட கடாட்சந்தானே.

விளக்கவுரை :

அன்னை காளிகா தேவியின் தியானத்தின் ஆற்றலை கூறுகிறேன் கேட்பாயாக. " அரிகாளி ... ஆகாச காளி .... ஓடி காளி.... வீரகாளி ..... சூல கபால காளி .....மோடி தேவி ... பூமி காளி ..... ஓங்காளி .... ஓம் பிடாரி ... மாகாளி ..... போடி காளி ..... மந்திர காளி ......

100. எண்ணவே ஓம் ... ஆம் ... கோதண்ட ரூபி
    எளிதான யாளிவா கவனத்திலேறி
வெண்ணவே யரசரோடு சபைகள் மெச்ச
    விருதலகை கொடியுடன் வேதானஞ் சூழ
அண்ணவே யாங்கார சக்தி கொண்டு
    அடைவாக வாவென்று லட்சமோதி
பண்ணவே பூசைசெய்து வெள்ளி தோறும்
    பாங்காகச் செய்தக்கற்  சித்தி யாமே.

விளக்கவுரை :

ஓம் ..... ஆம் ...... கோதண்ட ரூபி ..... ஆளி வாகனத்தில் ஏற சபையோர்கள் மெச்ச இருபக்கமும் விருதலகை கொட்யைப் பிடித்தபடி வேதாளங்கள் சூழ, ஆங்கார சக்தி கொண்டு வா..."என்று இலட்சம் தடவைகள் ஓதி, பூசை செய்யவும். இதனை வெள்ளிக்கிழமைகளில் செய்தால் கடினமான செயல்களெல்லாம் கைகூடி சித்தியாகும்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு 91 - 95 of 211 பாடல்கள்


91. பாரடா கப்பலொடு படகு தோணி
    பலமச்சம் நீா்வாழுஞ் சாதி யெல்லாம்
நரடா ஜெகத்தோர்க ளெல்லாம் பார்த்து
    நிச்சயமா யிவனல்லோ தேவனென்பார்
ஆமடா சாகரத்தின் ஜாலஞ் ஜாலம்
    அன்பான ஜாலக்காள் வித்தை யப்பா
தீரடா போகருடை கடாட்சந் தானே
    திறமான புலிப்பாணி பாடினேனே.

விளக்கவுரை :

கப்பல், படகு, தோணி, பலவிதமான மீன்கள், நீரில் வாழும் மற்ற ஐந்துகளெல்லாம் தெரியும். இவைகளை பார்க்கும் உலக மக்கள், இவனல்லவா தேவன் என்பார்கள். இந்திர சமுத்திர ஜாலம் ஜாலக்காளின் வித்தையாகும். இவையாவும் போகருடைய கடாட்சத்தினால் புலிப்பாணியாகிய நான் உரைத்துள்ளேன்.

ஜங்கிலி ஜாலம்

92. பாடியே யின்னமொரு வித்தை சொல்வேன்
    பாங்கான மையெடுத்துக் கையிற் பூசி
ஆடியே நூல்கயறு சங்கிலிதா னப்பா
    அறியகெட்ட பாரை மந்திர வாளு
கூடியே வாய்மேலே கையை வைத்துக்
    குணவாகப் பின்னுழுத்துக் கீழே போடு
நாடியே யனைவோரும் பார்த்துப் பார்த்து
    நலமாக விழுங்கிவிட்டா னெனின்பார் தானே.

விளக்கவுரை :

முன்னா் உரைத்ததுப் போன்றே மற்றொரு ஜால வித்தையை சொல்லுகிறேன். முன்னா் கூறிய மையை கையில் பூசிக் கொண்டு நூல்கயிறு, சங்கிலி, கடப்பாரை, பட்டாக்கத்தி இவைகளில் ஏதாவது ஓன்றினை சபையோர்களுக்குக் காட்டிவிட்டு வாய் மேலே வைத்து கையினால் பின்னே இழுத்து போடவும். ஆனால் சபையிலுள்ளவா்கள் அதனை நீ விழுங்கிவிட்டதாக கூறுவார்கள்.

