சித்த வைத்திய அகராதி மூலிகைச் சரக்குகள் அறிமுகம்
சிவபெருமானும் பதினெண் சித்தர்களும் திருவாய் மலர்ந்தருளிய தமிழ்ச் சித்தர் நூல்களிலுள்ள பச்சிலை மூலிகை சரக்குகளின் பொருள்களடங்கிய தமிழ்ச் சித்த வைத்திய அகராதி.
உலகில் மக்கள் முதற் கட்டோன்றிய நிலம் இப்பொழுது இந்துமாக்கடல் மேவியிருக்கும் தென் மதுரையைத் தலைநகராய்ப் பெற்றிருந்த தமிழக நாப்பண்ணுள்ளதெனச் சங்க நூற்களினிடையும் ஆங்கிலப் புலவர் ஏக்கல் கூற்றாலும் நன்கு விளங்குகின்றது. பதிற்றுப்பத்து 2-ம் பதிகத்தில் 'இமிழ் கடல் வேலித் தமிழகம் விளங்க” என்றும் நாவுக்கரசரால் 'நாவலம் பெருந்தீவில் என்றும் கூறப்படுகின்றன. நாவலந் தீவகத்துள்ள தமிழகத்தில் தெற்கே குமரியாற்றுக்கும் பஃறுளி ஆற்றுக்கும் இடையில் 700 காதம் (7000 மைல்) பரப்புள்ள பூப்பகுதியில் ஏழ்தெங்க நாடு முதலிய 49 நாடுகளிருந்தன. சிவனார் அம்மையாருக்கும் நந்தியாருக்கும் 700000-ம் பாட்டுகளில் வைத்தியம், வாதம், கற்பம், வானூல், மந்திரம், யோகம், ஞானம், என்ற ஏழுபொருள்களையும் கூறியருளினார். திருமூலர் வைத்தியம் 600-ல் 'தனஞ்செயவீசன் தாய்க் கன்று சொன்னது, கனைந்தேழு லட்சங் கரைகண்டு பார்த்தேனே” என்று கூறியுள்ளார். அவற்றை,
'நவையறக் கேட்ட நந்திமாணவர்
ஆம்திருமூலர் அகத்தியர் சட்டை
நாதர் காலாங்கி நாதர் போகர்
ஒதுகொங்கணர் உரை கருவூரார்
தேரையார் மச்சர் திகழ்புண்ணாக்கர்
கோரு தன்வந்திரி கோரக்கர் யூகி
இடைக்காடர் ரோமர் இசைக்கும் புசுண்டர்
முடையில் புலத்தியர்” ஆகிய சித்தர்களும்,
அவர் மாணவர்களும் இலக்கக் கணக்கில் நூல்கள் செய்திருக்கின்றனர். மூலிகைகள், சரக்குவகைகள் 1008, பாடாணங்கள் 64, உப்பு வகைகள் 25, உலோகங்கள் 9, தாதுப் பொருட்கள், உபரசச் சரக்குகள் 120, அவற்றின் சத்துக்கள், ஆகிய வைத்தியத்துக்கு வேண்டிய பொருள்களின் பேர்களும் முப்பூவின் பரிடைப் பேர்களும் மா மூலிகைகளின் பேர்களும் நன்கு தெரிந்தாலொழிய உயர்ந்த மருந்துகள் செய்ய நமக்கு முடியாது.
உலகில் இயங்காத்தணைப் பொருட்கள் தாவரம் இருபது நூறாயிரம் உள்ளன. அவை முற்றும் கூறும் நூல்கள் ஒரு மொழியிலுமில்லை. ஒவ்வொரு மூலிகைகளின் வடிவம், நிறம், மணம், இலை, பூ, காய், பழம், குணம் முதலியவற்றை நன்கு விளக்கக்கூடிய நூல் ஆங்கிலத்தில் இருந்து வருவது போலத் தமிழிலும் இருக்க வேண்டுமென்பது இன்றியமையாதது. சித்தர்கள் செய்திருக்கும் நிகண்டுகளிலுள்ள பெயர்களே அவ்வப் பொருள்களின் குணங்களை நன்கு விளக்குகின்றன.
நந்தியங் கடவுள் இன்றைக்கு 16000 - ம் ஆண்டுகளுக்கு முன் துவக்கிய முதற்சங்கத்திலேயே இருந்தவர். ஆதலால் தமிழ்ச் சித்தர் முதற்கழக காலத்தும், இடைக்கழக காலத்தும், கடைக்கழக காலத்தும், பல நூல்கள் செய்திருக்கின்றனர். முதற்கழகம் 4440, ஆண்டும் இடைக்கழகம் 3850, ஆண்டும் கடைக்கழகம் 1850, ஆண்டும் இருந்தன. அவற்றின் இடைக்காலத்தில் சென்ற பல ஆண்டுகள் போக கடைக்கழகம் முடிவுற்று இன்றைக்கு ஏறக்குறைய 1800 ஆண்டுகளாகின்றன .உலோகங்களையும் பாடாணங்களையும் மருந்துகளுக்குப் பயன்படுத்தலுக்கு இந்தியாவில் தமிழ்ச் சித்த வைத்திய நூல்களே உலகிலுள்ள எல்லா நாட்டு வைத்தியர்களுக்கும் வழிகாட்டியாய் இருந்து வருகின்றன.
வடமொழித் தன்வந்திரியார் காலம் இன்றைக்கு 1500, ஆண்டுகளாகின்றன. சரகர் அவருக்கு முந்தினவர். கி.பி. முதல் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர். வுடமொழி அஷ்டாங்க இருதயம் கி.பி. 900-ல், சாரங்கதர சங்கிதை கி.பி. 1300-ல் பாவபிரகாசம் கி.பி. 1600-ல், தோன்றின. கிரிக் தேச வைத்திய நூல்கள் கி.மு. 900-ல் , ஆலோப்பாதி (எதிருறை) என்று ஆங்கில வைத்தியம் 1755-ல் ரோமர் மருத்துவம் கி.பி.200-ல், ஒமியோபாதி (ஒப்புறை) கி.பி.1753-ல் யுனானி மருத்துவம் கி.பி.600-ல், தோன்றின. வடமொழி வைத்திய பூர்வ நூல்களில் உலோகங்களின் நீறு, செந்தூரம், சுண்ணம் முதலியன கூறப்படவில்லை.
வைத்திய அகராதியில், 1. பொருளகராதி, 2. பேரகராதி, 3. குணவகராதி, 4. பொருள் வடிவகராதி, 5. தொகையகராதி, என ஐந்து தொகுப்புகளாக எழுதப் பட வேண்டும். இவ்வகராதியில் பொருளகராதி, தொகையகராதி என்ற இரண்டு பகுதிகள் அடங்கியிருக்கின்றன.