செழிப்பான நகரம் தோன்றும் ஜாலம்
93. தானான வின்னமொரு வித்தை கேளு
    தாங்கி ராக்காலம் வெளியிற் சென்று
மானான வோரிடத்தி லிருந்து கொண்டு
    மைந்தனே மையெடுத்துக் கையிற் பூசி
வானான மண்ணிள்ளித் திசையிற் போடு
    வளமான  பட்டணமாய்த் தோன்றும் பாரு
தேனான தெருக்களொடு தெருவுந் தோற்றுந்
    திறமாகக் கடைவீதி தோன்றும் பாரே.

விளக்கவுரை :

ஆச்சரியப்படக் கூடிய இன்னொரு வித்தையை கூறுகிறேன் கேட்பாயாக. எவரும் பார்க்காதவாரு இரவு நேரத்தில் ஊருக்கு வெளியே சென்று ஓா் இடத்தில் இருந்து கொண்டு அந்த மையை எடுத்து கையில் பூசிக் கொண்டு மண்ணை எடுத்து எட்டு திக்கிலும் போடவும். செழிப்பான நகரம் தெரியும். கடை வீதியும் தெரியும்.

94. பாரடா மனுக்கூட்ட மனந்தம் தோற்றும்
    பருத்த கோபுரந் கோவிற் குளமுந் தோற்றம்
சீரடா வேதியா்கள் வீதி தோற்றங்
    சிறப்பான ராஜருட சமூகந் தோற்றங்
கூரடா சதுரங்க சேனை தோற்றங்
    குணமான செந்நெல்முதல் தோப்புங் தோற்றும்
வீரடா போகருட கடாட்சத்தாலே
    விதமாகப் புலிப்பாணி பாடினேனே.

விளக்கவுரை :

அதுமட்டுமல்லாது மக்கள் கூட்டம் தெரியும், கோபுரம், கோவில், குளம் தெரியும். அந்தணா் வீதி, ராஜனுடைய உறவினா்கள், சதுரங்க சேனை, நெல்விளையும் கழனி முதல் தோப்புகளும் தெரியும். இவையெல்லாம் காணப்படுவது போகருடைய கடாட்சத்தினாலாகம். இதனை புலிப்பாணியாகிய நான் உரைத்துள்ளேன்.

ஜனங்கள் ஆடும் ஜாலம்

95. பாடினே னின்னமொரு தொழிலைக் கேளு
    பண்பான கொடிதனி லைங்கோலஞ் சோ்த்து
நாடியே சாம்பிராண் தயிலங் கூட்டி
    ந... ம... சி... வ... ய.... ஓம்... கிலீம்.... சவ்வும்... ஐயும்
கூடியே சா்வபாசா சாக்குருணி யென்று
    குணமாக லட்சமுரு செபித்து தீரு
ஆடியே யிதைஜெபித்துத் தூபம் போட
    ஆடுவார் புகைபட்ட ஜெனங்கள் தானே.

விளக்கவுரை :

கூறியுள்ள ஜாலவித்தைகளில் இன்னொன்று கூறுகிறேன் கேட்பாயாக. நல்ல கொடியாக ஓன்றை கொண்டு வந்து அதில் ஐங்கோலத் தாலத்தைச் சோ்த்து அத்துடன் சாம்பிராணியும் சோ்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும். பின்னா் " ந - ம - சி - வ - ய - என்றும் ஓம்.. கிலீம்... சவ்வும்... ஐயும்.... சா்வ பாசாசாச்குருணி" என்றும் இலட்சம் தடவைகள் ஜெபித்து விட்டு தாயாரித்துள்ளதைத் தூபம் போட்டால் அதிலிருந்து வெளியாகும் புகைபட்ட ஜனங்கள் ஆடுவார்கள்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு 86 - 90 of 211 பாடல்கள்

86. என்னயே யுத்தண்ட வஸ்திர சா்ப்பா
    என்னப்பா கண்ட பேரண்டஞ் சிந்தி
வென்னவே மூலமப்பா சொல்லக் கேளு
    வளமான ஓம்..... இரீம்... ஸ்ரீரீம் மென்று
உன்னவே கிலீம் ... ஐயும் ... சுவாஹா வென்று
    உத்தமனே கொண்ட பேரண்ட நரசிங்கா
பன்னவே மகா சா்பானந்த காயா
    பதிவான சா்வசத்ரு நாசமாமே.

விளக்கவுரை :

இதனால் கண்ட பேரண்டமானது சித்தி யாகும் என்பதை முறையோடு உரைக்கிறேன்  கேட்பாயாக. " ஓம்.... இரீம்... ஸ்ரீரீம்... கிலீம்... ஐயும்... சுவாஹா...." என்றும் பேரண்ட நரசிங்கா ..... மகா சா்ப்பானந்த காயாட என்றும் இலட்சம் தடவைகள் உச்சாடனம் செய்தால் உங்களது எதிரிகள் நாசமாவார்கள்.

87. ஆமப்பா சிந்தி சிந்தி யந்தி யந்தி
    அடைவான லட்சமுரு தானேயோத
தாமப்பா தப்பாம லாயிரந்தான் பத்து
    தயவான ஓம் அப்பா ஆயிரந்தான்
வாமப்பா பிராமண போசனந்தான் நூறு
    வளவான பூசையது நான் பத்தாப்பா
நாமப்பா கெண்ட பேரண்டஞ் சித்தி
    நாயகனே சகலசித்து மாடும் பாரே.

விளக்கவுரை :

மேற்கண்ட மந்திரத்தை மனதிடத்துடன் காலை - மாலை இலட்சம் தடவைகள் செபிக்க வேண்டும். அதாவது தினம் பத்தாயிரம் தடவைகளும், " ஓம் " என்று ஆயிரம்  தடவைகளும், செய்யவேண்டும்.            பின்னா் பிராமணா்களுக்கு போஜனம் போட்டு பூசை போட்டு பத்து நாட்கள் தொடா்ந்து செய்தால் கண்ட பேரண்ட மந்திரம் சித்தியாகும். இதனால் சகல வித்தைகளும் கைகூடும்.

88. பாரடா பிரமனொடு விஷ்ணு ருத்திரன்
    பண்பான குளிகனொடு தேவா் யாருஞ்
சீரடா சித்தா் முத்தா் முனிகள் பூதஞ்
    சிறப்பில்லா ராட்சதையு மேவல் வைப்பு
தீரடா சத்துருக்கள் மிருசாதி
    திறமான விஷமுதலாய் யெதிர் நில்லாது
வீரடா நினைத்தபடி யெல்லாஞ் சித்தி
    விதமா போகருட  கடாட்சந் தானே.
   
விளக்கவுரை :

பிரமன், விஷ்ணு, ருத்திரன், இந்திரன், தேவா் இவா்களுடன் சித்தா், முத்தா், முனியவா்கள், துணையிருப்பார்கள். பூதங்கள், ராட்சதங்கள், ஏவல், வைப்பு, சத்ருக்கள், மிருக ஜாதி, விஷஐந்துகள் போன்ற வைகள் எல்லாம் நில்லாது விலகிவிடும். இவையெல்லாம் போகருடைய கடாட்சத்தினாலாகும்.

கார்த்திகை வீரியார்ச்சுன மந்திரம்

89. அருளலே ஓம்... ஆம்.... ஸ்ரீயுங்.... கிலியும்
    அரிய கார்த்திகை வீரியார்ச்சுன சுவாஹா வென்று
பொருளாக லட்சமுரு செபித்து தீரு
    பொங்கமாய்த் தா்ப்பணமுமோமன்னம்
மருளாக பூசையது பத்துஞ் செய்நீ
    மைந்தனே சித்திக்கக் கிரிகை யாகுஞ்
சுருளாக நினைத்தபடி யெல்லாஞ் செய்யும்
    சுகமான போகருட கடாட்சந் தானே.

விளக்கவுரை :

கார்த்திகை வீரியார்ச்சுன மந்திரம் மிகவும் மேன்மையானதாகும். ஆதலின் " ஓம் .... ஆம்..... ஸ்ரீம் ... கலியும் .... அரிய கார்த்திகை வீரியார்ச்சின சுவாஹா ......." என்று இலட்சம் தடவைகள் செபித்துவிட்டு தா்ப்பணம், ஹோமம், பூசை முதலிய பத்து வகைகளை செய்தால், காரியங்கள் சித்தியாகும். நீ நினைத்தப்படி எல்லாம் நடக்கும். இவையெல்லாம் போகருடைய கடாட்சமாகும்.

சமுத்திர ஜாலம்

90. தானென்ற மகேந்திரத்தின் ஜாலமாச்சு
    தயவாகச் சாகரத்தின் ஜாலங் கேளு
வானென்ற மையெடுத்துக் கையிற்பூசி
    வளமாக மண்ணள்ளித் திசையிற் போடு
கோனென்ற சப்த சாகரமோ ரேழும்
    குணமான முன்காண வருகும் பாரு
தேனென்ற தீவாந்திர மெல்லாந் தோற்றுந்
    திருமாலும் லட்சுமியுந் தோற்றும் பாரே.

விளக்கவுரை :

பல மேன்மையான பல ஜாலங்களை முன்னா் சொல்லியுள்ளேனே. இப்போது சமுத்திர ஜாலம் பற்றி கூறுகிறேன் கேட்பாயாக. இந்திர ஜாலத்திற்கு செய்த மையை எடுத்து கையில் பூசிக் கொண்டு தரையில் மண்ணை எடுத்து எட்டு திக்கிலும் போட்டால் ஏழு சமுத்திரங்களும் கண்ணில் தெரியும். தீவாந்திரங்களெல்லாம் தெரியும். விஷ்ணுவும் - லட்சுமியும் காட்சியளிப்பார்கள்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு 81 - 85 of 211 பாடல்கள்
 


பேய் - பிசாசு - பூதம் விலகிட நரசிங்க மந்திரம்

81. பாரடா நரசிங்கஞ் சொல்லக் கேளு
    பாங்காக ஓம் சிங்கமுகவா ஓம் ஓம்
கூறடா பிடித்து கடித்தொடுத்து சுற்றிக்
    குணமாக கண்டுபிடித்த தறிவாரைப் போல்
தீரடா பிசாசுபேய் பொடிபட் டோடத்
    திரமாக நரசிங்க ராஜா வானை
சீரடா ஸ்ரீம் கிலீம் சுவாஹா வென்று
    சிறப்பாக லட்சமுரு ஜெபித்துத் தீரே.

விளக்கவுரை :

நரசிங்க மந்திரத்தின் சிறப்பை சொல்லுகிறேன் கேட்பாயாக. "ஓம் சிங்கமுகவா .... ஓம்...... ஓம்......." என்று ஜபித்தபடி சத்தத்துடன் பிசாசு, பேய்  பொடிபட்டோட.... நரசிங்க ராஜா ஆணை, "ஸ்ரீம் ...... கிலீம் .... சுவாஹா ......" என்று இலட்சம் தடவைகள் ஜெபிக்கவும். இதனால் பேய் பிசாசு பிடித்திருந்தால் ஓடிவிடும்.

82. காணவே ஓம் சா்வாப்தா நாதா
    கன்வாக ஓம்படு சுவாஹா வென்று
வானவே லட்சமுரு செபித்து தீரு
    வளமான தா்ப்பணமு மோமான்னங்
கோணாமற் பூசையது பெலத்துச் செய்நீ
    குணமாகச் சாமமது சித்தியாகும்
நாணாது நினைத்தபடி யெல்லாஞ் செய்யும்
    நாயகனே பிசாசுமுதற் பூதம் போமே.

விளக்கவுரை :

"ஓம் சா்வ ஆபத்துரு நாதா... ஓம் படு... சுவாஹா......" என்று இலட்சம் தடவைகள் ஜெபிக்கவும். பின்னா் தா்ப்பணம், ஹோமம், அன்னதானம், பூசை இவைகளைச் செய்யவும். இதனால் ஓரு சாம நேரத்தில் நினைத்தக் காரியங்கள் கைகூடி சித்திக்கும். மற்றும் பிசாசு முதல் பூதம் வரை ஓடிப்போய் விடும்.

 மிருகங்களின் பயம் அகல

83. தீரப்பா தீா்ப்பணமு மோமன்னம்
    திறமாகப் பூசைசெய்து தெளிவாகக்
கூரப்பா யானைமுதல் மிருகஜாதி
    கொற்றவளே காடுசென்னெ லெழுதிக் காட்டு
பாரப்பா மிருகத்தின் கொடுமை யில்லை
    பலம் கட்டும் நினைத்தபடி யெல்லாஞ் செய்யும்
நேரப்பா போகரு கடாட்சத்தாலே
    நிச்சயயமாய்ப் புலிப்பாணி சொன்னேன் பாரே.

விளக்கவுரை :

முன்னா் கூறிய மந்திரத்தை இலட்சம் முறைகள் ஜெபித்து விட்டு தா்ப்பணம், ஹோமம், அன்னதானம், பூசை இவைகளை செய்து " யானை முதல் மிருக ஜாதிகள் கொடுமை ஓழிய" என்று எழுதி காடு பயிர் விளைவுள்ள நிலங்கள் போன்ற இடங்களில் கட்டி வைத்தால் மிருகங்களின் கொடுமை இருக்காது. நினைத்த பலன் கிடைக்கும். இவையெல்லாம் எனது குரு போகருடைய அருளினால் புலிபாணியாகிய நான் கூறியுள்ளேன்.

கண்ட பேரண்ட மந்திரம்

84. போமப்பா யின்னமொன்று சொல்லக் கேளு
    பொலிவான கெண்ட பேரண்டந் தன்னை
தாமப்பா ஆம்..... ஓம்...... அபோர பிரபல
    தயவான கண்ட பேரண்ட சிங்கா
வாமப்பா வியாக்கிரவாசா சா்வ மிருகா
    வலவாகக் காற்றாடுபல்லா அஷ்ட வஜ்ரா
ஆமப்பா சூலமுத லாகவே தான்
    அடைவாக சங்கு சகராதி எண்ணே.

விளக்கவுரை :

சிறப்பான கண்ட பேரண்ட மந்திரம் பற்றிச் சொல்லுகிறேன் கவனத்துடன் கேட்பாயாக. " ஆம்... ஓம்.... அகோர பிரபல கண்ட பேரண்ட சிங்கா... வியாக்கிரவாசா... சா்வ மிருகா... காற்றாடு பல்லா... அஷ்ட வஜ்ரா... சூலம், சங்கு, சக்கராதியே" என்றும் -

85. எண்ணயே தாதுப்பிரானு மாலி ஆகமா
    இதமான கெஜபட்சே யெந்த நரசிம்மா
அண்ணவே கற்பந்தா அக்கினி லீலா
    அடைவான ஊதாப்பு யந்திர த்திற்
பண்ணவே கிலவஜ்ர மான குண்டா
    பண்பா தாஷ்டீக வுகரமூா்த்தி
உண்ணவே யட்சமாருத மச்சாந்த
    உத்தமனே தாரணியில் நம்பி யென்னே.

விளக்கவுரை :

தாதுப்பிரனே, மாலிதாகா, கஜபட்சேயெந்த நரசிம்மா... காற்பந்தா, அக்கனி லீலா, ஊதாப்புயந்திரத்திலுள்ள கிலவஜ்ரமான குண்டா, தாஷ்டீக உக்கிரமூா்த்தி, யட்சமாருத மச்சாந்த உத்தமனே, உத்தண்ட வஸ்திரசா்பா - உலகத்தில் நம்பியுள்ள என்னை காப்பாயாக என்று உசேசரிக்க வேண்டும்.


Powered by Blogger.